கிளோரினுக்கு மாற்று

மழை நீரோடு கலந்த சாக்கடை நீர் ஆங்காங்கே வடிந்துவருகிறது.  எலிக்காய்ச்சல் தொடங்கிப் பலவிதமான தொற்றுநோய்களைப் பரப்பும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை சாலை ஓரங்களில் இருந்தும், வீட்டுத் தண்ணீர் தொட்டிகளிலிருந்தும் முற்றிலும் நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வீட்டின் கழிவறை, தண்ணீர் தொட்டி, சாக்கடை நீர் கலந்த குடிநீர் ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்குப் பெரும்பாலோர் கையிலெடுக்கும் ஆயுதம் பிளீச்சிங் பவுடர். ஆனால், பிளீச்சிங் பவுடரைப் பரவலாகவும் அதிகப்படியாகவும் பயன்படுத்துவதும் ஆபத்து என்கிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அனந்து.

குளோரின் நல்லதா?

கால்சியம் ஹைப்போகுளோரைட்டின் திரவ, பவுடர் வடிவங்களே பிளீச் மற்றும் பிளீச்சிங் பவுடர். எந்த ஒரு வடிவத்திலும் குளோரினின் பயன்பாடு அதிகரிக்கும்போது சுவாசக் கோளாறுகள் அதிகரிக்கலாம்; உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படலாம்; தோலில் ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

குடிநீரில் அதிகப்படியான குளோரினைக் கலப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்குச் சாத்தியம் அதிகம். குளோரின் மற்றும் அது சார்ந்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதால், நோய்களை உண்டாக்கும் தீமை செய்யும் கிருமிகளுடன், நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய சில நுண்ணுயிர்களையும் (Microorganisms) சேர்த்து அழித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் பங்கு பூவுலகுக்கு அத்தியாவசியம். உலகில் உயிரினங்கள் உயிருடன் வாழ்வதற்கு, இந்த நுண்ணுயிர்களும் பல வகைகளில் ஆதாரமாக உள்ளன. நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைக்கவும் ஊட்டச்சத்துகளைப் பிரிக்கவும் உதவுவதிலிருந்து, உயிரற்ற உடல்களை மக்கவைத்து மறுசுழற்சி செய்வதுவரை இந்த நன்மை செய்யும் கிருமிகளின் பங்களிப்பு மகத்தானது.

செயல்திறன்மிக்க நுண்ணுயிர்கள்

நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் சேர்ந்த கலவையான செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசல் (Effective Microorganisms), சுருக்கமாக இ.எம். கரைசலைக் கொண்டு நோய்க்கிருமிகளால் மாசுபட்டுள்ள நீரை, நிலத்தைத் தூய்மைப்படுத்தலாம், சுற்றுப்புறச் சுகாதாரத்தையும் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

இ.எம். கரைசல் என்பது ஒரு புரோபயாட்டிக். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவில் இருக்கக்கூடிய, ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் மூன்று நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் கலவைதான் இ.எம். இந்தக் கரைசலில் இருப்பவை லாக்டோபாசிலி (தயிரில் பெருகுவது), ஈஸ்ட் (பிரெட்டை புளிக்க வைப்பது), போட்டோடிராஃபிக் நுண்ணுயிரி (ஊறுகாய், பாலாடைக் கட்டியில் சில நேரம் சேர்க்கப்படுவது) போன்றவைதான்.

பிளீச்சிங் பவுடருக்கு மாற்றாக இந்த இ.எம். கரைசலைப் பயன்படுத்தினால், சுற்றுப்புறமும் நீரும் சுத்தமாவது மட்டுமில்லாமல் நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் காப்பாற்றப்படும். தற்போது பிளீச்சிங் செய்வதற்கான தேவை அதிகம் இருக்கும் நிலையில், செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசல் போதுமான அளவுக்குக் கிடைக்குமா என்ற கேள்வி இயல்பாக எழும்.

ஒரு லிட்டர் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலை, 25 லிட்டர் மேம்படுத்தப்பட்ட கரைசலாகவும், பிறகு அந்த மேம்படுத்தப்பட்ட கரைசலில் ஒரு லிட்டரை 50 லிட்டர் நீர்த்த கரைசலாகவும் மாற்ற முடியும். இந்த நீர்த்த கரைசலையே பிளீச்சிங்குக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, ஒரு லிட்டர் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலைக்கொண்டு 1,250 லிட்டர் நீர்த்த கரைசலைப் பெற முடியும். இந்தியாவில் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலைத் தயாரிப்பவை கொல்கத்தாவின் மேப்பிள் ஆர்க்டெக் நிறுவனமும், ஆரோவில்லின் ஈக்கோ புரோவும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்கு இ.எம். கரைசலைப் பயன்படுத்தலாம். இந்தக் கரைசல் துர்நாற்றத்தைப் போக்குவதுடன், தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழித்து, நன்மை செய்யும் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கவும் செய்கிறது.

கடந்த 2005-ல் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் குளோரினுக்கு மாற்றாகச் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலைக்கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, தொற்றுநோய் பரவல் தடுக்கப்பட்டது. ஈ, கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, நீர், நிலம், மற்ற இயற்கை உயிர் சுழற்சிகள் ஊட்டம் பெற இ.எம். கரைசல் பெரிதும் உதவும். சுற்றுப்புறச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் இந்தக் கரைசல் உதவுவதைப் பயன்படுத்திய பிறகு உணர முடியும்.

தொடர்புக்கு: 09790900887

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *