பாலை வார்த்த பாலாறு

விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றது பாலாறு. பல ஆண்டுகளுக்குப்பின் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலாறு என்றாலே வறண்ட மணல் படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும். ஆற்றில் மீன் பிடித்தது, ஆற்றில் இறங்கி விளையாடியது, பாசனத்திற்கு நீர் பாய்ச்சியது எல்லாம் இளைய தலைமுறை காணாத ஒன்று.

இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் பெய்த மழையால் சில நாட்கள் பாலாற்றில் வெள்ளம் சென்றிருக்கின்றது. 2005-ம் ஆண்டு பெய்த மழையில் லேசான வெள்ளம் சென்றிருக்கின்றது. மற்றபடி எப்போதும் பாலாறு வறண்ட ஆறுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 34 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கண்கொள்ளா காட்சியினை நம் கண்முன் நிறுத்தி இருக்கின்றது பாலாறு.

பாலாற்றில் வெள்ளம் போவதை கேள்விப்பட்ட சுற்றுவட்டாரத்தினர் மழையையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்பம் சகிதமாக வந்து கரையில் நின்று ரசிக்கிறார்கள். தாங்கள் பார்ப்பது நிஜம்தானா என பலரும் தங்கள் கைகளை கிள்ளிப்பார்க்காத குறைதான்.

செங்கல்பட்டிலிருந்து தனது குடும்பத்துடன் பாலாற்றை பார்க்க வந்திருந்த அருள் பிரகாசம்  முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. “பாலாற்றில் வெள்ளம் போவதாக கேள்விப்பட்டேன். பேரன், பேத்தி உட்பட எங்க குடும்பத்துல எல்லோரும் ஆற்றில் வெள்ளம் போவதை பார்க்கனும் சொன்னாங்க. அதனால மழையை கூட பொருட்படுத்தாமல் கிளம்பி வந்திருக்கிறோம்.

ஆற்றில் தண்ணீர் போவதை பார்ப்பதற்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாலாற்றில் வெள்ளத்தை பார்க்கும்போது எனது பால்ய வயது சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. அந்த வயதில் ஆற்றில் வெள்ளம் போவதை கண்டு ஆனந்தமடைந்திருக்கிறோம். சிவாஜி நடித்த ‘செல்வம்’, ஜெமினி கணேசனின் ‘யார்பையன்’ போன்ற படங்களின் சில காட்சிகளை இங்கு படமெடுத்து இருக்கிறார்கள்.

படப்பிடிப்பை காணவரும்போது இந்த ஆற்றில் தண்ணீர் ஓடியதை பார்த்திருக்கின்றேன். அந்த காலங்களில் பாலாற்றில் ஆற்றில் இறங்கி விளையாடுவோம். நீந்தி குளிப்போம், துணி துவைப்போம், வறண்ட காலங்களிலும் இரண்டு கைகளால் மணலை லேசாக தள்ளினால் தண்ணீர் சுரக்கும் அற்புதம் இந்த பாலாற்றில் நிகழும். அதைத்தான் குடிக்க எடுத்துச் செல்வோம். ஆனால் இன்று பாலாறு மாசடைந்து விட்டது.

பாலில் கலந்த நஞ்சு போல பாலாற்றில் மாசு நஞ்சு கலந்துவிட்டது. வணிக குப்பைகளும், தொழிற்சாலை கழிவுகளும் ஆற்றில் கலந்துவிட்டது வேதனையளிக்கின்றது. போதாக்குறைக்கு மணல் திருட்டுக்களால் என் வாழ்நாளில் பாலாற்றை பழைய பொலிவுடன் பார்க்க முடியாதோ என்று கவலைப்பட்டிருக்கிறேன்.” என்கிறார் உணர்ச்சியவயப்பட்ட நிலையில்.

கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்னும் இடத்திலிருந்து ஆந்திராவில் 33 கி.மீ. பயணித்து தமிழகத்திற்கு வருகிறது பாலாறு. தமிழகத்தில் 222 கி.மீ. தூரத்தை கடந்து கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் பகுதியில் கடலில் கலக்கின்றது. சில வருடங்களுக்கு ஒரு முறைதான் ஓடை போல பாலாற்றில் நீர் செல்லும். அந்த நீர்தான் இந்தப்பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரம்.

மழை இல்லாத காலங்களிலும் பாலாறுதான் தாகத்தை தீர்க்கும். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் பாலாற்றுக்கு பெறும் பங்கு உண்டு.

ஆற்றில் தண்ணீர் ஓடாவிட்டாலும் ஆற்றில் இருக்கும் மணல்படுகையில் நீர் சேமிக்கப்பட்டிருக்கும். மணல் பரப்பின் மூலமாக தண்ணீரை கடத்தும். பூமிக்கு அடியில் பாலாறு ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் பாலாற்றுப்படுகையில் விவசாயம் செழிப்பாக இருக்கும்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக பாலாற்றில் உள்ள மணல் துடைத்தெடுக் கப்பட்டு பாலாற்றை நம்பி இருந்த விவசாய நிலங்களும் பாலைவனமாகி வந்தன. சென்னையின் கட்டுமானப்பணிகள் பெரும்பாலும் பாலாறு மணலை நம்பிதான் இருக்கின்றது.

சென்னையை நோக்கி பன்னாட்டு கம்பெனிகள் படையெடுப்பு, ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி என மணலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தது.  2003-ம் ஆண்டிற்கு பிறகு, அரசே மணல் விற்பனை செய்ய தொடங்கியது. கீழே களிப்பான மண் படிவங்கள் தெரியும் வரை எவ்வளவு ஆழம் முடியுமோ அவ்வளவு ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுவிட்டது. சுமார் 40 அடி ஆழம்வரை மணல் துடைத்து எடுக்கப்பட்டு, பாலாறு, ஆறு என்ற அந்தஸ்தையே இழக்கும் அபாயத்திற்கு வந்துவிட்டது.

2011-ல் நல்லகண்ணுவின் முயற்சியால்  பாலாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 2012-க்கு பிறகு பாலாற்றில் மணல் எடுப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இந்த தடை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது பெய்துள்ள மழை விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பாலாறு படுகை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் “பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்திருக்கின்றோம். இருபது ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் இப்போதுதான் வெள்ளம் வருகின்றது.

இப்போது பெய்த மழையில் சுமார் 35 டிம்சி அளவிற்கு தண்ணீர் வீணாக கடலில் கலக்கின்றது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆற்று நீரை சேமிக்க அணைகளை கட்டியிருக்கின்றார்கள்.

12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீருக்காக இதுவரை 400 கோடிக்கு மேல் தமிழக அரசு செலவு செய்திருக்கின்றது. பாலாற்றின் குறுக்கே 100 கோடி ரூபாயில் இரண்டு தடுப்பணைகள் கட்டி இருந்தால், இந்த நீரை சேமித்து இருக்கலாம். அண்டை மாநிலங்களில் கையேந்தும் அவலநிலை ஏற்படாது.

பாலாற்றில் மணல் அள்ளப்பட்டுவிட்டதால் ஆற்றின் ஆழம் அதிகரித்து ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்து விட்டது. பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆற்றுப்பகுதிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீருக்கு பஞ்சம் வரும் என்ற நிலை நிலவிவந்தது. இதனால் விவசாயத்தை விட்டு மக்கள் வெளியேறக்கூடிய நிலையில் இருந்தார்கள். இந்த மழை விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கின்றது. க

ர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தண்ணீர் பாசனத்திற்கு என்று தனி அமைச்சகம் வைத்திருக்கின்றார்கள். அதுபோல் தமிழகத்திலும் பாசனத்திற்கு என்று ஒரு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்” என்றார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நகரமயமாக்கத்தின் காரணமாக சாக்கடை நீர்தான் வீதிகளில் ஓடுகின்றது. ஆறுகளும் ஏரிகளும் கழிவு நீரை சுமக்கும் கால்வாயாக மாறிவிட்டது. இனியாவது சுதாரித்துக்கொண்டு ஆறுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்.

பாலாறு படுகை விவசாயிகள் சங்க தலைவர் மணி, ”எங்களின் வாழ்வாதாரம் பாலாறு. கடந்த பத்து வருடங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மணல் கொள்ளை நடந்து விட்டது. பாலாற்றில் 40 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்கு நீர் கிடைப்பதில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டர் நிலம் பாலாற்றை நம்பி உள்ளது.

மூன்று வகையான பாசனங்களை பாலாற்றிலிருந்து பெற்று வருகின்றோம். ஆற்றில் வரும் வரும் நீரை கால்வாயின் மூலம் கொண்டு சென்று பாய்ச்சுவது ஆற்று வாய்க்கால் பாசனம். ஆறுகள் பள்ளமாக போனதன் விளைவாக ஆற்றிலே நீர் வந்தபோதிலும் பாசனம் பெறமுடியாத நிலையில் உள்ளோம்.

மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் தண்ணீரை கால்வாயில் கொண்டு சென்று மழையில்லாத நேரத்தில் பாயச்சுவது ஏரிப்பாசனம். ஆறுகள் பள்ளமானதால் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் போய் விட்டது. ஆறுகளின் கரை ஓரங்களில் மணற்பரப்பில் ஏற்படும் ஊற்றுக்களில் இருந்து பாசனம் பெறுவது ஊற்றுப்பாசனம். மணல் இருந்தால்தானே ஊற்று இருக்கும். இப்போது பெய்த மழைநீரை சேமிக்க முடியாமல் போனது விவசாயிகளுக்கு அரசு செய்த துரோகம்” என்றார்.

பாலாற்றில் செல்லும் நீரை தடுப்பணைகள் மூலம் சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. இயற்கை அன்னைக்கு சுரந்த கருணை இந்த அரசுக்கு இருக்குமா…

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பாலை வார்த்த பாலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *