இயற்க்கை விவசாயி முருகன் அனுபவம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் முன்னோடி விவசாயி முருகன். இவர் பட்டுக்கூடு உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறார்.

இதற்காக மூன்று ஏக்கர் நிலத்தில் பட்டுப்புழுக்கள் உண்ணும் மல்பரி செடிகளை வளர்க்கிறார். ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண் மலட்டுத்தன்மையாகி விடுகிறது. இதைத்தடுக்கவும், மண் வளம் மேம்பாடு காணவும், மண்ணில் நுண்ணுாட்டச் சத்துக்கள் அதிகரிப்பதற்காகவும், இயற்கை உரங்களை நிலத்தில் பயன்படுத்துகிறார்.

இயற்கை முறையில் மல்பரி செடிகள் வளர்ப்பதால் கால்நடைகளின் கழிவுகளை விலைக்கு வாங்கி மக்க வைத்து நிலத்தில் கொட்டி உழவடை செய்தார். கால்நடைகளின் கழிவுகள் பெருமளவு கேரள மாநில தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு செல்வதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே, கொட்டில் முறையில் ஆடுகளை வளர்த்து, அவற்றின் கழிவுகளை சேகரித்து மக்க வைத்து மல்பரி செடிகளுக்கு உரமாக பயன்படுத்த முடிவெடுத்தார்.

கொட்டில் முறை ஆடு வளர்ப்பு

கொட்டில் முறை ஆடு வளர்ப்பில் செலவு அதிகம். மேய்ச்சல் முறையில் ஆடு வளர்ப்பு செலவு குறைவு. எனினும் ஆடு மேய்ப்பவர் கிடைப்பது கடினம். எனவே, மல்பரி செடிகளுக்கு இயற்கை உரம் கிடைக்க கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கிறேன்.

10 அடி அகலம், 30 அடி நீளம், 10 அடி உயரத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்பு கொட்டகை அமைத்து ஐந்து செம்மறி கிடாய்கள், 17 வெள்ளாடுகளை வளர்க்கிறேன். தீவனத்தை செம்மறி ஆடுகள் வீணாக்காது. முழுமையாக உண்டு விடும்.

வெள்ளாடுகள் வேர் பகுதியை உண்ணாது. சிறிதளவு வீணாக்கும். அவற்றை ஓரிடத்தில் சேகரித்து மக்கச் செய்து உரமாக்கி விடுவேன். ஆடுகளின் புழுக்கைகள் நேரடியாக தரையில் விழுந்து விடும்.

இயற்கை உரத்தால் மண் வளம்

ஆடுகளின் சிறுநீர் புழுக்கைகள் மீது விழும். மாதம் 10 கிலோ புழுக்கைகள் சேகரிக்கப்படும். அவற்றை மல்பரி செடிகளை நடவு செய்வதற்கு முன் நிலத்தில் கொட்டி உழவடை செய்கிறேன்.

செடிகள் சத்து மிகுந்து நன்கு வளர்கிறது. வெளியிடங்களில் 25 கிலோ கொண்ட புழுக்கை மூடை 110 ரூபாய். இவற்றில் கலப்படம் இருக்கலாம். சுயமாக புழுக்கை கிடைப்பதால் நன்மைகள் பல உண்டு.

அடுத்ததாக ஆறு ஜெர்சி ரக கன்றுகளை வளர்க்க கொட்டகை அமைத்து வருகிறேன். இவற்றின் மூலம் கிடைக்கும் சாணமும் இயற்கை உரமாக பயன்படும்.

செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண் மலட்டுத்தன்மையாகி விடும். காலப்போக்கில் விவசாய நிலமாக இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது,

என்றார். தொடர்புக்கு 9443109451 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *