பொட்டக்காடு மாதிரியும் அல்லாமல், விளையும் பூமியாகவும் அல்லாமல் கிராவல் மண், கள்ளிச்செடிகள் நிறைந்த கரடு, முரடான கிராவல் காட்டில் இயற்கை விவசாயம் செய்து சாதிக்கிறார் விவசாயி ஏ.கே.முருகானந்தம். கூட்டுறவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 44 வயது நிரம்பிய முருகானந்தம் தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்பதற்காக சோர்வடையவில்லை.

‘லக்னோ 49’ ரகம்
தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராவல் காட்டில் கள்ளிச்செடிகளை வெட்டி சுத்தப்படுத்தினார். கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி அழித்தார். ஆழ்துளை கிணறு அமைத்தார். நிலத்தை சமன் செய்து மூன்று அடி வீதம் 100 பள்ளங்களை தோண்டினார். அதில் நாட்டு மாட்டின் சாணம் தலா 5 கிலோ வீதம் மண்ணுடன் கலந்து வீரிய ஒட்டு ரகத்தை சேர்ந்த ‘லக்னோ 49’ கொய்யா கன்றுகளை நடவு செய்தார். 11 மாதம் கடந்த நிலையில் குறைந்தளவு விதைகள், அதிகளவு சதைப்பகுதி என கொய்யா ஒன்று 500 கிராம் எடையில் அதிக ருசியுடன் காப்புக்கு வந்துள்ளது.
கிராவல் காட்டு கொய்யா
கிராவல் காட்டை கொய்யா காடாக மாற்றியது குறித்து முருகானந்தம் கூறியதாவது: தேவசேரி எனது சொந்த ஊர். இதனருகே ஆதனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சல்வார்பட்டியில் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கரில் கள்ளிச்செடிகள் மிகுந்து காணப் பட்டன. வெட்ட வெளியில் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகளவு இருந்தது. கள்ளிச் செடிகளை அகற்றி இடத்தை சுற்றிலும் வேலி அமைத்தேன். தினமும் காலை 7:00 முதல் காலை 11:00 மணி வரை தோட்ட வேலைகளை கவனித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் தோட்டக் கலைத்துறையில், லக்னோ 49 ரக கொய்யா கன்று ஒன்று 60 ரூபாய்க்கு வாங்கி நடவு செய்தேன். இலைகள், பூக்களின் கீழ் மாவு பூச்சிகள் அடை அடையாய் அப்பின. அவற்றை வெறும் தண்ணீரை தெளித்து அழித்தேன்.
பஞ்ச தந்திர தொழில்நுட்பம்’
செடிகளுக்கு இயற்கையான சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக கோமியம் மூலம் பஞ்ச கவ்யம், ஜீவாமிர்தம்,
வேப்பங்கொட்டை புண்ணாக்கு, பூச்சிகளை அழிக்கும் இஞ்சிப் பூண்டு கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல் என இயற்கை முறையிலான கொய்யா வளர்ப்பில் ‘பஞ்ச தந்திரம்’ தொழில்நுட்பத்தை கையாண்டேன்.
இதை தோட்டக்கலைத்துறை மூலம் தெரிந்து கொண்ட பலர், எனது தோட்டத்துக்கே வந்து கொய்யாவை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
மரம் ஒன்றில் 30 கிலோ கொய்யா கிடைக்கிறது. செலவுகளை கழித்து 100 மரங்களில் இருந்து மாத வருமானம் சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. ஊடுபயிராக நாட்டு முருங்கை, வாழை, பப்பாளி, கீரை, தக்காளி நடவு செய்துள்ளேன்.
ரசாயன உணவுக்கு குட்பை
தினமும் காலை இரண்டு மணி நேரம் தோட்டத்தை பராமரிக்கிறேன். ஏனைய நேரங்களில் அலங்காநல்லூரில் செருப்புக்கடை, சிமென்ட் கடையை பார்த்து கொள்கிறேன். மதுரை தோட்டக்கலைத்துறை மூலம் கொய்யா கன்றுகளை மானிய விலையில் பெற்று மேலும் இரண்டு ஏக்கரில் கொய்யா நடவு செய்யவுள்ளேன். கொய்யாவிற்கு விலை எப்போதும் ஏறுமுகம் தான். ரசாயன கலப்பு இன்றி இயற்கை முறையில் பழங்களை விளைவித்து வழங்குவது முழு திருப்தியை
தருகிறது. உடலுழைப்பு, வருமானம் கிடைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
தொடர்புக்கு 09843379014
– கா.சுப்பிரமணியன், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்