எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயங்கரம் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இப்போது முட்டை பற்றிய ஒரு பயங்கர செய்தி…
கலப்படம் இல்லாத, புரோட்டின் நிறைந்த உணவுகளில் முக்கியமானது முட்டை. எளிய மக்களும் நம்பிக்கையோடு வாங்கிச் சாப்பிடும் உணவான முட்டை பற்றி அண்மைக்காலமாகப் பல சர்ச்சைகள் எழுவது வழக்கமாகிவிட்டது.
இப்போதைய சர்ச்சை, ரீமோல்டிங் முட்டை.
வயதைக் கடந்த, முதிய கோழிகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்து மருந்துகளையும், ஆன்டிபயாடிக் ஊசிகளையும் போட்டு ரீமோல்டிங் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த ரீ மோல்டிங் முட்டைகளைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.
ராசிபுரத்தைச் சேர்ந்த வேளாண் செயற்பாட்டாளர் சந்திரன் என்பவர் இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்.
“பண்ணைகளில் கோழிக் குஞ்சுகளை வாங்கி அவற்றுக்குத் தீவனமும், ஆன்டிபயாடிக் ஊசிகளும் போட்டு வளர்க்கிறார்கள். இந்தக் கோழிக் குஞ்சுகள் 17 முதல் 18 வாரங்களில் முட்டையிட ஆரம்பிக்கும். 32 வாரங்கள் வரை 30 முதல் 40 கிராம் எடையுள்ள மிகச்சிறிய புல்லட் முட்டைகள் இடும். தமிழகச் சத்துணவுத் திட்டத்துக்கு இந்த புல்லட் முட்டைகளை வழங்குகிறார்கள். ஆனால் அரசு விதிமுறைப்படி இதுமாதிரியான முட்டைகளை வழங்கக் கூடாது.
பண்ணைக் கோழிகள் 32 முதல் 50 வாரங்கள் வரை 50 முதல் 55 கிராம் எடையுடைய முட்டைகளை இடும். 55 முதல் 60 வாரங்கள் வரை 65 கிராம் எடையுடைய முட்டைகளையும், 70 முதல் 80 வாரங்கள் வரை 70 கிராம் அளவுள்ள முட்டைகளையும் இடுகின்றன. இந்த வரிசையில் கிடைக்கக்கூடிய முட்டைகளே சரிவிகிதமான, தரமான முட்டைகள். அதன்பிறகு இந்தக் கோழிகள் முட்டையிடும் திறனை இழந்துவிடும். அவற்றைக் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் கறி பயன்பாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
40 முதல் 45 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் கோழிக்குஞ்சுகளை முட்டை இடும்வரை வளர்க்க 500 ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. ஆனால், 32 வாரங்கள் வரை இந்தக் கோழிகள் இடும் புல்லட் முட்டைகளுக்குக் குறைந்தவிலையே கிடைக்கின்றன. அதனால் கோழிப் பண்ணையாளர்களுக்குப் பெரியஅளவில் லாபம் கிடைப்பதில்லை. அதன்காரணமாக, 80 வாரங்கள் முட்டையிட்டு முடிந்த வயதான கோழிகளை மீண்டும் முட்டையிட வைக்கிறார்கள்.
இந்தக் கோழிகளுக்கு தீவனம் கொடுக்காமல் 15 நாள்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் கொடுப்பார்கள். அதனால் கோழியின் உடம்பில் உள்ள கொழுப்புகள் கரைந்து மேலே முடிகள் கொட்டி வழுக்கைக் கோழிகளாகிவிடும். இறைச்சிக் கடைகளில் முடிகள் நீக்கப்பட்டுத் தொங்கவிடப்படும் கோழிகளைப் போல இருக்கும். 16-வது நாள் கால்சியம் கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டு 17- வதுநாளிலிருந்து வழக்கம்போல தீவனம் கொடுப்பார்கள்.
பிறகு, இந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஊட்டச் சத்து மருந்துகளையும், ஆன்டிபயாடிக் ஊசிகளையும் போடுகிறார்கள். 25-வது நாளிலிருந்து இந்தக் கோழிகள் மீண்டும் முட்டைகள் இடத் தொடங்கும். இந்த முட்டைகளுக்குப் பண்ணையாளர்கள் வைத்துள்ள பெயர்தான், `ரீமோல்டிங்’ முட்டைகள்.
இந்தக் கோழிகள், அடுத்த 20 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக 75 கிராம் எடையுள்ள முட்டைகள் இடுவதால் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதனால் ஆரம்பத்தில் ஒரு முறை `ரீமோல்டிங்’ முட்டைகள் உற்பத்தி செய்தவர்கள், தற்போது இரண்டு, மூன்று முறை `ரீமோல்டிங்’ முட்டைகள் உற்பத்தி செய்கிறார்கள். நாமக்கல்லில் உள்ள பெரும்பாலான கோழிப் பண்ணைகளில் இதுபோன்ற ரீ மோல்டிங் முட்டைகளை உற்பத்தி செய்வதாகச் சொல்லப்படுகிறது.
ரீமோல்டிங் முட்டையைத் தணித்து யாராலும் அடையாளம்காண முடியாது. கோழிகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து மருந்துகளும் நோயெதிர்ப்பு மருந்துகளும் தரப்படுவதால் இந்த ரீமோல்டிங் முட்டைகளைச் சாப்பிடுவோருக்கு உடல்பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது” என்றார் அவர்.
இதுபற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப் பண்ணை உரிமையாளரிடம் பேசினோம். `பெயர் வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கையோடு பேசினார்.
“கோழிக்குஞ்சு வாங்கி அதைப் பராமரிப்பது கடினம். படிப்படியாகத்தான் வருமானம் கிடைக்கும். ஒருவேளை இடையிலேயே கோழிகளுக்கு நோய் வந்துவிட்டால் எல்லாம் காலி. ஆனால், ரீமோல்டிங் செய்வதால் உடனே பலன் கிடைக்கிறது. அதனால் ஒரு கோழியை ஒரு முறை மட்டும் ரீமோல்டிங் செய்கிறோம். மூன்று, நான்கு முறை ரீமோல்டிங் செய்யப்படுவதாகச் சொல்வது தவறு. ஒரு கோழி அதிகபட்சம் 100 வாரத்துக்கு மேல் உயிரோடு இருக்காது…” என்றார் அவர்.
இதுபற்றி கோழிப் பண்ணை உரிமையாளர் சங்கத் தலைவர் சின்ராஜிடம் கேட்டோம்.
“ரீ மோல்டிங் முட்டைகள் உற்பத்தி செய்வது அரிதிலும், அரிதாக ஏதாவது ஒரு பண்ணையில் நடந்திருக்கலாம். எல்லாப் பண்ணைகளிலும் நடப்பதாகச் சொல்வது தவறு. கோழிகளுக்கு நோய் வந்தால் தீவனம் கொடுக்காமல் தண்ணீரை மட்டும் கொடுத்து காப்பாற்றுவோம். அதைத்தான் யாரோ உங்களிடம் தவறாகச் சொல்லி இருக்கிறார்கள்…” என்றார்.
நாமக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலரும் மருத்துவருமான புஷ்பராஜ், “வயது கடந்த கோழிகளுக்கு அதிக ஊட்டச்சத்து மருந்துகள் தருவதும், அதிகப்படியான ஆன்டிபயாடிக் ஊசிகள் போடுவதும் தவறானது. ரீமோல்டிங் முட்டைகளால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். தவறு செய்யும் கோழிப் பண்ணையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகத்தின் கருத்து:
புரத சத்துக்கு முட்டை உண்டே ஆக வேண்டும் என்பது தவறான தகவல். கடலை, சோயா போன்றவற்றில் முட்டை போன்ற அதிகம் புரதம் உள்ளது. இவற்றை சாப்பிட்டால் உடல் நலம் கெட்டுப்போவது இருக்காது.
ஒரு கோழியை எப்படி எல்லாம் துன்புறுத்தி இந்த தொழில் நடக்கிறது! உணவே கொடுக்காமல் நீர் மட்டுமே கொடுப்பது, பிறகு கால்சியம் கொடுப்பது, ஆண்டிபயாடிக் ஊசிகள் உடல் பெருக்க என்று பலவாறு கொடுமை படுத்தப்பட்ட கோழி கடைசியில் கொல்ல பட்டு நம் உணவாக்கி போகிறது.
இப்படி கொடுமை படுத்த, கெடுதலான ‘உணவு’ தேவையா?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்