இயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்!

‘ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை கடைபிடிக்கிறோம்,” என்கிறார், சென்னை மா விவசாயி முரளி.

சிறந்த மா விவசாயி என, முதன்முறையாக இயற்கை விவசாயியான முரளிக்கு விருது கிடைத்துள்ளது பெருமை. சென்னையைச் சேர்ந்த முரளி புள்ளியியல் பட்டதாரி. பங்குதாரர் ஹரிசேதுராமன் ஐ.ஐ.டி.,யில் சிவில் இன்ஜினியராக பணியாற்றியவர்.

இருவரும் இணைந்து மதுராந்தகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பொன்னம்மையில் 62 ஏக்கரில் கூட்டு விவசாயம் செய்கின்றனர். ரசாயன விஷம் கலக்காத உணவை தருவது தான் விவசாயத்தின் தர்மம் என, தங்களது அனுபவத்தை விளக்கினர்.

இருபதாண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்தனை இது. உணவில் விஷம் கலப்பது தர்மமா. பாலில் ஒரு துளி விஷம் கலந்து கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா. நிறைய விளைச்சல் வரும் என்று விஷத்தை சேர்ப்பது நியாயம் கிடையாது. இருபதாண்டுகளுக்கு முன் தோட்டத்தை ஒருங்கிணைக்கவில்லை. எந்தெந்த ஊர்களில் என்னென்ன விசேஷம் என பார்த்து தேடி அலைந்தோம்.
ஊர் ஊராக சென்று அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந்த் ரக மரக்கன்றுகளை வாங்கி நட்டோம்.

அல்போன்சா ரகம் மே மாதத்துடன் முடிந்து விடும். பங்கனபள்ளி, இமாம்பசந்த் ரகங்கள் ஏப்., கடைசியில் சீசன் ஆரம்பிக்கும். ஜூனில் பழங்கள் கிடைக்கும். ஜூன் 10க்குபின் ருமானி வரும். நீலம் ரகத்தில் உள்ளுக்குள் வண்டு இருக்கும் என்பதால் தவிர்த்து விட்டோம். 62 ஏக்கரில் 5300 மாமரங்கள், 300 சப்போட்டா மரம், 100 தென்னை மரங்கள் உள்ளன.

பஞ்சகவ்யம் தயாரிக்க இளநீர் தேவைப்படுவதால் தென்னை மரங்கள் வைத்துள்ளோம். தேவைப்பட்டால் உயிர்பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவோம். போதிய வெளிச்சமின்மை, காற்றோட்டம், மண் தன்மை காரணமாக தான் ‘கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடுவது போல’ பூச்சிகள் வந்து தொந்தரவு செய்யும். வெளிச்சமும், காற்றோட்டமும் இருந்தால் பூச்சி தொந்தரவு குறைவாகவே இருக்கும்.

11 மாடுகள் உள்ளன. கன்றுக்குட்டிகள் தான் பாலை குடிக்கும். நாங்கள் கறப்பதில்லை. தோட்டத்தில் களை எடுப்பதில்லை. மாடுகளை அவ்வப்போது நிழலில் இடம் மாற்றி கட்டி வைத்தால் களையாக வளர்ந்திருக்கும் புற்களை சாப்பிடும்.

கடந்தாண்டு மழையால் மரங்கள் பூக்கவே இல்லை. இந்தாண்டு பருவம் தப்பிவிட்டது. பூஞ்சானம், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாது. இந்தாண்டு உற்பத்தி குறைவு தான்.

மாம்பழங்களை பறித்து 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அதன்பின் துடைத்து விற்போம். சென்னையில் வந்து வாங்குபவர்களுக்கு பழமாக கொடுப்போம்.டில்லி, மும்பை, கோல்கட்டாவிற்கு காயாக அனுப்புவோம்.

முயற்சி தான் முக்கியம். இயற்கை விவசாயம் எல்லோரும் செய்யலாம் தான். ஆனால் விற்பனை முயற்சியை துவங்குவது தான் முக்கியம். மண்டியில் கொட்டினால் கழுதையும், குதிரையும் ஒரே விலைதான் போகும்.

விவசாய அறிவோடு தொழில்நுட்ப அறிவும் தானாக வந்து விடும். இதை சொல்லி தருவதற்கு ஆளில்லை. நிறைய பேரை கவனித்து தான் முன்னேற வேண்டும், என்றனர்.

இவர்களிடம் பேச 09380691203 .
எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *