இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசினார்.
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:
- இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது.
- பருவ கால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாரம்பரிய நெல் ரகங்கள் 63 வகைகள் உள்ளன. இவற்றிற்கு அதிக விலைக்கு வாங்கி ரசாயன உரங்களைப்போட வேண்டியதில்லை.
- ஒருமுறை களை எடுத்தாலே போதும். வெள்ளத்தையும், வறட்சியையும் தாக்குப்பிடிக்கும் விவசாயமே இயற்கை விவசாயம்.
- மாடுகளுக்கும் வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்.
- இயற்கை விவசாயத்தில் பயிர்களை நடுவதற்கு முன்பாக அந்த நிலத்தில் ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் தங்க வைத்தாலே மிக அதிகமான விளைச்சல் கிடைக்கும்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்கள் அதிகமாக வளர்ந்து நிலத்தில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது. இதனால் விவசாயத்திற்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது.
- எனவே மாவட்ட நிர்வாகம் வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோ.நம்மாழ்வார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்