‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு துவக்கி, அதற்கான விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்து வருகிறது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என பார்த்தால் பதில் என்னவோ பூஜ்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாடு மட்டுமல்ல உலகமே குப்பை காடாகத்தான் மாறி வருகிறது.
இந்த அபாயகர சூழலில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் எப்படி கையாளப்படுகிறது மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் கொட்டப்படும் இந்த கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பார்வை இது…
மருத்துவ வசதிகளை பொருத்த மட்டில் தமிழகம், முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் 1,158 மருத்துவமனைகள் உள்ளன. இதில் 304 அரசு மருத்துவமனைகளும், 854 தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. இது தவிர 1800 அரசு ஆரம்ப சுகாதார மையங்களும், பதிவு பெறாத நூற்றுக்கணக்கான தனியார் கிளினிக்குகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளின் எடை அளவிட முடியாதது. சென்னையில் உள்ள 27 மருத்துவமனைகளில் இருந்து மட்டும் தினமும் 1949 கிலோ மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
இவ்வாறு வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, எங்கு கொண்டு சேமிக்கப்படுகிறது, சேமிக்கப்பட்ட கழிவுகளை எப்படி அழிக்கிறார்கள்…? என பார்க்கலாம்.
பொதுவாக மருத்துவமனைகள் துவக்கப்படும்போது அதனை மாசு கட்டுப்பாடு நிறுவனத்திடம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அப்படி பதிவு செய்யப்படாத ஏராளமான கிளினிக்குகள் இன்றும் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளான சிரிஞ்சுகள், நீடில்கள், கட்டுப்போடும் துணிகள், பஞ்சுகள் ஆகியவற்றை மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் தினமும் சேகரிக்க வேண்டும்.
அவற்றை மக்களால் பயன்படுத்தப்படாத இடத்தில் வைத்து எரித்துவிட வேண்டும். இதே போல் தனியார் மருத்துவமனை நடத்துபவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தில் (Indian Medical Association IMA) பதிவு செய்து கொண்டால், அவர்கள் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இதன்படி ஒவ்வொரு கழிவுக்கும் ஒரு தனிக் கூடை வழங்கப்பட்டு சேகரிக்கப்படும். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள், மருத்துவ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கொட்டி அழிக்கப்படும்.
இவையெல்லாம் மாநகராட்சிகள், வளர்ச்சி அடைந்த சில நகராட்சிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள். அதே நேரத்தில் சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த முறை செயல்படுவதில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கிளினிக்குகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் பொதுவான குப்பைகளுடனே கொட்டப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய பேசிய தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மைய ஒருங்கிணைப்பாளர் மோகன், “சமீப காலங்களாக தேனி மாவட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகளும் மக்கள் நடமாட்டம் இல்லா நேரங்களில் கொட்டப்படுகின்றன.
கோம்பை பகுதியில் உள்ள தனியாரின் நிலங்களை குத்தகைக்கு பெற்று, அங்கு கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்களும் பரவுகிறது. குமுளி வழியாக கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வரும் வழியில் 2 செக் போஸ்டுகள் உள்ளன. இவர்கள் நினைத்தால் இந்த வாகனங்களை தடுத்து திருப்பி விடலாம்.
ஆனால் அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாக எரிக்காமல், மண்ணில் புதைத்து விடுகிறார்கள். உள்ளூர் மக்கள் இதை தடுக்க முயன்றால் போலீஸார் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மனிதக் கழிவுகளும் முல்லை பெரியாறு அணைப்பகுதிகளில் கொட்டப்படுகின்றன.
மேலும் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கைகள் ஆகியன தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் கால்வாய்களில் துவைக்கிறார்கள். இதனால் மாசு படிந்த, நோய்களை உருவாக்கும் தண்ணீரை குடிக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம்.
அரசு இதில் உரிய நடவடிக்கை எடுத்து மலை பகுதிகளில் மருத்துவ, மனித கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு சென்று கேரளாவில் விற்கப்படும் இளநீர் குறும்பைகளை கூட அங்கு கொட்ட முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் நம் மக்களோ இதில் சிரத்தை இன்றி உள்ளார்கள்’’ என்றார்.
– இரா.மோகன்
நன்றி: ஆனந்த விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்