மன்னார்குடி அருகே ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே உளுந்து, காய்கறி பயிர்களை செழித்து வளர செய்து, இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ரசாயன உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், உளுந்து மற்றும் காய்கறிகளால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் என்றும், பயிருக்கு உயிர்ச்சத்து கொடுக்கும் தன்மையை மண் இழக்கும் என்றும் பரவலாக பேசப்படும் நிலையில், மன்னார்குடி அருகே உள்ள சிங்கங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராசு என்பவர் கடந்த 3 ஆண்டு களாக தனது 33 சென்ட் நிலத்தில் ரசாயன உரத்தை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறைப் படி உளுந்து பயிரை சாகுபடி செய்து இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்து இருக் கிறார்.
செழித்து வளர்ந்த பயிர்
இவர் தனது வயலில் முற்றிலும் தொழு உரம் அதாவது சாண உரத்தை மட்டுமே பயன்படுத்தி பயறு வகை பயிர்களையும், காய்கறிகளையும் விளைவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே இந்த உளுந்து பயிர்கள் மாறி, மாறி வரும் மழை, வெயிலை தாக்குப்பிடித்து செழித்து வளர்ந்து பசுமையுடன் காட்சி அளிக்கின்றன.
இதுபற்றி விவசாயி செல்வராசு “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசாயன உரத்தை தான் பயன்படுத்தி வந்தேன். இதன் காரணமாக மண்ணின் தன்மை மாறியது. இதை கவனித்து வந்த நான் பழைய பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்ய முடிவு செய்து, தொழு உரத்தை பயன்படுத்தி வருகிறேன்.
தொழு உரத்தை பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக 75 நாள் வயதுடைய பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிர் 45 நாட்களிலேயே நல்ல முதிர்ச்சியுடன் காணப் படுகிறது.
இதேபோல பயறு வகை பயிர்களை போல புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்கிறேன். இயற்கை முறையை பின்பற்றி விளைவிக்கப்படும் காய்கறிகள் ரசாயன முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விட நல்ல நிலையில் காட்சி அளிக்கின்றன.
மன்னார்குடி பகுதியில் நடைபெறும் இயற்கை விவசாயம் குறித்து வேளாண்மை விரிவாக்க அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 4 மினிவேன் அளவுள்ள தொழு உரத்தை மட்டுமே பயன்படுத்தி விவ சாயி செல்வராசு உளுந்து, பயறு மற்றும் காய்கறிகளை பயரிட்டுள்ளார். எந்தவித ரசாயன உரங்களையும் அவர் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக பயறு, மற்றும் புடலங்காய் கொடி மிகவும் செழிப்பாகவும், வனப்பாகவும் காணப்படுகிறது. இதை பின்பற்றி மற்ற விவசாயி களும் கோடை பருவத்தில் இயற்கை முறைப்படி சாகுபடி செய்து வருமானம் பெறலாம்.
நன்றி: தினத்தந்தி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இதில் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் ஐயா
வாழ்த்துக்கள்