கை, கால் செயலிழப்பு… மசூர் பருப்பு விபரீதங்கள்!

இந்தியாவில் ரேஷன் கடையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பல கோடிப் பேர். அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை, கோதுமை… என வழங்கப்படும் அத்தனைப் பொருள்களுமே அவர்களுக்கு வாழ்வாதாரம்!

அரிசி சுமாராக இருக்கலாம், கோதுமையில் தூசும் பதர்களும் நிறைந்திருக்கலாம். அத்தனையையும் களைந்துவிட்டு பயன்படுத்தத் தயாராகவே இருக்கிறார்கள் நம்மவர்கள். ஆனால், `இது வேண்டாம். இதனால் உடல்நலத்துக்குத் தீங்கு’ எனத் தடைசெய்யப்பட்ட ஓர் உணவுப் பொருள் திரும்பவும் அதே ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுவதுதான் இன்று பலரையும் பதறவைத்திருக்கிறது. அது, மசூர் பருப்பு!

மசூர் பருப்பு

சாமானியர்களுக்குக்கூட எல்லா உணவுப்பொருள்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை ரேஷன் கடைகள். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் தடைசெய்யப்பட மசூர் பருப்பை இப்போது, மீண்டும் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிட்டிருக்கிறது அரசு. இது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பீதியைத்தான் கிளப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது மசூர் பருப்பு. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையொட்டி மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு ஏற்பட்ட அந்த பாதிப்புகளுக்கு மசூர் பருப்புதான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்போது அதே பருப்பை மீண்டும் தமிழக அரசு கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. ‘குறைந்த விலையில் கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குகிறோம்’ என்று அதற்கான செய்திகளையும் வெளியிட்டிருக்கிறது அரசு. இதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரி ஆதிஜெகநாதன். அதை ஏற்று நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

ரேஷன் கடை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிராவிலும் இதே பிரச்னை! மசூர் பருப்பை உண்ட பள்ளி மாணவர்களுக்கு முடக்குவாதம், நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டன. உடனே மகாராஷ்டிரா அரசு மசூர் பருப்புக்குத் தடை விதித்தது. இந்த நிலையில், இந்தியாவுக்குள்ளேயே ஒரு மாநில அரசால் தடைசெய்யப்பட ஓர் உணவுப் பொருளை மற்றொரு மாநில அரசு அங்கீகரிப்பது எப்படி நியாயமாகும்?

“கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே மசூர் பருப்பு தடைசெய்யப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது சந்தேகிக்கவேண்டிய ஓர் அம்சமாக இருக்கிறது. மசூர் பருப்பை ரேஷன் கடைகளில் மட்டுமல்லாமல், சத்துணவுத் திட்டத்துக்கும் வழங்க இருக்கிறார்கள். இந்தப் பருப்பால் நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படும், மூளைச் செயல்பாட்டில் குறை உண்டாகும். குழந்தைகளைச் சிறுவயதிலேயே முடக்குவாத நோய் தாக்கும். அதனால்தான், இதைத் தடை செய்ய வேண்டும் என்று மசூர் பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான அரசாணைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து, தடை உத்தரவு வாங்கியிருக்கிறேன்’’ என்கிறார் ஆதிஜெகநாதன்.

மசூர்  பருப்பில் உள்ள அடர் சிவப்பு நிறம்தான் நோய்களுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நிறமி மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிறத்தைப் பிரித்தெடுக்கும் தொழிநுட்பம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், பருப்பை நீரில் ஊறப்போட்டால் இந்த நிறமியின் தன்மை போய்விடும் என்ற வதந்தி உண்டு. ஆனால், மருத்துவரீதியாக இந்தச் செயல்முறை இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மூட்டு வலி

இந்த நிறமி நச்சுத்தன்மை வாய்ந்தது. இதில் உள்ள நச்சின் அளவு குறைவுதான் என்றாலும், தொடர்ந்து உட்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் அதிகம். நரம்புமண்டலச்  செயல்பாடுகளில் பாதிப்பை உண்டாக்கும். மூளைச் செயல்பாட்டைக் குறைக்கும். அதோடு, கை, கால் செயலிழப்பு, முடக்குவாததையும் உண்டாக்கும். இதன் நிறமிக்குக் காரணம், இதனுடன் சேர்த்து விளைவிக்கப்படும் கேசரிப் பருப்புதான் என்ற கருத்தும் உள்ளது.

மசூர் பருப்புக் குறித்துப் பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்.

“மசூர் பருப்பில் பயன்படுத்தப்படும் யூரிக் ஆசிட்டால் மூட்டுவலி, முடக்குவாதம் வருகிறது என்றுதான் இதைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இப்போது மீண்டும் புழக்கத்துக்கு வர இருக்கிறது. மசூர் பருப்பால் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவரீதியாகச் சான்றுகள் ஏதும் இல்லை. என்றாலும், தமிழகத்தில் இதன் பயன்பாடு குறைவாக இருப்பதும், அப்படியான சான்றுகள் இல்லாததற்குக் காரணமாக இருக்கலாம். அனைத்துவகைப் பருப்புகளும் உடலுக்கு நன்மை தருபவைதான். ஆனால், அவற்றின் தன்மை, விளையும் இடத்தைப் பொறுத்தும்கூட மாறுபடலாம். உணவுப் பொருள்களின் தன்மை மாறுவதற்கு பருவம், காலம், இடம், மண்ணின் தன்மை, சேர்க்கப்படும் உரம் மற்றும் ஊடு பயிர்ச்செடிகள் போன்றவையும் காரணங்களாகலாம்” என்கிறார் கணேசன்.

குந்தலா ரவி

உணவியல் ஆராய்ச்சியாளர் குந்தலா ரவி சொல்கிறார்… “கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் இந்தப் பருப்பால் மாணவர்களுக்கு ‘லத்திரிசம்’ என்ற நரம்புநோய் ஏற்பட்டது. இதில் உள்ள நச்சுத் தன்மை நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளைச் செயல்பாடு குறையும். சில குழந்தைகளுக்கு முடக்குவாத நோய்கூட ஏற்பட்டது. கை, கால்கள் செயலிழந்து போயின. மகாராஷ்டிரா அரசு இதைத் தடை செய்தது.  தமிழகத்திலும் இதற்குத் தடை இருந்தது.

இதில் அடர் சிவப்பு / ஆரஞ்சு நிறம் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. மசூர் பருப்பில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அதனுடன் சேர்த்து பருப்புக்காகக் கொடுக்கப்படும் நிறமி, நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், இந்தப் பருப்பைக் கூட்டாக, சாம்பாராக என எப்படிச் சாப்பிட்டால் பாதிப்புகள் ஏற்படும், எவ்வளவு காலம் தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்புகள் உண்டாகும் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்குப் பதிலாக பச்சைப் பயறு / பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.”

மசூர் பருப்பு குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பத்மினியிடம் கேட்டோம்.பத்மினி ஊட்டச்சத்து நிபுணர்

“மசூர் பருப்பு, கேசரி பருப்பு போன்றவற்றில் உள்ள நிறமிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதை கிட்டத்தட்ட ஸ்லோ பாய்சன் என்றுகூடச் சொல்லலாம். இதில் சிறிய அளவில் நச்சுத்தன்மை இருக்கிறது டாக்டர் கிருஷ்ண மூர்த்திஎன்றாலும், தொடர்ந்து உட்கொண்டால், அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். இதில் வைட்டமின் சத்துக்களும் தாதுஉப்புக்களும் நிறைந்துள்ளன. இருந்தாலும், இதில் உள்ள நச்சுத்தன்மை காரணமாக இதைத் தவிர்ப்பதே நல்லது. இதற்குப் பதிலாக பாசிப் பயறு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்’’ என்று கூறினார்.

இது பற்றி மூத்த உணவியல் நிபுணர் கிருஷ்ண மூர்த்தி  கூறும்போது, “வட இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய ஒரு வகை பருப்பு மசூர் தாள்.  இந்த  பருப்புடன் ஊடுபயிராக கேசரி பருப்பு பயிரிடப்படுகிறது. மசூர் பருப்பில் நச்சுத் தன்மை உள்ளது. அதோடு அதிக நச்சுத்தன்மையுள்ள கேசரி பருப்பு சேர்த்து பயிரிடப்படும்போது, இதன் நச்சுத்தன்மையின் அளவும் அதிகரிக்கிறது. எனவே, மசூர் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிப்பது நல்லது, முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த வகை பருப்பை உணவாகக் கொடுக்கக் கூடாது” என்கிறார்.

இவ்வளவு அபாயகரமான ஒரு பருப்பை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்க தமிழக அரசு துடிப்பது ஏன்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *