இயற்கை விவசாயத்தின் அட்சய பாத்திரம் அசோலா!

அசோலா‘ பயன்படுத்தும் முறை குறித்து கூறும், அதன் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பு கூறுகிறார்:

  • கிராமப்புற மக்களால், ‘கம்மல் பாசி’ என்று அழைக்கப்படும் அசோலா, ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி.
  • அதுவும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு, அசோலா ஒரு அட்சய பாத்திரம் என்றே சொல்லலாம்.
  • மண்ணை வளப்படுத்துவது மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பிலும், முக்கிய பங்கு வகிக்கிறது.
  • அசோலாவை ஒருமுறை வளர்க்கத் துவங்கி விட்டால், பலமுறை வளர்ந்து பலன் கொடுக்கும். குறைந்த செலவில், எளிய முறையில், அசோலாவை வளர்க்க முடியும்.
  • அதற்கு, தொட்டியில், 7 செ.மீ., முதல், 10 செ.மீ., உயரத்துக்கு தண்ணீரை தேக்கிக் கொள்ளவும். பாலித்தீன் ஷீட் மற்றும் செங்கற்களை பயன்படுத்தியும், தரையிலேயே தொட்டியை உருவாக்கி கொள்ளலாம்.
  • சூரிய ஒளி படும் இடத்தில், இந்தத் தொட்டி இருப்பது அவசியம்.
  • தொட்டியிலிருக்கும் தண்ணீரில், சாணம், 1 கிலோ, பாறைத்துாள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டு கலக்க வேண்டும்.
  • அடுத்த ஒரே வாரத்தில், 10 மடங்கு அளவுக்கு, அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டுமென்றால், சாணம் மற்றும் பாறைத்துாளை தொட்டியில் போட்டால் போதும். அப்படியே பெருக ஆரம்பித்து விடும்.
  • நெல் பயிரில் ஏக்கருக்கு, 20 கிலோ என்ற அளவில், அசோலாவை இடலாம். நெல் வயலில் பச்சை போர்வை போர்த்தியது போல் படர்ந்திருக்கும். இதனால், நீர் ஆவியாவது தடுக்கப்படும்;
  • நெற்பயிரில் ஏற்படும் களைகளும் கட்டுப்படும். வழக்கத்தை விட கூடுதலாக, விளைச்சல் கிடைக்கும்.
  • நெல் அறுவடை வரை, அசோலாவை வயலில் வைத்திருக்க கூடாது. இரண்டாம் களை எடுக்கும் போது, அசோலாவை வயலிலேயே மிதிக்க விட வேண்டும். இதன் மூலம் தழை, மணி, சாம்பல் போன்ற முக்கிய சத்துகள், பயிர்களுக்கு கிடைக்கும்.
  • நெல் சாகுபடியை பொறுத்தவரை, மூன்று போகம் அசோலாவை தொடர்ந்து இடுபொருளாக பயன்படுத்தி வந்தால், அந்த வயலில் நல்ல விளைச்சல் கிடைக்கும்; மண் வளமும் பெருகி விடும்.
  • அடுத்த போகத்தில் எந்த பயிரை சாகுபடி செய்தாலும், நல்ல விளைச்சல் கிடைக்கும்.
  • அந்த அற்புதமான உயிர் உரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • முதல் முறை அசோலாவை வளர்க்கும் போது, சிலருக்கு சரியாக வளராது; அடுத்த முறை சாணம், பாறைத்துாளை சரியான அளவில் பயன்படுத்தினால், நிச்சயம் சிறப்பாக வளர்ந்து, பலன் கொடுக்கும்.
  • எனவே, முதல் முயற்சியில் தடை ஏற்பட்டால், தயங்கி விட்டு விட வேண்டாம்.தொடர்புக்கு: 09600612649

 

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *