ஆனைமலை அருகே கல்லுாரி மாணவர், இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ரிஷி பிரானேஷ், 20. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் முதுகலை உயிர் அறிவியல் படித்து வருகிறார். இவர், நடப்பு பருவத்தில், ஆனைமலை இந்திரா நகர் அருகேயுள்ள தனது வயலில், இயற்கை விவசாயத்தை பின்பற்றி, பாரம்பரிய நெல் விதையான மாப்பிள்ளைச்சம்பா ரகத்தை சாகுபடி செய்துள்ளார்.
கல்லுாரியில் படிக்கும்போதே நெல் சாகுபடியில் ஈடுபடுவதால், விவசாயிகளின் பாராட்டை பெற்றுள்ளார். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து, ரிஷி பிரானேஷ் பகிர்ந்து கொண்டதில் இருந்து.அப்பா நெல் விவசாயம் செய்து வருகிறார். முழு ஊரடங்கினால் வீட்டில் இருந்து ‘ஆன்லைன்’ வாயிலாக படிப்பதால், அப்பாவுடன் சேர்ந்து நெல் விவசாயத்தை கவனித்தேன். பெரும்பாலான விவசாயிகள், அதிகப்படியான ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி நெல் சாகுபடி செய்கின்றனர்.இந்நிலையில், மக்களுக்கு ரசாயனம் இல்லாத, ஆரோக்கியமான நெல் வழங்கவும், பாரம்பரிய நெல் ரகங்களை காக்கவும் முடிவெடுத்தேன்.
எங்கள் வயலின் ஒரு பகுதியில் ஒன்னரை ஏக்கரில், 160 நாட்கள் சாகுபடி காலம் கொண்ட, பாரம்பரிய நெல் வகையான மாப்பிள்ளைச்சம்பா ரகத்தை சாகுபடி செய்துள்ளேன். விழுப்புரத்தில் பாரம்பரிய நெல் விவசாயியிடம், நெல் விதைகள் பெற்று சாகுபடி செய்துள்ளேன்.முதற்கட்டமாக நிலக்கடலை, எள், ஆமணக்கு, தட்டை, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து, பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்யப்பட்டது. அதன்பின், மக்கிய சாணத்தில், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் சேர்த்து, ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்கப்பட்டது.இதை அடியுரமாக இட்டு, திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. உயிர் ஊக்கியாக, நாட்டுச்சர்க்கரை, பயிறு மாவு, மாட்டு கோமியம், சாணம் கலந்து, வயலிலேயே ஜீவாமிர்தம் தயாரித்து தெளிக்கப்பட்டது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு எண்ணெய் கரைசல் தெளிக்கப்பட்டது.
பெரும்பாலும், ‘யூ டியூப் வீடியோக்கள்’ பார்த்து, இயற்கை உரம் தயாரித்து, நெல் சாகுபடி செய்து வருகிறேன்.மேலும், ஆனைமலை வேளாண்துறை அதிகாரிகள், முன்னோடி இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி செய்ய தேவையான அறிவுரைகள் வழங்கி, ஊக்குவிக்கின்றனர். விரைவில் நெல் அறுவடை செய்து, தொடர்ந்து இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வேன்.இவ்வாறு, நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்