உலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
6 கண்டங்களின் 236 ஏரிகள் இதற்காக கடந்த 25 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. 236 ஏரிகளின் நன்னீர்தான் உலகின் பாதி நன்னீர் விநியோகத்தை தீர்மானிப்பதாகும்.
“ஒவ்வொரு பத்தாண்டு காலக்கட்டத்திலும் ஏரிகள் 0.34 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்து வருகிறது. இதனால் நன்னீர் வரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் அச்சுறுத்தப்பட்டுள்ளன” என்று கனடா, டொரண்டோவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவரும் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியவருமான சப்னா ஷர்மா தெரிவித்தார்.
இதனால் குடிநீர் வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் மீன்கள் மற்றும் பிற விலங்குகளின் வாழ்விடங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இந்த ரீதியில் ஏரிகள் வெப்பமடைவதால் தண்ணீரில் பிராணவாயுவை அழிக்கும் நீல-பச்சை பாசிப்படிவின் அளவு அடுத்த நூற்றாண்டு வாக்கில் 20% அதிகரிக்கும். இது மீன்கள் மற்றும் விலங்குகளுக்கு நச்சு விளைவை ஏற்படுத்துவது. மேலும், கரியமிலவாயுவை விட 25 மடங்கு சக்திவாய்ந்த பசுமைக்குடில் வாயுவான மீத்தேன் வெளியேற்றம் அடுத்த 10 ஆண்டுகளில் 4% அதிகரிக்கும்.
கனடா நாட்டு ஏரிகள் உட்பட பனிபடலங்கள் நிரம்பிய ஏரிகளும் காற்றின் வெப்ப அதிகரிப்புக்கு ஏற்ப இருமடங்கு வெப்பமடையும். வட அமெரிக்க கிரேட் ஏரிகள் உலகிலேயே அதிவேகமாக வெப்பமடையும் ஏரிகளில் அடங்கும்.
நூறாண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் திரட்டிய தகவல்கள் மற்றும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகளின் வெப்ப அளவை கணக்கிட்ட நாசா செயற்கைக்கோள் தரவுகளும் இணைக்கப்பட்டு முதன்முறையாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வாகும் இது.
அமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியன் கூட்டத்தில் இந்த ஆய்வின் தரவுகள் அறிவிக்கப்பட்டன. ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழிலும் இந்த ஆய்வின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்