இயற்கை உரங்கள் தயாரிக்கும் அசாருதீன் அனுபவங்கள்

விளம்பர ஏஜென்ஸி நடத்திவந்த அசாருதீன், இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியது எதேச்சையான ஒன்று.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அசாருதீனுக்குத் திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது சின்ன வயது ஆசை. அதற்காகவே பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். நிர்வாகத் திறமையும் அவசியம் என்பதற்காக எம்.பி.ஏ.வும் முடித்தார்.

சென்னையில் திரைத் துறை சார்ந்த வேலைகளில் சுமார் ஒன்றரை ஆண்டு ஈடுபட்டார். இரண்டு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் அசாருக்கு உண்டு. பிறகு விளம்பர ஏஜென்ஸி ஒன்றை நடத்தினார்.

இயற்கை உர உற்பத்தி

அசாருதீனின் குடும்பத்துக்குச் சொந்தமான டீத்தூள் கம்பெனியில் இருந்து டீத்தூள் கழிவைச் சிலர் வாங்கிச் செல்வார்களாம். அவற்றை வைத்து நாமே ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தபோது, அசாருடைய தந்தையின் நண்பர் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவர் உயிரி தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால், அவரை வைத்தே நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் அசாரின் தந்தையும் ஒரு பங்குதாரர்.

பெரியவர்கள் இருவரும் சேர்ந்து உரம் தயாரிக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே அசாரின் பங்களிப்பு அதில் இருந்தது. தந்தையின் நண்பர், வேறு வாய்ப்பு கிடைத்து நிறுவனத்திலிருந்து விலகிவிட, அதைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அசாரின் கைகளுக்கு வந்தது. அதுதான் அவரது பாதையையும் மாற்றிப்போட்டது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

“பிசினஸுக்கும் இயற்கை உரத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? எனக்கு ஆரம்பத்துல எதுவுமே புரியலை. என்னால இதைச் செய்ய முடியுமான்னு ரொம்ப மலைப்பா இருந்துச்சு. ஆனா, இயற்கை உரங்களைப் பத்தி தெரிஞ்சுக்கத் தொடங்கினதுமே என் ஆர்வம் அதிகமாயிடுச்சு. ரசாயன உரங்களால மண்ணோட வளம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

இயற்கை உரங்களால மட்டும்தான் மண் வளத்தைப் பாதுகாக்க முடியும்” என்று சொல்லும் அசாருதீன், இயற்கை உரத் தயாரிப்பு குறித்த தேடலில் இறங்கியிருக்கிறார். இவரது தேடலுக்கு இணையமும் கொஞ்சம் உதவியிருக்கிறது. பிறகு இந்தத் துறை சார்ந்த கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சி முகாம் என எது நடந்தாலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.

“இயற்கைக் கழிவுகளை மக்கச் செய்தால் உரம் கிடைக்கும் என்பதை மட்டும்தான் தெரிந்துவைத்திருந்தேன். ஆனால், இயற்கை உரங்கள் குறித்த என் தேடல் புது உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஏற்கெனவே உரத் தயாரிப்புக்கு நாங்கள் வைத்திருந்த ஃபார்முலா பெரிதாக இருந்தது. தவிர உரத் தயாரிப்புக்கான காலமும் அதிகம்.

அதனால் நான் வேறொரு ஃபார்முலாவை உருவாக்கி, அதைப் பரிசோதித்தும் பார்த்தோம். எதிர்பார்த்ததைவிட நல்ல பலன் கிடைத்தது” என்று விளக்குகிற அசார், கோயம்புத்தூரை அடுத்த அன்னூரில் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் உரத் தயாரிப்பு கிடங்கு அமைத்திருக்கிறார். மாதம் இரு நூறு டன்வரை உரம் தயாரிப்பதாகச் சொல்லும் அசாருதீன், தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ப உரத் தயாரிப்பைத் திட்டமிடுகிறார்.

அங்கீகாரம்

“டீ, காபி, மஞ்சள் உற்பத்தி நிறுவனங்களில் கிடைக்கும் கழிவைப் பெறுகிறோம். இவற்றுடன் மாட்டுச்சாணம், தென்னை நார் கழிவு, அடிப்படை நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றைக் கலந்து மக்கச் செய்து உரம் தயாரிக்கிறோம்.

உரத் தயாரிப்பின் எந்த நிலையிலும் ரசாயனம் சேர்க்கப்படுவதில்லை” என்று தங்கள் உரத் தயாரிப்பின் சிறப்பு குறித்துச் சொல்கிறார். சின்ன அளவில் செடிகள் வளர்க்கிறவர்களுக்காக அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் போன்றவற்றை இயற்கை உரங்களை உற்பத்தி செய்து தருகிறார்கள்.

“ஒரு முறை சேலத்துல நடந்த வேளாண் கண்காட்சில கலந்துகிட்டோம். அங்கே வந்திருந்த வேளாண் உயர் அதிகாரி ஒருத்தர் எங்கள் உரத்தின் தரத்தைப் புகழ்ந்தார். ‘என்னதான் இயற்கை உரமா இருந்தாலும் ப்ராஸஸ் செய்யும்போது குறைந்தபட்சம் நைட்ரஸ் கலப்பாவது இருக்கும்.

ஆனா, உங்க உரத்துல எந்தவிதமான செயற்கைக் கலப்புமே இல்லை. ரொம்ப நல்ல விஷயம் இது’ன்னு பாராட்டினார். துறை சார்ந்த அதிகாரிங்க கிட்டேயிருந்து கிடைச்ச அந்தப் பாராட்டுதான் எங்களுக்குக் கிடைச்ச அங்கீகாரம்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் அசார்.

இவருடைய அடுத்த இலக்கு இயற்கை பூச்சிவிரட்டிகள். திடம், திரவம் என இரண்டு நிலைகளிலும் அதைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறார். நம் பாரம்பரிய விவசாய முறைகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தும் வருகிறார் அசாருதீன்.

இவற்றுடன் இயற்கை விவசாயத்திலும் இறங்கியிருக்கிறார் அசார். குத்தகைக்கு எடுத்த நிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாகப் பயிரிட்டுவருகிறார். மரவள்ளிக் கிழங்கு அறுவடை முடிந்த நிலையில், தற்போது நாட்டு நேந்திரமும் அதனிடையே ஊடு பயிராகச் செடி அவரையையும் பயிரிட்டிருக்கிறார். செடி முருங்கையும் இங்கே உண்டு.

புதிய சவால்

“என் நிலத்தில் ஏற்கெனவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்திருக்கிறார்கள். அதன் தன்மையை மாற்றவே ஆறு மாதங்களானது. இப்போது வாழை அறுவடை முடியும் தறுவாயில் இருக்கிறது. எங்கள் விளைபொருட்களில் ரசாயனக் கலப்பு இருக்கிறதா என்று செய்த பரிசோதனையில், மிகக் குறைந்த அளவு ரசாயனம் இருப்பதாக முடிவு வந்தது.

ஆண்டு கணக்கில் ரசாயனம் கலக்கப்பட்ட மண்ணின் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும். அடுத்த சாகுபடியில் ஒரு துளிகூட ரசாயனத்தின் எச்சம் இருக்காது” – நம்பிக்கையுடன் சொல்கிறார் அசாருதீன்.

தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை, தனக்குப் புதியதொரு சவாலை எதிர்கொள்ளும் திறமையை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்.

“தொடர்ந்து பெய்த மழையால செடி முருங்கையை வேர் அழுகல் நோய் தாக்கிடுச்சு. வேப்பம் புண்ணாக்குடன் கடுக்காயை உடைத்து ஊறவைத்து, அந்தத் தண்ணீரைக் குறிப்பிட்ட அளவு வேர்களில் ஊற்றிய பிறகு பாதிப்பு குறைய ஆரம்பிச்சிடுச்சு. இந்த மாதிரியான சிக்கல்கள்தான் நம்மைப் புது விஷயத்தைத் தேடிப் போக வைக்குது”
என்கிறார்

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “இயற்கை உரங்கள் தயாரிக்கும் அசாருதீன் அனுபவங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *