இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு வேளாண்மையில் வெற்றி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரம்பர்ய, இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கும்போது, இயற்கை இடர்பாடுகளை எளிதாக சமாளித்து, லாபகரமான மகசூல் எடுத்து விடுகிறார்கள் விவசாயிகள். இவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்.
தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராமலிங்கத்தைச் சந்தித்தோம். “விவசாயம்தான் எங்க குடும்பத்தொழில். பத்தாவது வரைக்கும் படிச்ச நான், டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். ஆனாலும் விவசாயத்து மேல இருந்த ஆசையால ஒரு கட்டத்துல முழுநேர விவசாயியா மாறிட்டேன். ஆரம்பத்துல ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்தினேன். ஆறு வருஷத்துக்கு முன்ன ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். அப்பறம் படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சிட்டேன். எனக்கு ‘ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பம் ரொம்ப பிடிச்சிருந்தது. அது பத்தின விவரங்களை பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்டு மூணு வருஷமா இந்த முறையிலதான் விவசாயம் செய்றேன். ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், பீஜாமிர்தம்னு கொடுக்கிறதால மண்ணுல நுண்ணுயிர்கள் பெருகி நல்ல வளமா இருக்கு” என்று முன்னுரை கொடுத்த ராமலிங்கம், தொடர்ந்தார்.
கோடை மழையிலும் கொடை!
“மொத்தம் ஆறு ஏக்கர் இருக்கு. அதுல நெல் சாகுபடிதான் பிரதானம். கோடையில மட்டும் நாலு ஏக்கர்ல உளுந்து போடுவேன். வழக்கமா சித்திரைப் பட்ட உளுந்து அறுவடைக்கு வரும்போது, பெரியளவுல விலை இருக்காது. ஒரு கிலோ அதிகபட்சம் 60 ரூபாய் வரைதான் விற்பனையாகும். ஆனா, இந்த வருஷம் பற்றாக்குறையால 85 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சது. அதேசமயம், கோடைமழை அதிகமா பெய்ததால மகசூல் குறைஞ்சிடுச்சு. ஆனா, எனக்கு அவ்வளவு மழை பெய்தும் பெரியளவுல பிரச்னை இல்லை. அதுக்குக் காரணம்… ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான்” என்ற ராமலிங்கம், “இதோ பாருங்க… இதெல்லாம் மழையில மாட்டின உளுந்து மாதிரியா தெரியுது? கொஞ்சம் கூட பொக்கு இல்லாம, நல்லா முழிப்பா, திரட்சியா இருக்கு. மாவும் நல்லா காணுது” என்று அறுவடை செய்து வைத்திருந்த உளுந்தைக் காட்டியவர் தொடர்ந்தார்.
ரசாயனம் ஜீரோ… ஜீரோ பட்ஜெட்தான் ஹீரோ!
“விதைச்சதுல இருந்து அறுவடை வரைக்கும் இந்த ஏரியால நல்ல மழை. நிலம் முழுக்க தண்ணீர் தேங்கிடுச்சு. தண்ணீரை வடிச்ச பிறகும் ‘சொதசொத’னு மண்ணுல ஈரம். ரசாயன முறையில சாகுபடி செஞ்சவங்களுக்கு ஏக்கருக்கு ஒரு குவிண்டால் கூட மகசூல் தேறல. எனக்கு 5 குவிண்டால் மகசூல் கிடைச்சிருக்கு. வழக்கமா 7 குவிண்டாலுக்கு மேல கிடைக்கும். மழையால கொஞ்சம் மகசூல் குறைஞ்சிட்டது. மண்ணு நல்லா வளமா இருந்ததால நல்லா வேர் பிடிச்சு தண்டுகளும் தடிமனாயிடுச்சு. அதனாலதான் கடுமையான ஈரத்துலயும் கூட தாக்குப் பிடிச்சுது. ஒவ்வொரு செடியிலயும் 80 காய்கள்ல இருந்து 100 காய்கள் வரை இருந்துச்சு. உளுந்துச் செடிகள் நல்லா செழிப்பா அடர்த்தியா இருந்ததுனால, வயல் முழுக்க நிழல் படர்ந்து களைகள் முளைக்கவே இல்லை.
இந்தத் தடவை மகசூல் குறைவுன்னாலும் விலை அதிகமா கிடைச்சிருச்சு. நாலு ஏக்கர்லயும் சேர்த்து 20 குவிண்டால் அளவுக்கு மகசூல் கிடைச்சது. ஒரு குவிண்டால் 7 ஆயிரத்து 600 ரூபாய் வீதம், 20 குவிண்டாலுக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லா செலவும் போக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம். இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டா எப்பவுமே நஷ்டம் வராதுங்கிறதுக்கு நானே நல்ல உதாரணம்” என்று முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் சொன்னார் ராமலிங்கம்!
ஏக்கருக்கு 7 கிலோ விதை!
ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி ராமலிங்கம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…‘‘தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு சால் புழுதி உழவு ஓட்ட வேண்டும். 150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து வயல் முழுக்க பரவலாகத் தெளிக்க வேண்டும் (கன ஜீவாமிர்தம் காற்றில் பறக்காமல் இருக்கவும், அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிப்பது நல்லது).
பிறகு, 20 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து… 7 கிலோ ஆடுதுறை-5 ரக விதை உளுந்தை, பீஜாமிர்தக் கரைசலில் அமிழ்த்தி விதைநேர்த்தி செய்து, பரவலாகத் தெளித்து ரோட்டோவேட்டர் மூலம் மேலோட்டமாக ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டி வர வேண்டும்.
7-ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 5 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் 60 லிட்டர் ஜீவாமிர்தத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் இதே அளவு ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 5 லிட்டர் தேமோர்க் கரைசலை 115 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இந்தக்கரைசல்கள் அனைத்தையுமே மாலை நேரங்களில் தெளித்தால் வீரியம் குறையாமல் பலன் கொடுக்கும். 65 நாட்களில் உளுந்து அறுவடைக்கு வந்து விடும்.”
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து, பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியை பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரைக் கலந்தால் போதும். பிறகு உருட்டி நிழலில் காயவைத்து, தேவைப்படும்போது உதிர்த்துப் பயன்படுத்தலாம். இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது.
கு.ராமகிருஷ்ணன்
தொடர்புக்கு,
ராமலிங்கம்,
செல்போன்: 07871126888
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்