இயற்கை பூச்சி விரட்டிகள்

விவசாயிகள் பயிர் பாதுகாப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணித்து, தாவர வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்,’ என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.

”வேம்பும், வேளாண்மையும் பழங்காலம் முதல் இணைந்த ஒன்று. இறை நம்பிக்கையுடன் இயற்கை வைத்தியமாகவும், வேம்பு பொருட்கள் பயன்படுகின்றன. பயிர் பாதுகாப்பில் வேம்பின் பெருமையை உழவர்கள் முழுமையாக உணர வேண்டும்,” என்கிறார் மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் இந்திராகாந்தி.அவர் மேலும் கூறியதாவது:

வேப்பங்கொட்டை, வேப்பெண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கில் உள்ள முக்கிய ராசாயன பொருளான ‘அஸாடிராக்ஷன்’ (Azadirachtin) எனும் மூலக்கூறு பயிர்களை தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

வேம்பு சார்ந்த பொருட்கள் ரசாயன பூச்சி கொல்லிகளுக்கு சமமான வீரியம் உடையவை. சில வகையான பூச்சிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து பெருகக்கூடிய தன்மையுடையது. ஆனால் வேம்பு பொருட்களை எதிர்த்து அவைகளால் பெருக முடியாது.

பல்வேறு பயிர்களை தாக்கும் பூச்சிகள், வேம்பு பொருட்களைப் பயிர் பாதுகாப்பு மருந்தாக பிரயோகித்த பயிர்களை உண்ணாமல் வெறுத்து ஒதுக்கி விடுவதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. இப்பொருட்கள் உபயோகித்த பயிரை பூச்சிகள் உண்ணும்போது, அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் பொரிக்கும் திறனும் குறைகிறது.

வேப்பங்கொட்டைச் சாறு:

வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் தயார் செய்ய, நன்கு காய்ந்த துாள் செய்யப்பட்ட பத்து கிலோ வேப்பங்கொட்டையை ஒரு சாக்குத் துணியில் முடிச்சாக கட்டி பத்து லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் மூட்டையை எடுத்து விட்டு, வடிகட்டிய கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து 200 லிட்டராக ஆக்கவும், அதுனுடன் ஒட்டுத்

திரவமான ‘டீப்பால்’ 200 மில்லி அல்லது ‘ஹவெட்’ 200 மில்லி கலந்து கைத்தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கர் பயிருக்கு தெளிக்க வேண்டும்.

வேப்பெண்ணெய் கரைசல்:

வேப்பெண்ணய் கரைசல் தயாரிக்க, 200 மில்லி டீப்பால் எனும் ஒட்டு திரவத்தை ஒரு வாளியில் எடுத்து, அதனுடன் 6 லிட்டர் வேப்ப எண்ணெய்யை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்க வேண்டும். இதனுடன் 200 லிட்டர் தண்ணீரை குச்சி வைத்து கலக்கி கொண்டே ஊற்ற வேண்டும். பால்போல் இருக்கும் இக்கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். தாவர பூச்சிக்கொல்லி மருந்து பயிருக்கும், உயிருக்கும் உத்தரவாதம் தருகிறது என்றார்.

தாவர வகைபூச்சிக்கொல்லி:

கால்நடைகள் உண்ணாத ஆடாதோடா, நொச்சி இலைகள். ஒடித்தால் பால் வரும் எருக்கு, உமத்தை இலைகள், தண்டுகள். கசப்பு சுவை மிக்க வேம்பு,சோற்றுக்கற்றாழை இலைகள், தண்டு, விதைகள். உவர்ப்பு சுவை மிக்க காட்டாமணக்கு.கசப்பு, உவர்ப்பு சுவை மிக்க வேப்பங்கொட்டை, எட்டிக்கொட்டை போன்றவை தாவர வகை பூச்சிக்கொல்லிகள்.

இவை பயிர் வளர்ச்சிக்கும், அவற்றை உண்ணும் உயிரினங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *