`இனியெல்லாம் இயற்கையே..!’ – பசுமை விகடன் இலவச பயிலரங்கு

பேரூராட்சிகள் இயக்ககம், பசுமை விகடன் மற்றும் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹேண்ட் இன் ஹேண்ட் இணைந்து நடத்தும் `இனியெல்லாம் இயற்கையே…’ என்ற பயனுள்ள பயிலரங்கு, 2018 ஆகஸ்ட் 25-ம் தேதி சனிக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், படாளம் கூட்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

 

ஏன் இந்தக் கருத்தரங்கம்? 

சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பேரூராட்சிகள் இருக்கின்றன. தமிழகத்திலுள்ள 528 பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 2100 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகின்றன. அவற்றைத் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழுக்கள் மூலம், வளம் மீட்பு பூங்காவுக்குக் கொண்டு சென்று தரம்பிரிக்கிறார்கள். மட்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம், மண்புழு உரம் ஆகியவற்றைப் பேரூராட்சிகளில் தயாரித்து வருகிறார்கள். இவற்றை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையே பசுமை விகடன் இணைப்புப் பாலமாக இருந்து, இந்த நிகழ்வைச் செயல்படுத்தவிருக்கிறது.

என்னவெல்லாம் நடக்கிறது? 

காலை 9 மணிக்கு விவசாயிகளை வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு மூலிகை சூப் மற்றும் சுண்டல் ஆகியவை வழங்கப்படுகிறது. `கலைமாமணி’ கலைவாணர் குழுவினரின் பொம்மலாட்டத்தோடு நிகழ்ச்சி இனிதே துவங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் தயாரித்து வைத்துள்ள இயற்கை உரம் மற்றும் மண்புழு உரத்தை விவசாயிகளுக்குக் கொடுப்பதை எப்படி முறைப்படுத்தி இருக்கிறார்கள், விவசாயிகள் அவற்றை எப்படிப் பெறலாம் என்பது குறித்து பேரூராட்சி இயக்கக அதிகாரிகள் உரையாற்ற உள்ளார்கள். மேலும், நகரக் கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது குறித்தும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும் விளக்க இருக்கிறார்கள். `தரமான மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?’ என்ற தலைப்பில் முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் உரையாற்றவுள்ளார்.

மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தமிழக அரசு தடைசெய்திருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாழை, பாக்கு மட்டை, கரும்புச் சக்கை, சணல் போன்றவற்றிலிருந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து ஹேண்ட் இன் ஹேண்ட் தரப்பில் விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விவசாயிகளுக்கு உரம் விநியோகப் படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விளக்கம் பெற ஸ்டால்கள்! 

விவசாயிகளுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அரங்கத்துக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் பேரூராட்சிகள் தரப்பில் தயாரித்த உரங்களைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். விவசாயப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களையும், வீட்டிலே உரம் தயாரிக்கும் முறைகள் குறித்தும், பேரூராட்சி தரப்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்த மினியேச்சர்களையும் இங்குக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

குறைந்த விலையில் உரங்கள்! 

இது குறித்துத் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்கக இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, “தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் நாள்தோறும் சராசரியாக 107 மெட்ரிக் டன் அளவுக்கு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. அதோடு 188 பேரூராட்சிகளில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 16 மெட்ரிக் டன் அளவுக்கு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மதுராந்தகம் அருகில் உள்ள கருங்குழியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை முதன் முறையாகச் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்தத் தகவல் தெரியாத காரணத்தால் விவசாயிகள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகுவதில்லை. இதனால் தற்போது இருப்பில் உள்ள 1314 மெட்ரிக் டன் இயற்கை உரத்தை குறைந்த விலையில் கொடுக்க உள்ளோம். மேலும், எந்தெந்தப் பேரூராட்சிகளில் எவ்வளவு உரம் இருக்கிறது, அதன் விலை என்ன, அவற்றை எப்படிப் பெறுவது என்பது குறித்து கருத்தரங்கில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்படும்” என்று அழைப்புவிடுத்தார்.

மாடித்தோட்ட விவசாயிகள்! 

 

உத்தரமேரூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் மா. கேசவன், “மாடித்தோட்டம் அமைப்பதற்கு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயிற்சி கொடுத்து வருகிறோம். பேரூராட்சியில் உற்பத்தி செய்யும் உரங்களை அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறோம். மேலும், மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்குச் செடிகள், விதைகள் ஆகியவை தேவைப்படுகின்றன. அவற்றை அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமிருந்து பெற்று விற்பனை செய்ய இருக்கிறோம். வேஸ்ட் டீகம்போஸர் தயாரிப்பு, முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ உரைவீச்சும் இடம் பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 8667766565 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *