பத்தரை ஏக்கர் நிலத்தில் மரம், செடி, கொடிகளுடன் ஆடு, கோழிகளை இயற்கை முறையில் வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார் வாடிப்பட்டி எர்ரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாஷ் ராஜா. இயற்கை முறை விவசாயம் குறித்து அவர் கூறியதாவது:
- பி.இ., சிவில் இன்ஜினியரிங் எம்.டெக் முடித்து விட்டு ரியல் எஸ்டேட் மற்றும் பிசினஸ் செய்து வந்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன் விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்தது.
- நிலம் வாங்கினேன். சாத்தையாறு அணைக்கு அருகில் தான் நிலம் இருக்கிறது. ஆனால் தண்ணீர் வருவது ரொம்ப குறைவு. போர்வெல் அமைத்து அந்த தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் சேகரிக்கிறேன். மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா பழ மரங்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். 12 ஆடுகள் வைத்துள்ளதால் அவற்றின் புழுக்கைகள் நல்ல உரமாக அமையும்.
- பக்கத்து தோட்டத்து மாடுகளை கிடை போட்டு அவற்றின் சாணத்தையும் பயன்படுத்துகிறேன்.
- ஐந்தாண்டுகளாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். அதற்கு முன்பாக இந்த நிலத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி இருந்ததால் பழ மரக்கன்றுகள் வைத்த முதல் மூன்றாண்டுகள் விளைச்சல் கிடைக்கவில்லை.
- தற்போது எல்லா மரங்களும் நல்ல பலன் தருகின்றன. மாமரங்களுக்கு இடையே ஊடுபயிராக தட்டாம்பயறு, மொச்சை, துவரை, கம்பு பயிரிட்டுள்ளேன். கொய்யா மரங்களுக்கு இடையே கீரை பாத்தி தயார் செய்துள்ளேன். தினமும், வாரமும், மாதந்தோறும் தொடர் வருமானம் என்கிற அடிப்படையில் திட்டமிட்டு விவசாயம் செய்கிறேன்.
- ஆடுகளை அடைத்து வளர்க்கவில்லை. நிலத்தைச் சுற்றி வேலி அமைத்துள்ளதால் வயலிலேயே தானாக மேய்கின்றன. வாகை, அகத்தி மரங்கள் இருப்பதால் தீவனம் தனியாக கொடுப்பதில்லை. சிறுவிடை, கிளிமூக்கு, காகம் ரக நாட்டுக்கோழிகள் 200 வளர்கின்றன.
- இவற்றுக்கு கம்பு, கேழ்வரகு அவ்வப்போது தீவனமாக தந்தாலும் இயற்கையான மேய்ச்சல் முறையில் வளர்கின்றன. சாயந்திரம் ஆனதும் ஆடுகளும், கோழிகளும், வாத்து மற்றும் கிண்ணி கோழிகளும் ஒரே கொட்டகையில் அடைந்து விடும். அதற்கேற்ப பழக்கியுள்ளேன். காலை 6:00 மணிக்கு அவற்றை திறந்து விடுவோம். இயற்கை விவசாயம் செய்யும் நிலத்தில் மேய்வதால் ஆடு, கோழிகள் நோய் எதிர்ப்புத் திறன் பெறுகின்றன.
- காய்கறி, பழங்களை முடுவார்பட்டி திறந்தவெளி ஏல முறையில் விற்று வந்தேன். அதன் பின் மதுரை ஆனையூர் உழவர் சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்கிறேன். முதல்நாள் மாலை காய்கறிகளை பறித்து மறுநாள் காலை 6:00 மணிக்கு சந்தைக்கு கொண்டு போவேன். அங்கே இடைத்தரகர் இன்றி, அரசு சொல்லும் விலைக்கு விற்கிறேன். இதனால் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
- மாம்பழங்களையும் இயற்கை முறையில் அட்டைப்பெட்டிக்குள் வைக்கோல், காகிதத்துடன் வைத்து மூடி நான்கு நாட்கள் வரை பழுக்கவைத்து கொடுக்கிறோம். சீசனுக்கு ஏற்ப கல்லாமை, காசாலட்டு, செந்துாரம், பாலாமணி, சப்பட்டா, மல்லிகா ரகங்கள் தினமும் 100 – 150 கிலோ விற்பனை செய்கிறேன். தற்போதும் எங்களிடம் மாங்காய், மாம்பழங்கள் உள்ளன. ஆடு, கோழிகளை உயிருடன் விற்பனை செய்கிறேன்.
- ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் நிரம்பும் வகையில் பண்ணை குட்டை அமைத்துள்ளேன். ஒரு மழை பெய்தால் 10 நாட்கள் வரை தண்ணீர் நிற்கும். பின் மெல்ல நிலத்துக்குள் ஊடுருவி செல்வதால் போர்வெல்லில் தண்ணீர் கிடைக்கிறது.
இவரிடம் பேச : 9500097366
– எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இயற்கையை நேசிப்போம்