பழங்களில் பல வகைகள் இருந்தாலும்… தமிழர்களுக்கு பழம் என்றாலே அது வாழைப்பழம்தான். கோவில் பூஜைகள், படையல்கள், விசேஷங்கள், விருந்து உபசரிப்புகள் முதல் சினிமா காமெடி வரை அனைத்திலும் வாழைக்கு முக்கிய இடமுண்டு. அந்தளவுக்கு நம் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருக்கிறது, வாழைப்பழம். அத்தகைய சிறப்புமிக்க வாழைப்பழத்தை பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் கையாளும் யுக்தி அதிர்ச்சியடைய வைக்கிறது.
முன்பு கடைகளில் பழுக்காத வாழைத்தாரை தொங்க விட்டிருப்பார்கள். அவை கொஞ்சம் கொஞ்சமாகப் பழுக்கத் தொடங்கும். பழுக்கப் பழுக்க விற்பனை நடக்கும். அதிகளவில் தேவைப்பட்டால் அரிசி அண்டாவுக்குள் போட்டு பழுக்க வைப்பார்கள். நொச்சி இலை போன்ற வெப்பமூட்டும் இலைகளைப் போட்டு காற்று புகாத வண்ணம் மூடி பழுக்க வைபார்கள். ரொம்ப அரிதாக சாம்பிராணி புகை மூட்டம் போட்டும் பழுக்க வைப்பார்கள். இப்படி இயற்கையாகப் பழுக்க வைக்கும்போது ஒரே சீராக பழங்கள் பழுக்காது. அந்த விஷயத்தை முன்பு நாம் பொருட்படுத்தவும் மாட்டோம்.
தற்போது உணவுப் பழக்கவழக்கங்களிலும் புகுந்த நாகரீகம், வர்த்தக யுக்திகள் போன்றவை வாழைப்பழங்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரே அளவிலான வீரிய திசு வளர்ப்பு வாழைகள், ஒரே நிறம், ஒரே போல பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் என அதிலும் நவீனத்தைப் புகுத்தி விட்டார்கள். ஆரம்பத்தில், காற்றுப் புகாதவாறு அடைக்கப்பட்ட அறைகளில் பழங்களை அடுக்கி வைத்து… எத்திலீன் வாயுவை புகுத்தி பழுக்க வைக்கும் முறையைக் கையாள ஆரம்பித்தனர். அதற்கு அடுத்த கட்டமாக, தற்போது, ‘எத்திஃபான்’ என்ற ரசாயனத்தை தண்ணீரில் கலந்து அதில் வாழைக்காய்களை முக்கி எடுத்து பழுக்க வைக்கிறார்கள்.
‘அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்துள்ளது’ என்று வியாபாரிகள் சொன்னாலும்… இயற்கையாக நடக்க வேண்டிய விஷயத்தை செயற்கையாக நடக்க வைப்பது தவறல்லவா. ‘தோலை உரித்துத்தானே சாப்பிடுகிறோம்’ என்று நியாயம் சொல்லப்பட்டாலும், வாழைப்பழத்தை நாம் கழுவிக் கையாள்வதில்லையே. பழத்தின் தோலை உரிக்கும்போது அதில் படிந்துள்ள ரசாயனம் நம் கைகளில் படும். அதில்லாமல், காம்புகளில் உள்ள வெடிப்புகள் மூலமாக இந்த ரசாயனம் பழத்துக்குள் புகுந்து விடவும் வாய்ப்புண்டு.
பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட உணவாகக் கொடுத்து வரும் வாழைப்பழத்திலும் ரசாயனம் கலக்கலாமா? அனுமதிக்கப்பட்ட அளவில்தான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னாலும் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் விஷம் விஷம்தானே..!
இயற்கையாக விளைவிக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை. இயற்கையாக பழுக்க வைத்தாவது விற்பனை செய்யலாமே…?
வாழைப் பழங்களில் ரசாயனம் பூசும் நடைமுறைகள் கீழே இருக்கும் வீடியோவில்..!
செய்தி, வீடியோ: தே. தீக்ஷித்
நன்றி: ஆனந்த விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்