அது 1950-ம் ஆண்டு. அக்கால மக்கள் எண்ணெயைக் கல் செக்கிலிருந்து வழித்து எடுத்து வைத்துக்கொண்டு சேமித்து உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கல்செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு அப்போது காலாவதி தேதியெல்லாம் யாரும் நிர்ணயம் செய்திருக்கவில்லை.
ஆரோக்கியமாகத்தான் அக்கால மக்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஊருக்குக் கோயில் இருக்கிறதோ இல்லையோ, இரண்டு ஊருக்குக் கட்டாயம் ஒரு கல்செக்கு வீதம் இருந்திருக்கின்றன.
1980-ம் ஆண்டு வரைக்கும் எல்லாமும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதன் பின்னர் மக்களின் வாழ்வில் உணவு, உடை, விளையாட்டு, இருப்பிடம் என அனைத்திலும் பல மாறுதல்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. அப்போது முதலே மாடு கட்டி கல்செக்கில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த நிலையும் மாறுகிறது. மக்கள் அவசரங்களுக்காக மோட்டார் இயந்திர செக்குகளை நாட ஆரம்பிக்கின்றனர்.
அதுவரை கல்செக்கு உரிமையாளர்களாக ஊருக்குள் கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள், செக்கினை ஓரம் கட்டிவிட்டு கூலி வேலைகளுக்குக் கிளம்புகின்றனர். இப்படித்தான் முடிக்கப்பட்டது கல்செக்கின் சகாப்தம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் மட்டும் 60 கல்செக்கு ஆலைகள் இருந்திருக்கின்றன. இன்றளவில் ஒன்றிரண்டு செயல்பட்டு வருகின்றன. கல்செக்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த எண்ணெயில் உயிர்ச் சத்துகள் சிதையாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நாளடைவில் இயந்திரமயத்தில் சிக்கியது மட்டுமல்லாமல் பாமாயில் போன்ற எண்ணெய்களுக்கு இறக்குமதி செய்ய முக்கியத்துவம் தரப்பட்டது. இதுவும் ஒருவகையில் கல்செக்குகள் காணாமல் போக காரணம்.
கல்செக்கின் வடிவமைப்பு கொஞ்சம் நூதனமான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு வட்ட வடிவக் கல்லில் குடைபோல குடைந்து, அடிப்பாகத்தில் ஆரக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். செக்கின் நடுவே எளிதில் சுழல்வதற்காக வாகை மரத்தில் பெரிய உலக்கை பொருத்தப்பட்டிருக்கும். கொக்கி எனப்படும் ஸ்டே போன்ற அமைப்பு அதைத் தாங்கி நிற்கும். அதன் கீழ்ப்பகுதி நீண்ட கம்பினால் செக்கின் அடியில் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பலகையின்மீது அமர்ந்துதான் மாடுகளை ஓட்ட முடியும்.
கல்செக்கிலிருந்து எண்ணெய்யை எடுத்த பின்னர், வடிகட்டும் பழக்கம் கிடையாது. எடுத்த எண்ணெய்யை சில்வர் அல்லது பித்தளை பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்படும். அப்போது கசடுகள் அடிப்பாகத்தில் தங்கிவிடும். தெளிந்த சுத்தமான எண்ணெய் கிடைக்கும்.
இன்று இயந்திரங்களில் பிழியப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு `சத்தான எண்ணெய்’ என்று சொல்லி சந்தைகளில் அதிகமான எண்ணெய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதெல்லாம் உண்மையிலேயே சத்தான எண்ணெயா என்பது சந்தேகம்தான். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேல் கோலோச்சிக் கொண்டிருந்த இயந்திரமயமான எண்ணெய்கள் இன்று விற்பனையில் சரிவினைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு பெரும்பாலான மக்கள் இயற்கைப் பொருள்களின் பக்கம் தனது கவனத்தைத் திரும்பியதே முக்கியமான காரணம்.
இயந்திர எண்ணெயால் அதிக நோய்களுக்கு ஆளான மக்கள் இயற்கை வாழ்வியலைத் தேடி தன் வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதவிர, இயற்கை உணவுகள் குறித்த விழிப்பு உணர்வும் மக்கள் மத்தியில் பெருகி வருகிறது. அதிகமான மக்கள் பாரம்பர்ய இயற்கைப் பொருள்களின் பக்கம் திரும்புவதால் அதன் தேவையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இதனால் அழிவினைச் சந்தித்த பல தொழில்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று இயங்கத் தொடங்கியுள்ளன. அதில் கல்செக்குத் தொழிலும் முக்கியமானது.
இன்று அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் ஏற்படுத்தும் நோய்களிலிருந்து தப்பிப்பதற்கு கல்செக்கு எண்ணெய்கள் ஒரு வரப்பிரசாதம்தான். வழக்கொழிந்து போன மரச்செக்குகளும், கல்செக்குகளும் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அதனை ஊக்குவிப்பதும், அழிப்பதும் மக்களாகிய நம் கைகளில்தாம் இருக்கிறது.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்