இயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள்

மத்திய வேளாண் அமைச்சராகச் சரத்பவார் இருந்தபோது இயற்கைவழி வேளாண்மை எனப்படும் வளர்ந்துவரும் துறை பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாகவே, ‘Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes’ நூலில் உள்ள ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இது தொடர்பாக மேலும் சில விவரங்களைப் பார்ப்போம்.

வெளிவந்த உண்மைகள்

உண்மையில் மக்களை நேசிக்கும் அல்லது மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் நமது அரசாங்கத்தின் அறிவியல் சமூகம், தானாகவே முன்வந்து, இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில், அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில், அவர்களுடைய மேற்பார்வையில் செய்யப்பட்டவை.

இந்த ஆராய்ச்சிகளில் மண் வளம் கூடியுள்ளது, நீர்ச் செலவு குறைந்துள்ளது, மின்சாரம் போன்ற ஆற்றல் செலவினங்கள் குறைந்துள்ளன, பல இயற்கைப் பூச்சிகள் பெருகியுள்ளன, உயிரியல் பன்மயம் மிகுந்துள்ளது, நச்சுத்தன்மை குறைந்துள்ளது, பருவநிலைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் திறன் கூடியுள்ளது போன்றவை எல்லாமே தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம்விட முக்கியமானது ஐந்து முதல் 20 சதவீதம்வரை விளைச்சல் அதிகமாகியுள்ளது.

இப்படி இயற்கை வேளாண்மை பற்றி கிடைத்துள்ள சாதகமான ஆராய்ச்சி முடிவுகளைக் கிடப்பில் போட வேண்டிய அவசியம் என்ன?

நாடு முழுவதும்

வெளிப்படுத்தப்படாத இந்த முடிவுகளை வெளிப்படுத்தும் மேற்கண்ட நூல், ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் விளைச்சலில் நடந்த முன்னேற்றங்களை எடுத்துரைக்கிறது, சாகுபடி நடைமுறைகளில் உள்ள கூறுகளை மதிப்பிடுகிறது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன என்று பட்டியல் இடுகிறது, சமூகப் பொருளியல் தரவுகளை விளக்குகிறது, எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் கூறுகிறது. இது தவிர விரிவான புள்ளிவிவரங்களுடன், போதிய தகவல்களைத் திரட்டி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

நெல், கோதுமை, மக்காச் சோளம், உருளைக் கிழங்கு போன்ற ரசாயன உரங்களை மட்டுமே நம்பி வாழும் பயிர்களில்கூட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவை தவிரப் பயறுகள், எண்ணெய் வித்துகள் என்று 28 பயிர்களில், 13 இடங்களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்படாத அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன (உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தொடங்கித் தமிழகம்வரை 13 இடங்களில் இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன).

விளைச்சல் அதிகரிப்பு

எடுத்துக்காட்டாக, மஞ்சள் பயிரில் 51.5 சதவீதம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது, மக்காச் சோளத்தில் 22.8 சதவீதம், நெல்லில் 2 சதவீதம் என்று பல பயிர்களிலும் விளைச்சல் அதிகரிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதைவிட இந்த ஆராய்ச்சிகளில் பல உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்துள்ள முடிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட ஒரு வழிமுறையை மட்டும் பின்பற்றிச் செய்யப் படவில்லை, உயிரித்துணைமப் பண்ணையம், உயிர்ம வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்ற பல சிந்தனைப் பள்ளிகளில் இருந்தும் நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொதுப்படையாக ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத வேளாண் முறைகளைப் பின்பற்றும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியே ஆராய்ச்சிகள் பெரிதும் உள்ளன.

புதிய செய்திகள்

அதுமட்டுமல்லாது, இயற்கை வேளாண்மை என்பது வெறும் பாரம்பரிய வேளாண்மைதான் என்ற பார்வையில் இருந்து மாறி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடனும், இன்றைய அறிவியல் அணுகுமுறையுடனும் கூடியதாகவே இயற்கைவழி வேளாண்மை உள்ளது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

உழவர்கள் செய்து பார்க்க வாய்ப்பு இல்லாத, அதேநேரம் மிகவும் பயன் தரக்கூடிய, எந்த இயற்கை வேளாண்மை இடுபொருளை இட்டால், என்ன விளைவு கிடைக்கும் என்பது போன்ற நுட்பமான செய்திகளையும் இந்த ஆய்வுத் தாள்கள் அளிக்கின்றன. இது நம்முடைய உழவர் பெருமக்களுக்கும் பயன்படும்.

பயிர்ச் சுழற்சி (Crop rotation), பயறு வகைத் தாவரங்களைப் பயன்படுத்துதல் (Legume crops), வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துவது, மட்கிய தொழுவுரப் பயன்பாடு, மூடாக்கு, உயிர் உரங்கள், உயிரியல் நுண்ணுயிர் பயன்பாடு என்று மரபு முறைகளும், ஒரு சில புதிய நுட்பங்களும் இந்த ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், இன்றைக்கு மிகவும் முன்னேறியுள்ள பல இயற்கை நுட்பங்கள் இந்த ஆராய்ச்சிகளில் இல்லை. அப்படியிருந்தும்கூட விளைச்சல் தொடங்கிப் பல்வேறு கூறுகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளது ஆச்சரியகரமானதுதான்.

இந்திய அரசு இயற்கை வழி வேளாண்மைக்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி ரூபாய்கூட ஒதுக்குவது இல்லை. அதேநேரம், ரசாயன உரத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மானியம் வழங்குகிறது. ஆனாலும்கூட ஏராளமான ஆராய்ச்சிகள், ஒரு பக்கச் சார்பாகவே நடைபெறுகின்றன!!

நன்றி: ஹிந்து

இந்த அறிக்கையை நீங்கள் இங்கே படிக்கலாம் (ஆங்கிலத்தில்) ..


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *