பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தும், அறிவிப்புப் பலகை வைத்தும், எல்லாவற்றையும் மீறி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடக் கழிவுகளைக் கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,581 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில், பெருங்குடி குப்பைக் கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, இடம் வனத்துறை மற்றும் மாநகராட்சி வசம் உள்ளது. வனத்துறை பராமரிப்பில் உள்ள இடம், நீர் நிலைப் பகுதியாக உள்ளது. அங்கு, பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
இயற்கை சமன் நிலையில், முக்கியப் பங்கு வகிக்கும் சதுப்பு நிலங்கள் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சதுப்பு நிலத்திற்கும் ஆபத்து, நெருக்கடி சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, இதன் ஒரு பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்கிற்கு, சில ஆண்டுக்குமுன், சதுப்பு நிலத்தை இரண்டாக பிரித்து, பல்லாவரம்-துரைப்பாக்கம், 150 அடி அகல ரேடியல் சாலை அமைக்கப்பட்டது.
உயிரோடு சமாதி:சதுப்பு நிலத்தின் பரப்பு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைத் தடுப்பதற்கு, சூழல் அமைப்புகள் பல வழிகளிலும் போராடி வருகின்றன. அதையும் மீறி, கட்டடக் கழிவுகளால் அதை மூடி, ஆக்கிரமிக்கும் முயற்சி நடந்து வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழ் உட்பட பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயமே, தன்னிச்சையாக முன் வந்து, வழக்காக எடுத்துக் கொண்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்தது. பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, கடந்த மார்ச் 1ல் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், கடந்த சில மாதங்களாக, இங்கு கட்டடக் கழிவுகள் கொட்டுவது, தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, மீண்டும் கழிவுகளைக் கொட்டி, ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துஉள்ளது.
காசும் கொட்டுது…
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், லாரி லாரியாக கட்டடக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு, இரவோடு இரவாக கொட்டப்படுகின்றன. இவ்வாறு, 150 அடி அகல சாலை ஓரத்திலிருந்து, சிறிது சிறிதாக இந்த சதுப்பு நிலம் மூடப்பட்டு வருகிறது. இருப்பினும், நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அதிகாரிகள், இதனை கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.இரவு நேரத்தில், இப்பகுதியில் போலீசார் ரோந்து வருகின்றனர். அவர்களுக்குத் தெரியாமல், லாரிகளில் வந்து, இங்கு கட்டடக் கழிவைக் கொட்டுவது, சாத்தியமே இல்லை. பணத்தை வாங்கிக்கொண்டே, இதை போலீசார் அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கேற்ப, கொட்டப்பட்ட கட்டடக்கழிவுகளின் மீது, கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
அரசியல் பின்னணியா?
இங்கு கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்கு, உள்ளூர்ப் பிரமுகர்கள் சிலர், மறைமுக ஆதரவு அளிப்பதாக சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாநகராட்சி மூலம், இங்கு எச்சரிக்கை பலகை வைத்தும், அதே பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால், உள்ளூர் அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் சந்தேகம் கிளம்பியுள்ளது. அதிகாரிகள் அமைதி காப்பதால், அது ஆளும்கட்சியா என்றும் கேள்வி எழுகிறது.
சாலையோரம், நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால், அவற்றை எந்தக்காலத்திலும் அகற்றி அவற்றை மீட்டு விடலாம். ஆனால், சதுப்பு நிலங்களை மூடி, அவற்றுக்கு சமாதி கட்டி, ஆக்கிரமிப்பு செய்தால், எக்காலத்திலும் மீண்டும் ஒரு சதுப்பு நிலத்தை யாராலும் உருவாக்க முடியாது. இதை பசுமைத் தீர்ப்பாயம் சொல்லாமலே, உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது.’தடுத்தால் மிரட்டல் வருகிறது!’
இது குறித்து, மாநகராட்சி பெருங்குடி மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவது அதிகரித்து வருகிறது. உரிய கட்டணம் செலுத்தினால், மாநகராட்சி மூலம் கட்டடக் கழிவுகள் அகற்றப்படும். அனுமதி கேட்பது, கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறை இருப்பதால், இரவோடு இரவாக சதுப்பு நிலத்தில் கொட்டுகின்றனர்.
ரோந்து போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் இது நடக்கிறது.லாரிகளை மடக்கி நாங்கள் நடவடிக்கை எடுத்தால், அடுத்த சில நிமிடங்களில், பிரமுகர்களிடம் இருந்து பரிந்துரை அல்லது மிரட்டல் வருகிறது. இப்படியே விட்டால், ஒரு சில ஆண்டுகளில், சதுப்பு நிலம் கட்டட கழிவுகள் மூலம், முற்றிலுமாக மூடப்பட்டு விடும். தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படக்கூடிய கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே சதுப்பு நிலத்தை காப்பாற்ற முடியும். அது, உயர்அதிகாரிகள், கையில் தான் உள்ளது.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்