“”இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும்” என நெல்லையில் நடந்த உணவுத் திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
நெல்லை தினமலர், நன்னெறித் தொடர்பகம், ஸ்ரீராம் குரூப்ஸ், ஜானகிராம் ஓட்டல், ராஜா போட்டோ ஸ்டூடியோ, சிகரம் நல்லெண்ணெய் ஆகியன இணைந்து நெல்லை டவுனில் இயற்கை உணவுத் திருவிழாவை நடத்தியது.
விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது
பசு மாட்டை தாயாகவும், தெய்வமாகவும் பார்கிறோம். பசுவின் மூலம் பெறப்படும் பஞ்ச கவ்யம் உடலில் ஏற்படும் நோயை நீக்குகிறது. வெளிநாட்டினர் பசு மாட்டை பால் வழங்கும் இயந்திரமாக பார்க்கின்றனர்.
இயற்கை ஒரு போதும் தவறு செய்வதில்லை. உடலும் தனது கடமையை செய்ய தவறியதில்லை.
மனிதன் எந்த உணவு உண்டாலும் 3 மணி நேரம் உடலில் தங்குகிறது. அதற்கு ஏற்ப இடைவேளை விட்டு சாப்பிடுவது நல்லது.
ஒருவேளையாவது அடுப்பு பற்ற வைக்காமல் உணவு தயாரித்து சாப்பிட வேண்டும். பின் படிப்படியாக அடுப்பின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
பெரும்பாலனவர்களுக்கு சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்பது கூட தெரிவதில்லை. விலங்குகள், கால்நடைகள் போன்வற்றிருக்கு எப்படி சாப்பிடுவது என்பது தெரியும் என்பதால், அதற்கு முறையாக கழிவுகள் வெளியேறுகின்றன.
நம் நாட்டில் உணவை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆட்சியாளர்கள் பசுமை புரட்சியால் உணவு உற்பத்தி அதிகரிப்பு என கூறுகின்றனர். அப்படி என்றால் விவசாயியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்.
புற்றுநோய்க்கு நவீன ஆஸ்பத்திரிகள் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நோய்க்கு இயற்கை முறையில் மருத்துவ சிகிச்சை உள்ளன.
நம் நாட்டில் காபி, டீ, புகையிலை போன்வற்றின் பயன்பாட்டால் 75 சதவீதமான நோய்கள் வருகின்றன. டீ , காபி குடிப்பதால் பசியை ஆற்றாமல், பசியை தெரியாமல் செய்கிறது. சிலர் டீ, காபி குடித்தால் பணியை களைப்பின்றி செய்வதாக கருதுகின்றனர். மேற்கண்டவற்றை குடிப்பதால் ரத்தம் கட்டியாகிறது.
அதற்கு பதிலாக களைப்பு இன்றி பணி செய்ய குளிர்ந்த நீரை குடிப்பதோடு, தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்தால் புத்துணர்வுடன் களைப்பின்றி தொடர்ந்து பணி செய்ய முடியும்.
பால் சாப்பிடுபவர்களுக்கும் நோய் வரவாய்ப்புள்ளது. பாலிற்கு பதிலாக மோரை சாப்பிட்டால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். இதற்கு நிறைய இயற்கை பயிற்சி மையங்கள் உருவாக்கப்படுவதோடு, இயற்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சி நடந்தன. உணவுத்திருவிழாவில் இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் தொடர்பான புத்தகங்கள், இயற்கை உணவு பொருட்கள் போன்றவற்றின் ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்