இயற்கை விவசாயசத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலிச் சம்பா…

இயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் நோக்கி வருகிறார்கள். அதே நேரத்தில், ஆண்டுக்கணக்கில் ரசாயன உரங்களைக் கொட்டிப் பழகிய முந்தைய தலைமுறை விவசாயிகளில் பெரும்பாலானோர், இயற்கை முறைக்கு மாறத் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இயற்கை விவசாயம் குறித்துத் தன் தந்தையிடம் எடுத்துச் சொல்லி பெரும் முயற்சிக்குப் பிறகு, அவரை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியிருக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்.

திருநெல்வேலி, பானான்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழக்காடுவெட்டி கிராமத்தில் சதீஷ்குமாரின் நெல்வயல் இருக்கிறது. சாலை ஓரமாக இருந்த வயலில், காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன கிச்சிலிச்சம்பா நெற்பயிர்கள். தன் தந்தை சுப்பிரமணியனோடு வயலில் வேலை செய்து கொண்டிருந்த சதீஷ்குமாரைச் சந்தித்தோம்.

“தாத்தா காலத்திலிருந்து விவசாயம் செய்துட்டுருக்கோம். நான் சென்னையில் இருக்கிற பிரைவேட் பேங்க்ல சாஃப்ட்வேர் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்துட்டுருக்கேன். கடந்த 16 வருஷமா சென்னையிலதான் இருக்கேன். மாசம் ஒரு முறைதான் ஊருக்கு வருவேன். ஊருக்கு வர்ற சமயங்கள்ல வயலுக்குப் போவேன்.

நான் வயல்ல இருக்குற சமயங்கள்ல பூச்சிக்கொல்லி, உரம் எதையாவது வயல்ல பயன்படுத்துனாங்கன்னா எனக்குத் தும்மல், தலைவலி வந்துடும். அந்த வாசனை எனக்கு அலர்ஜியா இருந்துச்சு. எதனால எனக்கு ஒத்துக்கலைனு இன்டர்நெட்ல தேடும்போது தான், இயற்கை விவசாயம், நம்மாழ்வார் ஐயா, ‘பசுமைவிகடன்’ புத்தகம் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.

நம்மாழ்வார் ஐயா பேசி பதிவு செஞ்ச வீடியோக்களையெல்லாம் பார்த்த பிறகுதான், எனக்கு ரசாயன உரங்களைப் பயன் படுத்துறப்போ ஏற்படுற தீமைகளைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்.

அதைப்பத்தியெல்லாம் அப்பாகிட்ட சொன்னேன். அப்பா, இயற்கை விவசாயம் பத்தி நான் சொன்னது எதையுமே நம்பலை. போன வருஷம்தான், அப்பாவையும் அழைச்சுக்கிட்டு வானகம் பண்ணையில நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்துகிட்டேன்.

பயிற்சிக்குப் பிறகுதான் அப்பாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பயிற்சி முடிஞ்சு வந்த கையோடு, ஒரு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குனு ஒதுக்கினோம். அதுல தொழுவுரம் போட்டுப் பலதானியங்களை விதைச்சு மண்ணை வளமாக்கி இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம்” என்றார் சதீஷ்குமார். அவரைத் தொடர்ந்து பேசிய சுப்பிரமணியன், “வி.ஏ.ஓவா வேலை பார்த்து ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ விவசாயம் பார்த்துட்டுருக்கேன்.

பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்ததுல இருந்தே உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தான் விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். இருபது, இருபத்தஞ்சு வருஷமா அப்படியே பழகிட்டதால… நம்பிக்கை இல்லாமத்தான் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். பயிற்சி எடுத்த பிறகுதான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. பயிற்சி சமயத்துல, எங்க பகுதியில இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்குற இசக்கி நடராஜனோட போன் நம்பர் கிடைச்சது.

அவர்கிட்ட பேசினப்போ, பணகுடியில் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்குற சமுத்திரபாண்டி மகேஷ்வரனை அறிமுகப்படுத்தினார். இவர்தான், பலதானிய விதைப்புல இருந்து அறுவடை வரை ரொம்ப அக்கறையாகச் சொல்லிக்கொடுத்தார். அவர் கொடுத்த யோசனைபடிதான் மொத்த நிலத்துலயும் ஆரம்பிக்காம, ஒரு ஏக்கர் நிலத்துல மட்டும் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம். போன கார்த்திகை மாசம் 80 சென்ட் நிலத்துல கிச்சிலிச்சம்பா நெல்லை விதைச்சு இயற்கை முறையில பராமரிச்சுட்டுருக்கோம். இப்போ அறுவடையாகுற நிலையில இருக்கு” என்ற சுப்பிரமணியன் வயலுக்குள் அழைத்துச் சென்றார்.

பயிர்களைக் காட்டிய படியே பேசிய சுப்பிரமணியன், “2 ஏக்கர் நிலத்துல அம்பை-16 ரக நெல் இருக்கு. மூன்றரை ஏக்கர் நிலத்துல கர்நாடக பொன்னி இருக்கு. 2 ஏக்கர் நிலத்துல சக்கை, நாடன், ரசகதலினு வாழை போட்டு இருக்கோம். இதையெல்லாம் இன்னும் இயற்கைக்கு மாத்தலை.

முதல் முறையா கிச்சிலிச் சம்பாவை மட்டும்தான் இயற்கை முறையில சாகுபடி செஞ்சுருக்கோம். ரசாயன உரம் போட்டு விளைவிச்சு இருக்குற மத்த ரகங்களைவிட, இயற்கை முறையில பராமரிச்ச கிச்சிலிச்சம்பா நல்லா தளதளன்னு வளர்ந்துருக்கு. எப்படியும் 80 சென்ட் நிலத்துல 15 கோட்டை நெல் (ஒரு கோட்டை என்பது 144 கிலோ) கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம்.

எப்பவுமே நாங்க நெல்லா விற்பனை செய்றதில்லை. அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்வோம். அதே மாதிரியே கிச்சிலிச்சம்பாவையும் அரிசியாவே விற்பனை செய்யலாம்னு முடிவெடுத்துருக்கோம். பணகுடியில இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்றதுக்குச் சந்தை இருக்கு.

அதனால, விற்பனைக்குப் பிரச்னை இருக்காதுனு நினைக்கிறேன். இப்போதைக்குக் கிச்சிலிச்சம்பா புழுங்கல் அரிசி, ஒரு கிலோ 70 ருபாய்னு விற்பனையாகுது. அதே விலைக்கே விற்பனை செஞ்சுடலாம்னு இருக்கோம். அடுத்த போகத்துல மொத்த நிலத்துலயும் இயற்கை முறையிலதான் நெல் சாகுபடி பண்ணப்போறோம்” என்றார்.

நிறைவாகப் பேசிய சதீஷ்குமார், “எங்க அப்பாவை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினதே எனக்குக் கிடைச்ச பெரிய வெற்றி. முதல் முறையா செய்யும்போது, மகசூல் கிடைக்காட்டினாலும் பரவாயில்லை. அதோட முக்கியத்துவத்தை அப்பாவுக்கு உணர்த்தணும்னுதான் நினைச்சேன். ஆனா, எதிர்பார்த்ததைவிடப் பயிர் நல்லா வந்துருக்கு. இனி நானே சொன்னாலும் எங்கப்பா இயற்கை விவசாயத்தை விடமாட்டார். சாலையோரம் எங்க வயல் இருக்குறதால அக்கம்பக்கத்து விவசாயிங்க, இயற்கை விவசாயத்துல விளையுற பயிரைப் பார்க்க வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல எங்க பகுதியில நிறைய பேர் இயற்கைக்கு மாறிடுவாங்க” என்றார், சந்தோஷமாக.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

80 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் கிச்சிலிச்சம்பா சாகுபடி செய்யும் முறை குறித்துச் சுப்பிரமணியன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

கிச்சிலிச்சம்பா சாகுபடி செய்யக் கார் (வைகாசி) மற்றும் சம்பா (கார்த்திகை) பட்டங்கள் ஏற்றவை. தேர்ந்தெடுத்த 80 சென்ட் நிலத்தை உழுது, பல தானிய விதைப்புச் செய்ய வேண்டும். அவற்றில் பூவெடுத்ததும் மடக்கி உழுது 3 டிராக்டர் மட்கிய சாணத்தைக் கொட்டிப் பரப்பி நன்கு உழ வேண்டும். 5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைத்துக்கொள்ள வேண்டும். 10 கிலோ கிச்சிலிச்சம்பா விதைநெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி… மேலே மிதந்து வரும் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி விதைநெல்லை ஒரு சணல் சாக்கில் போட்டுக் கட்டி, வைக்கோலை மூடாக்காகப் போட்டு விட வேண்டும். அடுத்த நாளில் விதைநெல் மணிகளில் முளைப்பு எடுத்திருக்கும். முளைப்பு எடுத்த நெல்மணிகளை நாற்றங்காலில் தூவி விட வேண்டும். ஒரு வாரத்துக்குள் விதைகள் முளைத்துவரும். 8-ம் நாளில், 10 லிட்டர் ஜீவாமிர்தத்தை நாற்றங்காலுக்கான பாசனநீரில் கலந்து விட வேண்டும். 20-ம் நாளுக்குமேல் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.

10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவை ஊற்றி அக்கரைசலில் நாற்றுகளின் வேர் மூழ்கும்படி வைத்து எடுத்து, பிறகு முக்கால் அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 20-ம் நாள் களை எடுத்து 180 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 20 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் கொடுத்து வர வேண்டும். 30-ம் நாளில் இருந்து 18 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளித்து வர வேண்டும்.

பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 70-ம் நாளுக்கு மேல் கதிர் பிடித்து 80-ம் நாளுக்கு மேல் கதிர்களில் பால் பிடிக்கும். 110-ம் நாளுக்குமேல் கதிர்கள் முற்றத் துவங்கும். 140-ம் நாளுக்குமேல் அறுவடை செய்யலாம்.

மூலிகைப் பூச்சிவிரட்டி

வேப்பிலை, பப்பாளி இலை, நொச்சி இலை, எருக்கன் இலை, ஆமணக்கு இலை, ஊமத்தன் இலை, சோற்றுக்கற்றாழை, பிரண்டை, ஆவாரை இலை, அரளி இலை ஆகியவற்றில் தலா 1 கிலோ அளவு எடுத்துப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அவற்றுடன் தலா 100 கிராம் அளவு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து உரலில் இட்டு இடித்து, ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

இதில் 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் ஊற்றிப் பாத்திரத்தை மூடி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு தீயை அணைத்து அப்படியே அரை மணி நேரம் வைத்திருந்து மீண்டும் கொதிக்க விட வேண்டும். இப்படி 4 முறை கொதிக்க வைத்து இறக்கி, மூடிமீது துணி சுற்றி காற்றுப் புகாதவாறு இறுக்கமாகக் கட்டி இரண்டு நாள்கள் வைத்திருந்தால் பூச்சிவிரட்டி தயார். இக்கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

தொடர்புக்கு, சுப்பிரமணியன்,
செல்போன்: 9442406525
சதீஷ்குமார்,
செல்போன்: 9840037787

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *