திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அருகே மண்வளத்தைக் காக்கும் வகையில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இயற்கையான முறையில் வாசுதேவன் விவசாயம் செய்து வருகிறார்.
பாரம்பரிய நெல் விதையான ஆத்தூர் கிச்சலி சம்பா, பூங்கா, அறுபதாம் குறுவை ஆகியவற்றை வாங்கி வந்து, ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களை இட்டு சாகுபடி செய்து வருகிறார். மேலும் பயிருக்கு இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், நுண் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை தெளித்து, அறுவடை செய்கிறார்.
இயற்கை உரங்களைக் கொண்டு பயிர் செய்வதால் பூச்சித் தாக்குதல் குறைவாக உள்ளது. அத்துடன் மண் வளத்தைக் காக்கும் மண் புழுக்களும் அதிகரித்துள்ளன. தற்போது, இயற்கை உரங்களைக் கொண்டு பயிர் செய்யும் நெல் ரகத்துக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் வாசுதேவன் கூறுகிறார்.
மேலும் ஒவ்வொரு முறையும் பூச்சி விரட்டிகளை வாங்கும் செலவை தவிர்க்கும் நோக்கில் நாட்டுப் பசுக்களை வாங்கி, அவற்றின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சேகரித்து, குறிப்பிட்ட இலை தழைகளைச் சேர்த்து தாமே இயற்கை பூச்சிவிரட்டிகளையும் தயார் செய்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் பாரம்பரிய விதைநெல் ரகங்களை வாங்கி வந்து பயிரிட்டுள்ளதாகக் கூறும் வாசுதேவன், ஒவ்வொரு முறையும் புதியவகை நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார். இதற்காக இயற்கை விவசாயம் குறித்த ஏராளமான புத்தகங்களையும் வாங்கி அவர் குறிப்புகள் எடுத்துக் கொள்கிறார்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்