ரசாயன உரங்களையே பயன்படுத்தி நிலக்கடலை உற்பத்தி செய்வதைவிட விவசாயிகள் இயற்கை வழி வேளாண் மூலம் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறமுடியும் என திரூர் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தற்போது இயற்கை வேளாண் வழியில் நிலக்கடலை உற்பத்தியில் அதிக மகசூல் பெறமுடியும் என திரூர் நெல் அறிவியல் நிலையத்தில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சாகுபடி முறை:
இதன் பருவகாலங்கள்:
- ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் இதன் பருவ காலங்கள் ஆகும்.
- விதையின் பரிமாணத்தையும் இடத்தையும் பொறுத்து ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ வீதம் பயிரிடலாம்.
- மண்பாங்கான நிலத்துக்கு 15-க்கு 15 செ.மீ. என்ற முறையிலும், சாதாரண நிலத்தில் 30-க்கு 10 செ.மீ. என்ற இடைவெளியில் பயிரிட வேண்டும்.
- தொடிப்புழுதி உண்டாகும் வரை நன்கு உழவு செய்ய வேண்டும்.
- இறுதி உழவுக்குப் பின்னர் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம் இடவேண்டும்.
- விதைத்த 45 நாள்கள் கழித்து 400 கிலோ ஜிப்சம் உரமாக இடவேண்டும்.
நீர்ப்பாசன முறை:
- விதைப்புக்கு பிறகு உடனடியாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
- அதை தொடர்ந்து 5-ம் நாள்களுக்குப் பிறகு 2-ம் பாசனம், பூக்கும் பருவமான 20 நாளுக்குப் பின்னர் 3-ம் பாசனம், அதைத் தொடர்ந்து 30 நாள்களுக்குப் பின்னர் 4-ம் பாசனம் செய்ய வேண்டும்.
- 40 நாள்கள் கழித்து வேர் முளை விடும் பருவத்திலும், 50 நாள்கள் கழித்து ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும்.
- இதையடுத்து காய் பிடிக்கும் பருவமான 60-ம் நாள், அதை தொடர்ந்து 70, 80 என 110 நாள்கள் வரை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
- விதைப்பிற்கு 110 நாள்கள் கழித்து அறுவடை காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேர் அழுகல் நோய்:
- வேர் அழுகல் நோயை தடுக்க விதைத்த 30 நாள்களுக்குப் பின்னர் 50 கிலோ தொழு உரம், 50 கிலோ மணல் ஆகியவற்றுடன் பி.எப். பொருளை கலந்து உரமாக இட வேண்டும்.
அறுவடை:
- சரியானநேரத்தில் போதுமான ஈரம் மண்ணில் இருக்கும் போதுஅறுவடை செய்ய வேண்டும்.
- அறுவடைக்குப் பின்னர் நீண்ட நாள்களுக்கு நிலக்கடலை கொடியை வயலில் விடக் கூடாது.
- அதிகமான சூரிய வெளிச்சத்தில் நிலக்கடலையை காய வைக்க கூடாது.
- தரையில் இருக்கிற ஈரம் தாக்காதவாறு தரையின் மேல் பரப்பில் வறண்ட மணலைப் பரப்பி அதன் மேல் நிலக்கடலை மூட்டைகளை அடுக்க வேண்டும்.
- அவ்வாறு செய்வதன் மூலம் விதை முளைக்கும் திறனையும், கால அளவையும் அதிகரிக்கச் செய்யும்.
- இதுபோன்ற முறையில் நிலக்கடலை பயிரிட்டால் விவசாயிகள் அதிக மகசூல் மூலம் பயனடையலாம்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் திரூர் நெல் அறிவியல் நிலையத்தில் உழவியல் பேராசிரியர் முரளிதரன், உதவிப் பேராசிரியர் மணிமேகலை ஆகியோரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என திரூர் நெல் அறிவியல் மையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்