‘நதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, நீராதாரங்களை பாதுகாப்பது அரசின் கடமை,” என, சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தினார்.
கோவை, ஆலாந்துறையில் உள்ள கூடுதுறையில், ‘சிறுதுளி’ அமைப்பின், ‘நொய்யலை நோக்கி’ நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சமூக சேவகர் அன்னா ஹசாரே, தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீராதாரங்களை மீட்க, ‘சிறுதுளி’ அமைப்பு, நல்ல திட்டங்களை கையில் எடுத்துள்ளது. இதன் நேர்மையான செயல்பாடுகளால், இணைந்து செயல்பட வந்துள்ளேன். என், 25வது வயதில், ‘உலகில் எதற்காக இருக்கிறோம்?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது, விவேகானந்தரின் புத்தகத்தை படித்தேன்.
‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்ற எண்ணம், என்னுள் உருவானது. நான் பிறந்த ஊரான, மஹாராஷ்டிர மாநிலத்தின் ராலேகான்சித்தி கிராமத்தில், ஒரு காலத்தில், 400 ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள நீராதாரங்களை மீட்டு, மாசுபடாத நீரை விவசாயத்துக்கு வழங்கியதால், தற்போது, 1,200 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.
ஒரு நாளுக்கு, அங்கு, 300 லி., மட்டுமே பால் உற்பத்தி இருந்த நிலையில் தற்போது, 5,000 லி., உற்பத்தி செய்யப்படுகிறது. கிராமத்தின் நீர்வள ஆதாரம், விவசாய வளர்ச்சி குறித்து இதுவரை, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பார்வையிட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் குடிநீரே இல்லாமல் இருந்த என் கிராமத்தில், இப்போது, ஆண்டு முழுவதும் தேவையான அளவுக்கு நீர் கிடைக்கிறது. நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புக்கான மாதிரி கிராமமாக, ராலேகான்சித்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன், 40 சாராயக் கடைகள் இருந்தன; இப்போது, ஒரு கடை கூட இல்லை. பீடி, சிகரெட் பழக்கமும், பயன்பாடும் இல்லை. நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் இந்நிலைக்கு மாறினால், மறுமலர்ச்சி ஏற்படும்.
என் வங்கிக் கணக்கில், இருப்புத் தொகை என்று ஒன்றும் இல்லை. கோவிலில் தங்கியுள்ள எனக்கு எதுவும் கிடையாது. என் கரங்கள் சுத்தமாக இருப்பதால், நேர்மை குறித்து பேச, முழு தகுதி உண்டு. இங்கு, ஊழல் பற்றி பேச விரும்பவில்லை.
எதிர்காலத்தில், குடிநீருக்காக சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். குடிநீர் மேலாண்மையில் அறிவியல் ரீதியான முறைகளை கையாள வேண்டும். நதிகள், விவசாய நிலங்களுக்கான வரைபட ஆவணங்கள், அரசிடம் உள்ளன; இதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றி, நதிகளையும் நீராதாரங்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இதுபோன்ற பொதுநலப் பணிகளில், மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டால் நதிகள் பாதுகாக்கப்படும்.”
இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்