புதுக்கோட்டை இயற்கைக்குப் புறம்பாகச் செயல்பட்டு, உலகை அழித்துவிடாதீர்கள் என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். புதுக்கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனம், இயற்கை விவசாயிகள் அமைப்பு ஆகியவை இணைந்து வாகைப்பட்டி இயற்கை விவசாயப் பண்ணையில் புதன்கிழமை நடத்திய பாரம்பரிய விவசாய மீட்பு மாநாட்டைத் தொடக்கிவைத்து மேலும் அவர் பேசியது:
“விவசாயத்தில் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் விவசாய நிலங்கள் மட்டுமல்லாது கால்நடைகள், மனிதர்கள் என யாவும், யாவரும் விஷமாகிக்கொண்டிருக்கிறோம்.
ரசாயனம் கலந்த உணவால் இன்றைக்கு உலகே நடுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற நாம் இயற்கையை நேசிக்கவும் அதைப் போற்றிப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
நாடு முழுதும் பசுமைப் புரட்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் கொல்லப்பட்டதால், நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் குற்றப் பரம்பரையினராகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மண்புழு விவசாயிகளின் நண்பன்; அதை நாம் பூச்சிக்கொல்லிகளால் அழித்துவிட்டோம். அதேபோல் நாம் வேண்டாம் என்று கழிக்கும் புல், வைக்கோல், தவிடு யாவும் மாடுகளுக்கு உணவாகிறது. அவை தரும் பால் நமக்கு உணவாகிறது.
இப்படி ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதுதான் இயற்கைச் சமநிலை. இயற்கை விவசாயம் இந்த இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்கிறது. நவீன விவசாயமோ அழிக்கிறது. இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இயற்கைக்குப் புறம்பாகச் செயல்பட்டால், இயற்கைச் சமநிலைப் பாதகத்தை நாம் ஏற்படுத்தினால், அது இயற்கையைப் பாதிக்கும். உலகையே அழித்துவிடும். ஆகையால், இயற்கையைப் பாதுகாக்க மீண்டும் நம் பாரம்பரிய விவசாய முறைக்கு நாம் திரும்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்