இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி

கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற்கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன் மூலம் தென்னை, மா, வாழை போன்ற பயிர்களை, 75 வயது முதியவர் சாகுபடி செய்து, சாதனை புரிந்து வருகிறார்.

விவசாயத்தில், ரசாயன உரங்கள் பயன்பாட்டால், மனிதனினுக்கு பல்வேறு நோய் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, விவசாயிகள், இயற்க்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், காய்கறிகளுக்கும் சந்தையில் தனி வரவேற்பும், விலையும் கிடைக்க துவங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி அடுத்த நேரலகிரியை சேர்ந்தவர் அஸ்வத்நாராயணன், 75. இவர், கர்நாடகா மாநில போக்எவரத்து கழகத்தில் வேலை பார்த்து விட்டு ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு பின், நேரலகிரியில் உள்ள தனக்கு சொந்தமான, எட்டு ஏக்கர் நிலத்தில், தென்னை, மா, வாழை, சப்போட்டா, பப்பாளி போன்றவற்றை சாகுபடி செய்துள்ளார்.

இவர், ஒரு பசு மாடு மற்றும் ஒரு கன்றை வளர்த்துக் கொண்டு, அதில் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு இயற்கை உரங்களை தானே தயாரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.

ரசாயன உரங்களை கொண்டு சாகுபடி செய்பவர்களை காட்டிலும், இவர் அதிக உற்பத்தி செய்து, விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மேலும், தான் உற்பத்தி செய்த இயற்க்கை உரத்தை, தோட்டக்கலை துறைக்கு இலவசமாகவும், இவர் வழங்கி வருகிறார்.

அஸ்வத்நாராயணன் கூறியது:

  • கடந்த, 2002ம் ஆண்டு, ஹரித்துவாரில் சென்று, இயற்கை உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்று வந்தேன்.
  • அதன் பிறகு, மாட்டு சாணத்தில் இருந்து, பஞ்ச காவியம் தயாரித்து, மரங்களுக்கு உரமாக போட்டு வருகிறேன்.
  • மேலும், மரம் மற்றும் செடிகளுக்கு நோய் ஏற்பட்டால், அதற்கு தெளிப்பதற்காக, கோமியம், 100 லிட்டர், வேப்ப இலை, 25 கிலோ, பச்சைமிளகாய், 10 கிலோ, இஞ்சி, 10 கிலோ, பூண்டு, 10 கிலோ, புகையிலை, 10 கிலோ ஆகியவற்றை அரைத்து, கலந்து, 40 நாள் ஊற வைக்கிறேன்.
  • அதன் பின், அதை வடிகட்டி, ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி கலந்து, மரம் மற்றும் செடிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கிறேன்.
  • இந்த கரைச்சலை தெளித்தால், மரம் மற்றும் செடிகளை தாக்கும் அனைத்து நோய்களும் சரியாகிவிடுகிறது. இதனால், உற்பத்தியும் அதிகமாகிறது.
  • இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மா, மற்றும் தேங்காய்களை, பலரும் வாங்கிச் செல்கின்றனர்.
  • இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த விரும்புவோர், என்னை அணுகினால், இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *