இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதிக லாபம் மற்றும் மகசூல் பெறவும் இயற்கை விதை நேர்த்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இயற்கை விதை நேர்த்தி முறை:

விவசாயிகள் தங்களின் விதைகளை இயற்கை முறையில் தயார் செய்யப்படும் ஆட்டூட்டக்கரைசல் (ஆட்டுப்புழுக்கை, ஆட்டு சிறுநீர், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், வாழைப்பழம், இளநீர், கடலைப் பிண்ணாக்கு, கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை) அல்லது பஞ்சகவ்யா கலவையை (சாணம், மாட்டு சிறுநீர், பால், தயிர், நாட்டுச்சர்க்கரை, வாழைப்பழம், கரும்புச்சாறு, கள், ஈஸ்ட் மற்றும் கடலைப் பிண்ணாக்கு) 300 மில்லி கிராம் என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம்.
நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.
இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.

இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும். அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும். பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும், பூச்சிகள், நோய் தாக்குதல்கள் இருக்காது.
அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை பஞ்சகவ்யா அல்லது ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நிழலில் காய வைத்து விவசாயிகள் எளிதாக சேமிக்கலாம். இதன் வாயிலாக விதைகளை பூச்சிகளும், நோயும் தாக்காது. முனைப்புத் திறனும் அடுத்த பருவத்திலும் குறையாமல் பாதுகாக்கப்படும்.

பிற பயன்கள்: நெல், தக்காளி நாற்றுகளை, வாழைக் கன்றுகளை பஞ்சகவ்யா மற்றும் ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது பூஞ்சானம், வைரஸ் மற்றும் வேர் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை வேளாண் பொருள்களை கொண்டு செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். மேலும் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடியும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *