நொய்யலை மீட்பது சாத்தியமா?

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நொய்யல். வரலாற்று சிறப்பு மிக்கதும்கூட. சோழர்கள் நொய்யலில் மேற்கொண்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பம் அபாரமானது. ஆற்றின் தண்ணீர் சிறிதும் வீணாகாமல் ஆற்றின் இருபக்கமும் 40-க்கும் மேற்பட்ட குளங்களை கட்டினர். ஆனால், நொய்யலின் இன்றைய நிலை மனம் நோக செய்கிறது. ஆறு இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப்பட்டு அதன் மொத்த நீளமான 160 கி.மீட்டரில் சுமார் 152 கி.மீட்டர் சாக்கடையாக ஓடுகிறது. ஏற்கெனவே நொய்யலை காக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும்கூட தொடர்ந்த பராமரிப்பு மற்றும் அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நொய்யலின் சீர்கேடு மேலும் அதிகமானது.

எப்படி உருவாகிறது நொய்யல்?

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைக் காடுகளின் நீர் பிடிப்பு பகுதிதான் நொய்யலின் முக்கிய நீர் ஆதாரம். இதுதவிர, பெரியாறு எனப்படும் கோவைக் குற்றாலம், சின்னாறு, நீலியாறு, வைதேகி நீர் வீழ்ச்சி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி, ஆனையாறு எனப்படும் கொடிவேரி ஆறு, முண்டந்துறை ஆறு, மசவொரம்பு ஆறு, சாடியாறு, காஞ்சிமா நதி ஆகிய சிறு ஆறுகள் நொய்யலின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை தவிர மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 22 சிறு ஓடைகளும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 12 சிறு ஓடைகளும் நொய்யலில் கலக்கின்றன. மலையிலிருந்து சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு – ஒரத்துப்பாளையம் அணை என பயணித்து கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலை ஆதாரமாகக் கொண்டு சோழர்கள் 32 அணைக்கட்டுகளை கட்டினார்கள் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவற்றில் தற்போது 23 அணைக்கட்டுகளே உள்ளன. அதேபோல் சோழர்கள் உருவாக்கிய 40-க்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது 31 குளங்களே உள்ளன. மற்றவை அழிந்துவிட்டன. இதுவே நொய்யலின் சுருக்கமான வரலாறு.

மலைகளில் இருந்து சமவெளிக்குப் பாயும் நொய்யலின் தொடக்க இடம். | படங்கள்: ஜெ.மனோகரன்

நொய்யலின் பிரச்சினைகள் ஏன்?

கோவை நகரில் நொய்யலுக்கான நீர் ஆதாரங்களாக விளங்கிய தீத்திப்பள்ளம், பீட் பள்ளம், சென்னனூர் பள்ளம், ஸ்பிக் பள்ளம், இருட்டுப் பள்ளம் உட்பட 34 ஓடைகளும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது சாலைகளில் இருக்கும் பாலம் போன்ற அமைப்பில் இருக்கும் சிறு தடுப்புச் சுவர்கள் மட்டுமே ஒரு காலத்தில் ஓடைகள் ஓடியதற்கான சாட்சியங்களாக எஞ்சி நிற்கின்றன. ஓடைகள் அனைத்தும் கட்டிடங்களாகவும் ஊர்களாகவும் மாறிவிட்டன. நொய்யலின் நீர் ஆதாரம் பெருமளவு சுருங்கிப் போனதற்கு இந்த ஓடைகளின் அழிவு முக்கியக் காரணம்.

துணை ஆறுகளின் அழிவு!

நொய்யலின் துணை ஆறுகளில் ஒன்றான மசவொரம்பு ஆறு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மழைக் காலத்தில் இப்போதும் மசவொரம்பு ஆற்றில் ஓடும் தண்ணீர் நொய்யலில் கலக்கிறது. ஆனால், மசவொரம்பு ஆற்றில் நல்லூர்வயல் பகுதியில் உள்ளாட்சி நிர்வாகமே புதியதாக கான்கிரீட் கால்வாயைக் கட்டி மொத்த ஊரின் சாக்கடையையும் கொண்டு சேர்க்கிறது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆற்று விளிம்பில் பள்ளம் வெட்டி தற்காலிகமாக அதில் கழிவு நீரை தேக்கியுள்ளனர்.

மலைகளிலிருந்து இறங்கும் நொய்யல் ஆறு கோவை குற்றாலம் சோதனை சாவடிக்கு அருகில் இருக்கும் பாலத்தின் அடியில் கடந்துச் செல்கிறது. இங்கு புதியதாக ஒரு கான்கிரீட் கால்வாயை கட்டி இருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் ஆற்றின் மிக அருகேயே சாக்கடை கழிவுகளை கலக்க திட்டமிட்டுள்ளது. இதை அடுத்துள்ள முதல் கூடுதுறையில் சின்னாறும் பெரியாறும் கலக்கின்றன. இந்த வனப்பகுதியில் நொய்யல் நதி மிகத் தூய்மையாக ஓடுகிறது. ஆனால், இங்கிருந்து சில கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டாவது கூடுதுறையான பெரியாறும் காஞ்சிமா நதியும் சங்கமிக்கும் ஆலாந்துறையில் ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பூலுவபட்டி பஞ்சாயத்தின் மொத்தக் கழிவு நீரும் திடக் குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுகின்றன. இதுவரை சுமார் 8 கி.மீட்டர் தொலைவுக்கு தூய்மையாக ஓடிவரும் ஆறு அதிகளவு மாசடைவது இங்கு தான். மத்வராயபுரத்தில் ஆற்றின் அருகே தற்போது ஒரு மின் மயானம் அமைக்கப்பட்டு தயார் நிலையி லுள்ளது. இங்குள்ள ஆற்றில் ஈமச்சடங்குகள் மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டும் செயல்பாட்டுக்கு வந்தால் நொய்யல் நதி மேலும் மாசடையும்.

படம்: கோவை புறநகர் பகுதியில் சாக்கடையாக உருமாறிய நொய்யலாறு.

நொய்யலின் முதல் குளமான உக்குளத்தில் நிறைந்து நிற்கின்றன. புதர்கள். மத்வராயபுரத்தில் தினசரி இரவு தொடங்கி காலை வரை ஆற்றில் மணல் திருட்டு நடக்கிறது. இங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கழிவுகளும் ஆற்றில் கலப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள். இரவு நேரங்களில் மலக்கழிவு வாகனங்களில் நேரடியாக ஆற்றில் மலக்கழிவை அப்புறப்படுத்துகின்றனர். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறை ஈமக் கிரியை கழிவுகளால் நிறைந்துள்ளது. இங்குள்ள ஆற்றில்தான் பேரூரின் மொத்த சாக்கடை கழிவுகளும் கலக்கின்றன.

அழியும் நீர்ப் பிடிப்பு பகுதி

நொய்யலின் 244 சதுர மைல்கள் நீர்பிடிப்பு பகுதியை கொண்டது போளுவாம்பட்டி காப்புக் காடுகள். யானைகள் அதிகம் வசிக்கும் காடுகள் இவை. இந்த மலைக் காடுகளை ஒட்டியிருக்கும் பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், தென்கரை, மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துரை, மத்வராயபுரம், இக்கரைபோளுவாம்பட்டி, தென்னமநல்லூர், நரசிபுரம், விராலியூர், தேவராபுரம், குப்பேபாளையம், தொண்டாமுத்தூர், தாளியூர், மருதமலை, வடவள்ளி மலையோரப் பகுதிகள் ஆகிய கிராமங்களை கடந்த 1996-ம் ஆண்டு அரசாங்கம், மலையிட பாதுகாப்பு கிராமங்களாக அறிவித்தது. சமீப காலமாக இந்த கிராமங்களில் மனை வியாபாரம் வரைமுறையின்றி தொடர்வதால் நீர்ப் பிடிப்பு பகுதிகள் மற்றும் யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நொய்யலின் நீர் ஆதாரம் குறைவதுடன் யானை – மனித மோதல்கள் அதிகரித்துள்ளன.

ஆனைகட்டி மலைகளில் உற்பத்தியாகி மாங்கரை தடாகம் வழியாக கோவை நகரை அடைந்து நொய்யலில் கலக்கும் சங்கனூர் பள்ளம் ஓடையில் அப்பகுதியின் மொத்த சாக்கடையும் கலக்கிறது. அவை அப்படியே சிங்காநல்லூர் குளத்தை சென்றடைகின்றன. இவை தவிர கோவை நகரில் நொய்யலின் முக்கிய குளங்களான நரசாம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சிக்குளம் இவற்றில் அனைத்திலுமே மாநகராட்சி நிர்வாகமே சாக்கடையை கலக்கிறது. இங்கெல்லாம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது மாநகராட்சி நிர்வாகம். இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆக்கிரமிப்புகளால் வெள்ளலூர் குளத்துக்கே தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.

செல்வபுரம், தெலுங்குபாளையம், செட்டி வீதி பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், சாயப் பட்டறை, சலவைப்பட்டறை கழிவுகள் தினசரி இரவு நேரங்களில் நேரடியாக நொய்யலில் விடுகிறது. இதனால், ஒட்டர்பாளையம் அணை அதிகாலையில் அமில நுரை பொங்கி அந்தப் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுத்துகிறது. இங்கிருந்து இருகூர் வழியாக சூலூர், சோமனூர் பயணிக்கும் நொய்யல் ஆறு திருப்பூர் மாவட்டதில் நுழைகிறது.

ஒரத்துப்பாளையம் அணை சோகம்!

திருப்பூர் முகப்பு பகுதியாக விளங்கும் மங்கலம் கிராமத்தில் அமிலம் பொங்கி கலங்கி ஓடுகிறது நொய்யல். திருப்பூர் சாயப்பட்டறை, சலவைப் பட்டறை, பனியன் நிறுவனங்களின் கழிவுகள் இங்கே கலப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்த நொய்யலின் தண்ணீர் ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்குகிறது. கடந்த 1993-ம் ஆண்டு மீன் வளத்துறையின் கணக்கெடுப்பின் படி ஒரத்துப்பாளையம் அணையில் 3,85,000 மீன்கள் இருந்தன. அதுவே 97-ம் ஆண்டு 8,01,000 மீன்களாக உயர்ந்தது. ஆனால், அந்த ஆண்டு இறுதியில் ஒரே நாளில் ஒட்டு மொத்த மீன்களும் இறந்து மிதந்தன. அவற்றை எல்லாம் அள்ளி அப்புறப்படுத்தவே மாவட்ட நிர்வாகத்துக்கு பல நாட்கள் ஆகின. இன்று அணையை சுற்றி ஏராளமான விளை நிலங்கள் விஷமாகி ஒன்றும் விளையாத மயான பூமியாகிவிட்டன.

இங்கிருந்து கரிய நிறத்தில் கரூர் மாவட்டத்துக்குள் நுழையும் நொய்யல் 13 கிமீ தூரம் பயணித்து நொய்யல் என்னும் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. கடந்த 99-ம் ஆண்டு முதல் கரூரில் நொய்யல் நதி ஓடும் அஞ்சூர் கிராமம் தொடங்கி நொய்யல் கிராமம் வரை 20,000 ஏக்கர் விவசாயம் அழிந்துவிட்டது.

அரசு நினைத்தால் மட்டுமே முடியும்!

நொய்யல் ஆறு மாசடையும் தொடக்கப் புள்ளி முதல் அதன் கடைசி பகுதி வரை அதன் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து தொகுக்கப்பட்டுள்ளது. ‘சிறு துளி’ உள்ளிட்ட அமைப்புகள் நொய்யல் ஆற்றின் மீள் உருவாக்கம் பணிகளில் ஈடுபட்டாலும் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நொய்யலை ஒருபோதும் மீட்க முடியாது என்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது. ஏனெனில் நொய்யலின் முக்கியப் பிரச்சினை, நகராட்சி கழிவுகள் கலப்பது. ஆனால், அதை செய்வதே அரசாங்கம்தான். அடுத்த பிரச்சினை ரசாயன கழிவுகள் கலப்பது. அதையும் அரசுதான் தடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவு மற்றும் ரசாயன தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே நொய்யலை காப்பது சாத்தியம். அதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

சிறு பட்டறைகள்தான் பிரச்சினையா?

நொய்யல் மீட்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திருப்பூர் பனியன் ஆலை தொழிலதிபர்கள் கூறும்போது, “பல நூறு கோடி முதலீட்டில் தொழில் செய்யும் நாங்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளோம். அவற்றை இயக்காமல் விட்டால் எந்திரங்கள் பழுதாகி வீணாகிவிடும். எனவே, பெரிய நிறுவனங்களான நாங்கள் சுத்திகரித்துதான் தண்ணீரை வெளியே அனுப்புகிறோம். திருப்பூர், கரூர் பகுதியில் குடிசைத் தொழிலைப் போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள், சலவைப் பட்டறைகள் நடத்தப் படுகின்றன. அவற்றிலிருந்துதான் கழிவு நீர் நேரடியாக நொய்யலில் விடப்படுகிறது.” என்றனர். சிறிய அளவில் நடத்தப்படும் பட்டறைகளை ஒருங்கிணைந்த தொழில் மையம் மூலம் முறைப்படுத்தி, அரசாங்கமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தருவதுதான் இதற்கான தீர்வாக அமையும்.

ஆலாந்துறைக்கு அழைப்பு விடுக்கும் ‘சிறுதுளி’

கோவையை சேர்ந்த ‘சிறுதுளி’ அமைப்பு மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தொழில் பிரமுகர்கள், அமைப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து நொய்யலை காக்க புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்த முயற்சிக்கான ஆலோசனையில் ‘தி இந்து’வும் பங்கேற்றது. தொடர்ந்து நொய்யல் நதியின் இன்றைய நிலையை அறிய நேரடியாக அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, நொய்யலுக்கான செயல்திட்டத்தை ‘சிறுதுளி’ அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

படம்: ஆலாந்துறையில் குப்பை கூளமாகக் காட்சியளிக்கும் நொய்யலாறு.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் அதன் தலைமை செயல் அலுவலர் மயில்சாமி ஆகியோர் கூறும்போது, “கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாயும் நொய்யல் கோவை மாவட்டத்தில் மட்டும் 67.7 கி.மீட்டர் பாய்கிறது. ‘நொய்யலை மீள் உருவாக்கும்’ திட்டத்தின் முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு மாசுபட தொடங்கிய இடத்திலிருந்து, ஆற்றை தலா 500 மீட்டர் நீளம் தேர்வு செய்து, ஒவ்வொரு 500 மீட்டர் நீளத்துக்கும் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பது, குப்பைகளை அகற்றுவது, ஆகாயத் தாமரை உள்ளிட்ட புதர்களை அகற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்தப் பணியில் யார் வேண்டுமானாலும், எந்த அமைப்பு வேண்டுமானாலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். இதற்கான தொடக்க விழா மார்ச் 26-ம் தேதி நொய்யலின் இரண்டாவது கூடுதுறையான ஆலாந்துறை ஆற்றுப் படுகையில் நடந்தது . இந்தப் பணிகளை அன்னா ஹசாரே தொடங்கி வைத்தார் .” என்றனர்.

 நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *