இன்று நம்மாழ்வார் நினைவு தினம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  இன்று  (டிசம்பர் 30). நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை வேளாண்மையை மிக மிக எளிமையாக விளக்கும் அவருடைய உரைகள்தான்.

இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் பேச்சை, கோட்டோவியங்கள் நிரம்பிய காணொளித் தொகுப்பாக வரைந்து ஓவியர் ரஜினிபாபு காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பின்னணியில் நம்மாழ்வாரின் குரல் ஒலிக்க, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஓவியமாக மாறும் அந்தக் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. நம்மாழ்வார் என்ன சொன்னார்? இதோ அவரது வார்த்தைகளிலேயே:

“ பாலைவனத்துலகூட பனைமரம் வரும்னு சொன்னாங்க. ஆனா, தமிழ்நாட்டுல பனைமரம் செத்துக்கிட்டு இருக்கு. அப்பிடின்னா என்ன அர்த்தம்னா, தமிழ்நாடு மிக மோசமான பாலையாக மாறிக்கொண்டிருக்கிறது.

இது ஏன் நடக்குது? விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம், நம் சுற்றுச்சூழலைப் பாதிக்குது. அது பூமிக்குள்ள இறங்குது. மழைத்தண்ணியோட சேர்ந்து இறங்குது. முந்நூறு அடிக்குக் கீழ இருந்து குடிக்கத் தண்ணி எடுத்தீங்கன்னா, அதுவும் விஷமாவே இருக்கு.

எங்கெங்கயோ சுத்தி புல்லு, வைக்கோலு திங்கிற மாட்டுக்குள்ள விஷம் போயிருது. மாடு கொடுக்கிற பாலு விஷமாயிடுச்சு. பாலைக் குடிக்கிற பெண்கள் விஷமாயிட்டாங்க. பெண்ணு குழந்தை பெத்து பால் கொடுக்கும்போது, தாய்ப்பாலே விஷமாயிடுச்சு.

இதைவிட மோசமான நிலைமையை உலகத்துல வேற எங்கயும் பார்க்க முடியாது. ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்கே விஷத்தை கொடுக்கிறான்னு சொன்னா, இது உளரீதியாவும், உடல் ரீதியாவும் நாம மோசமான நிலையில இருக்கிறதைச் சொல்லுது. அப்ப, இதிலிருந்து விடுபடுவது எப்படி?

பூமிக்குத் தேவை கழிவு

இயற்கையில சில விதிகள் இருக்கு. அந்த இயற்கை விதிகள் நீங்க, நான் எல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடியே இருந்தது. நாம செத்துப்போனதுக்கு அப்புறமும் அது இருக்கும். அந்த இயற்கை விதிகளை மட்டும் நாம தெரிஞ்சுக்கிட்டோம்னா போதும். வயலுக்கு என்ன போடணும்னு ஒரு விவசாயி கிட்ட கேட்டா 40 விழுக்காடு நைட்ரஜன் போடணும், அதாவது என் போடணும், 20 பி போடணும், 20 கே போடணும்னு சொல்றாங்க. அந்த ரசாயனத்தைப் போடப் போட என்ன ஆகுதுன்னா, பூமியில இருக்கிற உயிரெல்லாம் செத்துப்போகுது.

செத்துப் போகுதுன்னா இந்த மண்ணுல இருக்கிற உயிரை எல்லாம் வளர்க்கிறதுக்கு என்ன செய்யணும்? ரசாயனத்தைப் போடக் கூடாது. விஷத்தைப் போடக் கூடாது. போட்டா அது செத்துப்போயிடும். அதுக்குப் பதிலா அது கேட்கிறது, கழிவுகளைத்தான்.

ஆட்டுப் புழுக்கையப் போடும் போது, மாட்டு சாணியப் போடும்போது, கோழிக் கழிவை போடும்போது, இந்த இலை தழைகளை வெச்சு சாணித் தண்ணியத் தெளிச்சு கம்போஸ்ட் ஆக்கி மண்ணுல போடும்போது நாம என்ன செய்யிறோம்? நுண்ணுயிர்களுக்கு சாப்பாடு தர்றோம். பூமி கழிவுகளை மட்டும்தான் கேட்கும். ஆகையினால நாம கழிவுகளை மட்டும் பூமிக்குத் திருப்பித் தர பழகிட்டோம்ணா, பூமி நமக்கு நல்லபடியாத் திருப்பிக் கொடுத்துக்கிட்டே இருக்கும்.

வேருக்கு உணவு தரும் இலை

‘அக்ரிகல்சர் இஸ் ஹார்வெஸ்டிங் தி சோலார் எனர்ஜி’. இந்த சூரிய வெளிச்சத்தை அதிகபட்சமா, நாம எப்படி அறுவடை செய்யப்போறோம்? அதுதான் இங்கே தேவை. ரெண்டாவது என்னன்னாக்க, அதுக்குத் துணையா நாம செய்ய வேண்டியது ‘ஃபீடிங் தி பாக்டீரியா’.

‘ஃபோட்டோசிந்தசிஸ்’னு ஒன்னு இருக்கு. சூரியன்ல இருந்து வர்ற வெளிச்சத்தைப் பச்சை இலை வாங்கி, அதை சர்க்கரையா மாத்திடுது. அது சர்க்கரையைத் தின்னுட்டு, மிச்சத்தை வேருக்கு அனுப்பிடுது. அந்த வேரு எல்லா இடத்துலயும் பரவலா ஓடி பூமியில் இருக்கிற தண்ணிய எடுத்து, மறுபடியும் பச்சை இலைக்கு அனுப்புது. இலை, வேருக்கு சாப்பாடு போடுதே ஒழிய, வேர் இலைக்கு சாப்பாடு போடலை.

அதனால வேர் மூலமா இலைக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்னு சொன்னா, அது சயின்ஸ் இல்ல. முதல்ல இதை முடிவு பண்ணிட்டீங்கன்னா யாரை வேணும்னாலும் நாம திருப்திப்படுத்தலாம்.

நுண்ணுயிர் தரும் உரம்

அப்ப நாம ஆட்டுப் புளுக்கை, மாட்டுச் சாணிய மண்ணுல போடுறோமே, அப்ப அது என்ன? அது என்னன்னா, மண்ணுல இருக்குற நுண்ணுயிரிங்கதாங்க. இன்னைக்கு, அதை நிறைய பாக்கெட்டுல எல்லாம் போட்டு விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். அசோஸ்பயிரில்லம்கிறோம், ரைசோபியோம்கிறோம், பாஸ்போபாக்டீரியம்கிறோம், சூடோமோனாசுங்கிறோம். அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள். இந்த கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் காத்துல இருக்கிற நைட்ரஜனை எடுத்து செடிக்கு விநியோகம் பண்ணுது.

பூமியில உறைஞ்சு கிடக்கிற பாஸ்பரஸை இளக்கி விநியோகம் பண்ணுது. அந்த பூமியில இருக்கிற ஒவ்வொரு பொருளையும் பொட்டாஷா மாத்தி, விநியோகம் பண்ணுது. நீங்க எதை எதையெல்லாம் கடையில இருந்து வாங்கியாந்து போடணும்னு நினைக்கிறீங்களோ, அது எதையும் வாங்கியாந்து போட வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வளவையும் பூமியில இருக்கிற நுண்ணுயிரிங்க செய்யுது.

பூமியை பாதுகாக்க…

அப்ப பூமியோட வளத்தைப் பாதுகாக்கிறதுக்கு மூணு இருக்கணும். ஒண்ணு ‘ஃபிசிக்கல் ப்ராபர்ட்டி ஆஃப் தி சாயில்’. நிலம் பொல பொலன்னு இருக்கணும். ரெண்டாவது, ‘பயலாஜிக்கல் ப்ராபர்ட்டி ஆஃப் தி சாயில்’. அதுல உயிரினங்கள் இருக்கணும். நுண்ணியிரிங்க இருக்கணும், மண் புழு இருக்கணும், பூரான் இருக்கணும், தவளை இருக்கணும், நண்டு இருக்கணும். மூணாவது, இவைகளெல்லாம் வேலை செஞ்சுதுன்னா, செடிக்கு வேணுங்கிற எல்லா ரசாயனமும் மண்ணுக்கு வந்துரும். அதுக்குப் பேரு ‘கெமிக்கல் ப்ராபர்ட்டீஸ்’.

ஃபிசிக்கல் ப்ராபர்ட்டி, பயலாஜிக்கல் ப்ராபர்ட்டி, கெமிக்கல் ப்ராபர்ட்டி மூணும் சேர்ந்தாத்தான் நிலவளம். அந்த நிலம்தான் செடிகளை வளர்த்து நமக்கு வேணும்கிறதை எல்லாம் வாரி வாரிக் கொடுக்குது”.

வீடியோ பார்க்க

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *