ஒரு ஏரியின் கண்ணீர் கதை!

துரை மாட்டுத்தாவணியிலிருந்து திருச்சி செல்லும் சாலை. உத்தங்குடியைத் தாண்டியவுடன் ஒரு மெல்லிய அபயக்குரலை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாகன இரைச்சலைக் கடந்து அது உங்கள் காதுகளுக்கு வந்திருக்காது. அப்படியே கேட்டாலும் உங்கள் அவசரம் அதற்கு இடம் தந்திருக்காது.

‘எனக்கு நேர்ந்த அநீதியைக் கேட்க யாரும் இல்லையா?’ என்று காற்றில் கலந்து வந்த அந்தக் குரலை, பல தடவை கடந்து சென்றுகொண்டிருந்த நான், ஒருநாள் ‘‘யாரது?’’ என்று நின்று கேட்டேன்.

ஈனஸ்வரத்தில் ‘‘நான்தான் உலகனேரி பேசுகிறேன்’’ என்றதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சமீபத்தில் முதல்வர் வாட்ஸ்அப்பில் உருக்கமாகப் பேசியபோதுகூட நான் அதிரவில்லை. ஆனால், இந்தக் குரலைக் கேட்டு நிலைகுலைந்துவிட்டேன்.

ஏரி தொடர்ந்து பேச ஆரம்பித்தது. ‘‘என்னை நீங்கள் காண முடியாது. இருந்தால்தானே காண முடியும்? முன்பொரு காலத்தில் நதியாய் ஓடிய வைகையிலிருந்து பிரிந்து ஆனைமலைக்கு முன் ஏரியாய் விரிந்து நின்ற என்னை, மக்கள் எல்லோரும் வாழவைத்த தெய்வமாக துதித்தார்கள். ஆனால், 15 வருடங்களுக்கு முன், மக்களுக்கு நியாயம் வழங்கும் மன்றம் கட்ட வேண்டுமென்று எப்போது அடிக்கல் நாட்டினார் களோ, அப்போதிருந்தே எனக்கு அநியாயம் நடந்தது. என்னை உயிருடன் புதைத்துவிட்டார்கள். இப்போதாவது என்னைத் தெரிகிறதா? ஓங்கி உயர்ந்து பரந்து காட்சி தரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கட்டடத்துக்கு அடியில் புதைக்கப் பட்ட உலகனேரி நான்தான்.

Courtesy: Vikatan.com
Courtesy: Vikatan.com

இப்போது எனக்கு மேலிருக்கும் இந்த புனிதமான கட்டடத்திலிருந்துதான் நீர், நிலம், காற்றை, வனத்தை, மலையை, சுற்றுச்சூழலைக் காக்கவேண்டும் என்று பலர் முறையிடுகிறார்கள். நானும் என் சகோதரிகளும் இன்று இந்த மதுரை மாநகரில் இருந்த இடம் தெரியாமல், தடமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டோம். அரசும் தனியாரும் பல அடுக்குமாடி கட்டடங்களையும் அலுவலகங்களையும் எங்களுக்கு மேல்தான் எழுப்பியுள்ளனர். நாங்கள் என்ன பாவம் செய்தோம். உங்கள் தாகத்தைத் தீர்க்கவும், பசியைப் போக்கவும், உங்களைச் சுகாதாரமாக வைத்திருக்கவும் தானே பல ஊர், தேசங்களைத் தாண்டி இந்த ஆலவாய் நகருக்கு நம்பி வந்தோம்? நம்பி வந்தவர்களை கருவறுத்து விட்டீர்களே?

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீர் மேலாண்மையில் மதுரை நகரம் உலகுக்கே வழிகாட்டியாக இருந்தது. பாண்டியர் களுக்குப் பின் வந்த நாயக்க மன்னர்கள் மதுரையை நிரந்தரத் தண்ணீர் பந்தல்போல வைத்திருந்தனர். முல்லையாறு, பெரியாறு, கூடவே வைகையாறும் சேர்ந்து முத்தமிழ்போல ஓடிய பூமி இது. மதுரையின் வடக்கில் வைகை நதியாகவும், தெற்கே கிருதுமால் நதியாகவும் நகரைச் சுற்றி பெரிய குளங்களாகவும் ஊருணிகளாகவும் கண்மாய், ஏரிகளாகவும் பரவிக்கிடந்தவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட பல நீர்நிலைகளில் முக்கியமான ஏரியாக 10 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் செழித்து வளர, பாசனத்துக்குப் பயன்பட்டேன். 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த என் மேல் மண்ணை அள்ளிப்போட்டு, 120 ஏக்கர் பரப்பளவில் உயர் நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஏக்கரில் நீதிமன்ற கட்டடம், வழக்கறிஞர் அலுவலகம், உணவகங்கள், நீதிபதிகளின் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளாக​மெங்கும் பலவகையான மரங்களையும் செடிகளையும் வைத்து பசுமைப் பூங்காவாக மாற்றி இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட அநீதியை மறைக்க முடியாது. எங்கே நான் மறுபடியும் எனது வழித்தடத்தில் வந்தாலும் வந்துவிடுவேன் என்று பயந்து, நீதிமன்ற முகப்பிலிருந்து நான்கு வழிச்சாலையை தொடும் பின்பக்கம் வரை சிமென்ட் கால்வாய் ஒன்றைக் கட்டி வைத்திருக் கிறீர்கள். யானைப் பசிக்கு சோளப்பொரியா? சமீபத்தில் சென்னையைப்போல் மழை வெள்ளம் ஏற்பட்டால் இந்த செட்டப் எல்லாம் எந்த மூலைக்கு?

துதிக்கையை ஊன்றிப் படுத்திருக்கும் ஒத்தக்கடை ஆனைமலையின் முழு பிம்பம் என் உடம்பில் தெரியுமாம். அப்படியென்றால் எவ்வளவு பரந்து விரிந்திருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள். உத்தங்குடி, ஒத்தக்கடை, திருமோகூர், நரசிங்கம்பட்டி ஆகிய பகுதிகளின் மக்களுக்கு இந்த உலகனேரிதானே தாய். குளிக்கவும் குடிக்கவும் விவசாயம்செய்யவும் என்னைவிட்டால் வேறு யார்? தேனி மாவட்டத்திலிருந்து ஊற்றாகப் பொங்கி, வைகையாக வடிவமெடுத்து வருச நாட்டுப் பக்கத்தில் முல்லை பெரியாறுடன் கலந்து, காடு மலை தாண்டி மதுரையை நோக்கி ஓடிவந்து, மதுரைக்குள் வந்ததும் பல கிளைகளாய் பிரிந்து மக்களுக்குப் பயன்படும் நீர்நிலைகளில் நான் முக்கியமானவன். இந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வளிக்க வந்த என் வாழ்க்கையை அரசு அதிகாரிகள் அழித்தனர். நெல்லும் வாழையும் கரும்பும் தென்னையும் விளைவிக்கப்பட்ட இந்தப் பகுதியில் இன்று கான்கிரீட் காடுதான் முளைத்துள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து நீதிமன்றத்தை இங்கே கட்ட வேண்டுமா என்று கேட்ட ஏழை விவசாயிகளின் குரல் அப்போது அரசின் செவியில் ஏறவில்லை. முன்பு உத்தங்குடி ஊராட்சியில் ஏரியாக இருந்த என்னை, இப்போது மதுரை மாநராட்சிக்குள் இணைத்து உலகனேரி உயர் நீதிமன்றமாக ஆக்கியுள்ளது ஒன்றுதான் ஆட்சியாளர்களின் சாதனை. என்னதான் இருந்தாலும் நான் இருந்த சுவட்டை முற்றிலும் மறைக்க முடியாது. சமீபத்தில் பெய்த சாதாரண மழையில் தேங்கிய தண்ணீர், கண்மாய்போல நீதிமன்றத்தின் வலதுபக்க மைதானத்தில் தேங்கியிருப்பதை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.

‘சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எங்களால் அலைய முடியவில்லை, நேரமும் பொருளாதாரமும் அதிகம் செலவாகிறது’ என்ற தென்மாவட்ட மக்களின் கோரிக்கை நியாயமானதே. நான் இல்லை என்று சொல்லவில்லை. அவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மத்திய அரசு 1981-ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரமான உயர் நீதிமன்ற கிளை அமைக்க அந்த கமிஷன் பரிந்துரைத்தது. அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்துத் தென் மாவட்ட மக்களும் மதுரை வழக்கறிஞர்களும் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஒரு வழியாக 2000-ம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப் பட்டது. அப்போதே அவர்கள் என்னுடைய தங்குமிடத்தைத் தேர்வு செய்யாமல், வேறு ஓர் அரசுப் புறம்போக்கு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாம்.அ.தி.மு.க ஆட்சியில் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜும், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் 24.7.2004-ல் திறந்து வைத்தனர்.

என்னைப் போலவே என் சகோதரிகளும் மதுரையின் பல கட்டடங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இனிமேலும் இதைப்போன்ற நீர் படுகொலைகள் நடக்காமல் தடுக்க எல்லோரும் முன் வாருங்கள்… இல்லை என்றால் சென்னையைப்போன்ற பாடத்தை நாளை மதுரையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்ற எச்சரிக்கையுடன் தன் கண்‘நீர்’க் கதையைச் சொல்லியது ஏரி.

லகனேரியின் வேதனையை வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ந.பாண்டுரங்கனிடம் சொன்னோம். ‘‘70-கள் வரைக்கும் மதுரையின் அனைத்துக் குளங்களும் எரிகளும் நிரம்பி வழிந்ததைப் பார்த்திருக்கிறேன். வைகை நதியின் இரண்டு கரை நெடுகிலும் மக்கள் குளிப்பதைப் பார்த்திருக் கிறேன். ஊரைச் சுற்றி எத்தனை குளங்கள், கண்மாய்கள். உலகத்துக்கே கொடுக்கும் வகையில் நீர் நிரம்பி இருந்ததால் தான், அதற்கு உலகனேரி என்று பெயர் வந்தது. 70-க்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் கட்சியினர் பயன்பெற கட்டடங்கள் எழுப்புவதற்கு நீர்நிலைகளைத் தேர்வுசெய்ய ஆரம்பித்தனர். இன்று மதுரையில் பல முக்கியமான அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள், கல்லூரிகள் போன்றவை கண்மாய்களிலும், ஏரிகளிலும்தான் அமைந்துள்ளன. அப்படித்தான் உலகனேரியைத் தூர்த்து அதில் உயர் நீதிமன்றம் கட்டியுள்ளனர்.

மதுரைக்குள் இரண்டு நதிகள் ஓடின. வைகை எப்போதாவதுதான் எட்டிப் பார்க்கிறது. கடைமடைப்பகுதியான ராமநாதபுரத்துக்குச் செல்வதில்லை. முன்பு சாயல்குடி வரை ஓடிய கிருதுமால் நதி இன்று குறுகிப் பெரும் சாக்கடையாகிவிட்டது. இன்னும் பல குளங்களைக் காணோம். மதுரையில் மலைகள் காணாமல் போனதுபோல் பல நீர்நிலைகளும் காணாமல் போய்விட்டன’’ என்றார் வருத்தத்துடன்.

நீர்நிலைகள் காக்க வேண்டி வழக்காடி வரும் வழக்கறிஞர் லஜபதிராய், ‘‘உலகனேரியின் வருத்தம் எல்லோருக்கும் உள்ளது. நீதிமன்றம் திறந்த புதிதில் அப்போது நீதிபதியாக இருந்த பி.கே.மிஸ்ரா, ஏரி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திலிருந்து இயற்கை வளங்களைக் காக்க உத்தரவிடுகிறோம் என்று வேதனையுடன் சொல்வார். பொதுவாக, அரசு கட்டடங்கள் கட்டும்போது, பல துறைகளிலும் அனுமதி வாங்க வேண்டுமென்ற நெருக்கடி கிடையாது. அதனால், அப்போது ஆட்சியில் இருப்பவர்களின் மன நிலைக்கு ஏற்ப நிலங்கள் எடுக்கப்படுகின்றன. இதைவிடக் கொடுமை, மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட மேலமடை கண்மாயை பட்டா போட்டு வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இப்போது சென்னை​யில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்களிடம் ஒரு கருத்தையும் உருவாக்கி, களத்தில் இறங்கிய அதிகாரிகள், விளிம்புநிலை மக்களின் குடியிருப்புகளைத்தான் காலி பண்ணுகிறார்கள். அரசு கட்டடம், தனியார் கட்டடங்களை கை வைப்பதில்லை. மதுரையில் உயர் நீதிமன்றத்தில் தொடங்கி பல கல்லூரிகள், மாவட்ட நீதிமன்றம், அரசு கட்டடங்கள், இப்போது வேகமாகக் கட்டப்பட்டு வரும் உலக தமிழ்ச் சங்க கட்டடம் அனைத்தும் நீர்நிலைகள்தான்’’ என்றார்.

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *