ஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்!

மூன்றரை ஏக்கர் நிலம் ரூ.3 லட்சம் லாபம்

ஐந்தாம் வகுப்பு படித்துகட்டட வேலை பார்த்து ஒப்பந்ததாரராக உயர்ந்த நல்லபிச்சன் தன்னை விவசாயி என்று சொல்வதில் பெருமைப்படுகிறார். கடந்த மூன்றாண்டுகளாக ஒப்பந்ததாரர் தொழிலை விட்டுநாட்டம் கொண்டார். மதுரை அழகர்கோவில்ரோட்டில் உள்ள அப்பன் திருப்பதியில் 30 சென்ட் இடம் வாங்கி அதில் வீடு கட்டி வீட்டளவு விவசாயம் செய்தேன். கட்டுமான தொழில் மூலம் கிடைத்த வருமானத்தில் விவசாயம் செய்தாலும் லாபம் கிடைக்கவில்லை.

பசுக்கள் காட்டிய பாதை:

கட்டுமான தொழிலில் சேமித்து மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன். படிப்படியாக அந்த தொழிலை விட்டுட்டு மூன்றாண்டுகளாக விவசாயம் செய்கிறேன். பழைய முறைப்படி சாகுபடியில் வருமானம் கிடைக்கவில்லை. விவசாயம் சார்ந்த பத்திரிகை, பயிற்சிகளை தவறாமல் பின்பற்றினேன். கிழக்கு வட்டார வேளாண் சார்பில் சில பயிற்சிகள் நடத்தினர். அதில் ஆர்வமாக கலந்து கொண்டேன். பழைய தொழிலை விட்டு விட்டு ஏழு பசுக்களை வாங்கி கூலியாட்களை கொண்டு வளர்த்தபோது தீவனச்செலவும், கூலியாட்கள் செலவும் கட்டுப்படியாகவில்லை. பின் நானும், எனது மனைவியும் கூட்டாக பசுக்களை கவனித்தோம். ஒரு பசுவிடம் இருந்து 150 ரூபாய் வீதம் செலவு போக 750 ரூபாய் கிடைத்தது. அது பெரிய வருமானமாக இருந்தது.

Courtesy: Dinamalar

 

 

 

 

சாணத்தில் குளிக்கும் வாழை:

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கிணறு வெட்டி பக்கத்தில் 7 வாழை மரங்கள் வளர்த்தேன். இன்று வரை ஆண்டுக்கு 20 முதல் 30 தார்களை வெட்டுகிறேன். வாழையில் பக்க கன்றுகள் நிறைய வரும். எந்த கவனிப்பும் தரவில்லை.மாட்டுச்சாணம் தான் இதற்கு காரணம் என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். சாணத்தில் இயற்கை உரம் தயாரித்தேன்.30 சென்டில் மட்டும் வீடு, மோட்டார் ரூம், தொட்டி, மாட்டுகொட்டகை, 20 தென்னை, 100 வாழை, எல்லா பழ வகை மரங்கள் ஒவ்வொன்றாக வைத்துள்ளேன். மாடுகளை குளிப்பாட்டும் தண்ணீர் தான் மரங்களின் நீராதாரம். மாடுகளின் சாணம் தான் உரம்.

கை நடவு சீசனில் காய்கறிகள்:

இயற்கை முறையில் 50 சென்ட் நிலத்தில் கையால் நெல் நடவு செய்கிறேன். வீட்டு சாப்பாட்டுக்கு போக மீதி நெல்லை விற்று விடுவேன். 50 சென்ட் நிலத்தில் சோளம், கோ வகை புல் ரகங்கள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வளர்க்கிறேன். சோளக்கதிர்கள் கோழிகளுக்கும், சக்கைகள் ஆடு, மாடுகளுக்கும் தீவனமாகிறது. சீசனுக்கு ஏற்றாற்போல் மல்லிகைப்பூ, தக்காளி, வெண்டை, கத்தரி, உளுந்து அவ்வப்போது அறுவடை செய்கிறேன். இதன்மூலம் வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது.

ஆடு, மாடு, கோழி என் சொத்து:

வீட்டுத்தோட்டத்தை சுற்றிலும் 12 செம்மறியாடுகள் மேய்கின்றன. மாதத்திற்கு ஆடுகள் மூலம் 1000 ரூபாய் கிடைக்கும். 3000 ரூபாய்க்கு வாங்கிய ஆடு, ஒரே ஆண்டில் 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். லாபமாக 8000 ரூபாய் கிடைக்கிறது. நாட்டுக்கோழிகளை வளர்ப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. தோப்பில் தானாக மேய்கின்றன. வீட்டுத் தேவைக்கும் வெளியில் விற்பனைக்கும் உதவுகின்றன. இப்போது 50 கோழிகள் இருக்கின்றன. 10 தேன் பெட்டிகளின் மூலம் இரண்டு முறை தேன் விற்பனை செய்துள்ளேன்.
வாழவைக்கும் வாழையடி வாழை: வீட்டுத் தோட்டத்தில் நட்ட வாழையில் ஆண்டுக்கு இரண்டு முறை குலை தள்ளும். அதைப் பார்த்த பின் தோட்டத்தில் தனியாக வாழைகள் நட ஆரம்பித்தேன். தார் விடும் போதே பக்கத்தில் கன்று விடும். அடுத்த தார் நெருக்கி வந்து விடுவதால் எதிர்பாராத லாபமாக ஆண்டுக்கு இருமுறை கிடைத்தது.

மாம்பழம், கொய்யா, சப்போட்டா, சீத்தாப்பழ மரங்கள் மூலம் கிடைக்கும் பழங்களை விற்பனை செய்கிறேன். தென்னையில் 40 நாட்களுக்கு ஒருமுறை லாபம் கிடைக்கிறது. கன்றுக்குட்டிகள் இரண்டரை ஆண்டுகளில் முதலீடாகிறது. மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கண்ணுக்கு தெரியாத வருமானம் கிடைக்கிறது. பசுக்கள் மூலம் பால் உற்பத்தி கிடைக்கிறது.

கிணற்றை சுத்தப்படுத்தும் மீன்கள்:

கிணற்றில் மீன்களை வளர்க்கிறேன். இதனால் கிணற்றில் உள்ள பச்சை பாசிகளை மீன்கள் சாப்பிட்டு கிணற்றை சுத்தம் செய்கின்றன. ஆறு மாதத்திற்கு ஒருமுறை 20 முதல் 50 கிலோ மீன்கள் கிடைக்கிறது. இதில் இவ்வளவுதான் வருமானம் என பிரித்து பார்க்க முடியவில்லை. இந்த மூன்றாண்டுகளில் சாப்பாட்டு தேவைக்குபோக ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லாவற்றிலும் முழுமையான லாபம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன். இப்போது நஷ்டத்திற்கு வேலையில்லை. நாங்களும்
ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோம். ஆடு, மாடு, கோழிகளின் எச்சங்கள் தான் இயற்கை உரத்திற்கு உத்திரவாதம். சுத்தமான, சுகாதாரமான காய்கறி, நெல் விளைச்சல் கிடைக்கிறது. இயற்கை உரத்திற்கு அவ்வளவு வலிமை உள்ளது.

இடத்தை சுருக்கிபயிரை பெருக்கணும்:

வாழை மரத்தில் இலை கிடைக்கிறது. தென்னையும் வளர்கிறது. வாழை அருகில் தீவனப்புல் வளர்க்கிறேன். ஏக்கர்கணக்கில் விவசாயம் செய்து தண்ணீரில்லாமல் கஷ்டப்படக்கூடாது. இடத்தை சுருக்கி மூன்று, நான்கு பயிர்களுக்கு ஒரே தண்ணீர் மூலம் விவசாயம் செய்கிறேன். முன்பு செலவழித்தேன். இப்போது செலவு குறைந்து விட்டது. லாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளேன். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவது தான் அடுத்த நோக்கம். ஒரு சதுரடி கூட விடாமல் எல்லா இடத்திலும் பயிர் வளர்க்கணும். என்னுடைய ஏழு பேரன், பேத்திகளும் இந்த விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்றார்.

தொடர்புக்கு: 09940966095 .
– எம்.எம்.ஜெயலெட்சுமி.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *