சதுப்பு நிலங்கள் ஸ்பாஞ் போன்றவை. மழை பெய்யும் போது அதிகம் வரும் நீர் இங்கே தங்கி நிலத்தடி நீரை அதிகபடுதுகிறது. சென்னை அருகே வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வரும் பள்ளிகரணை அப்படி ஒரு இடம். ஒரு காலத்தில் இந்த சதுப்புநில பகுதி, கிழக்கில், பழைய மகாபலிபுரம் சாலை வரையும், மேற்கில், தாம்பரம் – வேளச்சேரி சாலை வரையிலும், வடக்கில், வேளச்சேரி கிராமம் வரையும், தெற்கில், கொட்டிவாக்கம் – காரப்பாக்கம் சாலை வரையும் இருந்துள்ளது. இப்போது பல வித ஆக்கிரமிப்புகளால் சுருங்கி உள்ளது. மிச்சம் இருக்கும் இடத்தையாவது காப்பாற்றலாம் என்றால் அங்கே ஆக்கரமிதுள்ளவர்கள் ஹை கோர்டில் மனு போட்டுள்ளனர்.. இதை பற்றிய செய்தி.. தினமலரில் இருந்து…
சென்னையை அடுத்த, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. முதற்கட்டமாக, சதுப்புநிலம் குறித்த பல்வேறு விவரங்களை அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 425 ஏக்கர் நிலத்தை, வனத்துறைக்கு மாற்றம் செய்து, உள்ளாட்சி நிர்வாக துறை, 2012 டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளிக்கரணை, காயிதேமில்லத் நகரில் வசிக்கும், 62 பேர் வழக்கு தொடர்ந்தனர்.தவிர சதுப்புநிலங்களை, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, பட்டா வழங்கக் கோரி, சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
ஜமீனுக்கு சொந்தமா
மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
சோழிங்கநல்லுார் தாலுகாவில் அடங்கியுள்ள இந்த இடம், சதுப்புநில பகுதி; இதில், ஆக்கிரமிப்புகள் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. சதுப்புநில பகுதியை, போலி ஆவணங்கள் மூலம், ‘எட்டயபுரம் ஜமீனுக்கு சொந்தமானது’ எனக் கூறி, நில ஆக்கிரமிப்பாளர்கள் விற்றுள்ளனர். ‘பூமி பாலா’ என்ற அறக்கட்டளைக்கு, 66 ஏக்கர் நிலம் விற்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதி, 80 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது; இங்கு, அபூர்வமான தாவரங்கள் உள்ளன; பறவைகள் வந்து, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது.சதுப்புநில பகுதியில், வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டதால், இயற்கை அளித்த பரிசான சதுப்புநில பகுதி சுருங்கிவிட்டது; இத்தகைய, இயற்கை சூழல் நிறைந்த பகுதி அழிந்துவிடக் கூடாது.சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை, அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையுடன், ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன.
சதுப்புநில பகுதியில், 300 ஏக்கரில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையை எரிப்பதன் மூலம், சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் பறவைகளுக்கும், அபூர்வ தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, இயற்கையான இந்த சுற்றுச்சூழல் பகுதியை, ஒவ்வொருவரும் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையென்றால், அது ஆபத்தில் போய் முடியும். 11 ஆயிரம் ஏக்கர் அளவிலான சதுப்புநில பகுதி, சிறிய அளவாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள, இந்த சதுப்புநிலத்தின் வரைபடத்தை, வனத்துறை அல்லது வேறு எந்த துறையாவது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த வழக்கு விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு, தள்ளி வைக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
62 பேர் தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், காயிதேமில்லத் நகரில் வசிக்கும், 62 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:கடந்த 30 ஆண்டுகளாக, இந்த பகுதியில் நாங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது; குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி, மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. எங்கள் நிலத்தையும் சேர்த்து, வனத்துறைக்கு மாற்றம் செய்து, உள்ளாட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். காயிதேமில்லத் நகர் பகுதியை, காப்புக்காடு என்கிற வரம்பில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.இதுதவிர, சதுப்புநிலங்களை, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, பட்டா வழங்க கோரி, சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அரசிடம், நீதிபதி கேட்டுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் வருமாறு:
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியின், மொத்த பரப்பளவு எவ்வளவாக இருந்தது?
தற்போதைய பரப்பளவு எவ்வளவு? சதுப்புநிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார்; அவர்கள் எவ்வளவு பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர்? ஆக்கிரமிப்பாளர்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? சதுப்புநிலத்தில், குப்பை எந்த அளவுக்கு கொட்டப்படுகிறது?கொட்டப்படும் குப்பை எரிக்கப்பட்டு, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கப்படுகிறதா?
சதுப்புநில பகுதியை தனியாக பிரித்து, அதை சுற்றி ஏன் வேலி அமைக்கக்கூடாது?
சதுப்புநிலத்தை மீட்கவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்