வீட்டிலேயே செய்யலாம்! ரசாயன சோப்பு, ஷாம்புக்கு மாற்று

‘வீடுகளில் எளிய முறையில் தயார் செய்யக்கூடிய இயற்கையான கரைசலை பயன்படுத்துவதன் மூலம், ரசாயனம் அடிப்படையிலான சோப்பு, ஷாம்பு போன்றவற்றை தவிர்க்க முடியும். இதன் மூலம், தண்ணீர் மாசு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்,” என்கிறார், கோவையை சேர்ந்த சங்கீதா சுபாஷ்.


நீர் மாசுபாட்டுக்கு, தொழிற்சாலைகள் மட்டுமின்றி, வீடுகளில் பயன்படுத்தும் ரசாயன அடிப்படையிலான சோப்பு, ஷாம்புகளும் முக்கிய காரணமாக உள்ளன.மாசுபடும் தண்ணீரால், மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.இதை தவிர்க்க, வீடுகளில் இயற்கை முறையில் துாய்மைக்கரைசலை தயார் செய்து அனைவருக்கும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், கோவை பீளமேட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சங்கீதா சுபாஷ்.இந்த கரைசலை, குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, தரை சுத்தம் செய்வது, வாகனம் கழுவுவது என, அனைத்து துாய்மைப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்கிறார் இவர்.

அவர் மேலும் கூறியதாவது:தன் முயற்சியால் ஒவ்வொருவரும், சுற்றுச்சூழலை காக்க முடியும். ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், ஆறு, குளங்களில் ரசாயன நுரை ததும்புவதை காண முடிகிறது. பலரும், இதற்கு தொழில் நிறுவனங்கள் தான் காரணம் என்று நினைக்கின்றனர்.இந்த பிரச்னைக்கு, நம் வீட்டில் பயன்படுத்தும் ரசாயன அடிப்படையிலான சோப்பு, ஷாம்பு போன்றவையும் ஒரு காரணம். இந்த ரசாயனங்களால் நமக்கு மட்டுமில்லை; நம்மை சுற்றியிருக்கும் சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.அதை தவிர்க்க, வீட்டுக்கு தேவையான கிளீனிங் பொருட்களை, இயற்கையான பொருட்களை கொண்டு நாமே ஒரு கரைசலை தயாரித்துக்கொள்ள முடியும்.

முதலில் நான் தயாரித்து பயன்படுத்தி, பலன் கிடைத்ததை உறுதி செய்து, இப்போது மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். இதற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.இதற்கான பொருட்கள் அனைத்தும், உள்ளூரிலேயே கிடைக்கும். செலவும் பெரிதாக இல்லை. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி அளித்து, நாடு முழுவதும் இந்த வழிமுறையை பரவச் செய்தால், நீர்நிலை மாசு பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும்.இவ்வாறு, சங்கீதா சுபாஷ் கூறினார்.கரைசல் செய்முறை இதோ!

ஒரு லிட்டருக்கான செய்முறை இதோ: மூன்று பங்கு ஆரஞ்சு தோல் அல்லது எலுமிச்சை தோல் (300 கிராம்), ஒரு பங்கு நாட்டுச்சர்க்கரை (100 கிராம்), பத்து பங்கு தண்ணீர் (ஒரு லிட்டர்) ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

தினமும் ஒரு முறை திறந்து கலக்கி விட்டு மூடி வைக்க வேண்டும். இரண்டரை முதல் மூன்று மாதங்களில், தோல் கரைந்து கூழ் ஆகி விடும். இதுதான், ‘பயோ என்சைம்’ எனப்படும் அதிசய கரைசல். இந்த கரைசலை வீடு சுத்தம் செய்யவும், பாத்திரம் தேய்க்கவும், ஏன் தலைக்கு குளிக்கவும் பயன்படுத்தலாம். துணி துவைப்பதற்கு மட்டும், இந்த கரைசலுடன் பூந்திக்கொட்டை கரைசலை சமபங்கு சேர்க்க வேண்டும்.

ஒரு கிலோ பூந்திக்கொட்டைக்கு, நான்கு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கலாம். அடுத்த நாள் அதை 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஆறியபிறகு, புளி கரைப்பது போல் கரைத்து வடிகட்டி விட வேண்டும்.வடி கட்டிய திரவத்தை, ‘பயோ என்சைம்’ சமபங்கு சேர்த்து, பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். இதை மூன்று முதல் நான்கு மாதங்கள் இருப்பு வைக்க முடியும். பிரிஜ்ஜில் வைத்து ஆறு மாதங்கள் வரை பாதுகாக்க முடியும்.

வாஷிங் மிஷினில், தேவைக்கு தகுந்தபடி 50 முதல் 100 மில்லி கரைசலை ஊற்றினால் போதும் என்கிறார் சங்கீதா.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *