மனிதக் கழிவுகள் மட்க வைக்கும் ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’

‘பயோ டைஜஸ்டர்’ கழிப்பறை முறையை, கோவை,’மேக் இன் இந்தியா’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது, மனிதக் கழிவுகளில் இருந்து, மனிதர்களுக்கு விடுதலை அளிக்கிறது.

தொற்று நோய் அபாயம்

தற்போதுள்ள கழிப்பறை முறைகளில், 30 சதவீத கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படுகின்றன. மீதமுள்ள, 70 சதவீத கழிவுகள் ‘செப்டிக் டேங்கி’லேயே தங்கிவிடும். தரையோடு டேங்க் உள்ளதால், கழிவுகளை அகற்றும்போது சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் மாசடைகின்றன. தொற்றுநோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.

பாக்டீரியாக்களே மூலதனம்

பயோ -டைஜஸ்டர் முறையில், பழைய செப்டிக் டேங்க், கேபின் அகற்றப்பட்டு, புதிய டேங்க், கேபின் பொருத்தப்படுகிறது. இந்த பயோடேங்க், காற்றோட்டமில்லாத முறையில் செயல்படுத்தப்படுகிறது. டேங்கில், 30 சதவீத, ‘இனாகுலம்’ பாக்டீரியாக்கள் நிரப்பப்படும்.இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகள், காற்று இல்லாத சூழ்நிலையில், 6 – 8 மணி நேரத்துக்குள் இரட்டிப்பாக தன்னைப் பெருக்கிக் கொள்ளும்.

செப்டிக் டேங்கில் உள்ள, 99.9 சதவீத கழிவுகளை இவை மட்கச் செய்கின்றன. அவற்றை மறு உபயோகத்துக்காக, துாய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்று கின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், தண்ணீர் சிக்கனத்துக்கும் உதவுகிறது, இந்த பயோ -டைஜஸ்டர் செப்டிக் டேங்க்.உயிரிழப்புகள் தடுக்கப்படும்இதை இயக்க மின் சக்தியோ, எரிபொருளோ தேவையில்லை. கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியாக்களை ஒருமுறை உள்ளே செலுத்தினால் போதும்.

கழிவுகளை தொடர்ந்து சுத்தம் செய்வதால், அடைப்பு ஏற்படும் பிரச்னையுமில்லை; பராமரிப்பதும் எளிது.இதிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட நீரில், நாற்றம் இருக்காது. இதைப் பொருத்துவதற்கு சிறிய இடம் போதும். செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது, தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறக்கும் அவலமும் உருவாகாது.

பயோ டைஜஸ்டர் பயன்பாடு குறித்து, ‘மேக் இன் இந்தியா’ நிறுவனர், மாணிக்கம் அத்தப்பர் கூறியதாவது:இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எனும், டி.ஆர்.டி.ஓ., மூலம் தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று உருவாக்கப்படும்.பயோ- டைஜஸ்டர் செப்டிக் டேங்கின் விலை, சாதாரண செப்டிக் டேங்கின் விலையைக் காட்டிலும் குறைவு தான்.

100 – 120 பேர் வரை உபயோகிக்கும் டேங்குக்கு, 1.67 லட்சம் ரூபாய் செலவாகும். 10 – 15 பேர் உபயோகிக்கும் டேங்குக்கு, 28, ஆயிரத்து, 500 ரூபாய் செலவு செய்தால் போதும்.ஏராளமான ரயில்களில், பயோ- டைஜஸ்டர் முறையிலான செப்டிக் டேங்குகள் அமைத்துள்ளோம். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் நிறுவியுள்ளோம்.

இதை, அனைத்து இடங்களிலும் உபயோகிக்கலாம். பனி நிறைந்த மலைப் பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்களும், இந்த வகை செப்டிக் டேங்குகளை உபயோகப்படுத்துகின்றனர். இப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்பத்தால், கழிவுகள் விரைவில் மட்காத நிலையில், பயோ- டைஜஸ்டர் டேங்குகள் பயன் தருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை, அரசு மற்றும் தனியார் நிர்வாகங்கள் நடைமுறைப் படுத்தினால், தொற்று நோயை தடுப்பது மட்டுமல்லாது, மனிதமும் காக்கப்படும்.இன்னும் தெரிந்து கொள்ள: 99943 72047இந்தியா எப்போது துாய்மையாகும்?இந்தியாவில் இதுவரை, 2.7 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

1.2 லட்சம் கிராமங்களும், 60 மாவட்டங்களும், மூன்று மாநிலங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படாததாக மாற்றப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் துாய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது.

இன்னும் தொடருது கொடுமை

நாடு முழுவதும், 15 ஆயிரம் தொழிலாளர்கள், மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் தான், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், இந்த தொழிலில் உள்ளனர். தமிழகத்திலும், 360-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த கொடுமைகளை ஒழிக்க பயோ டைஜெஸ்டர் உதவும் என்று வாழ்த்துவோமாக!

நன்றி: தினமலர்

மேலும் விவரங்களுக்கு-  https://www.makbioprojects.com/


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *