சுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மறைவுப் பகுதி. இந்தப் பகுதியில் பெரும் துணிச்சலுடன் இயற்கை வேளாண்மையில் போராடி வருபவர், லட்சுமணன். இயற்கையின் எல்லாக் கூறுகளும் இங்குள்ள உழவர்களுக்குப் பாதகமாகவே உள்ளன.
அதிலும் குறிப்பாக இவர் தேர்வு செய்துள்ள நிலம் மிகவும் களர்தன்மை கொண்டது. களராகிப்போன பொட்டல் நிலத்தை, வளமான விளைச்சல் மண்ணாக மாற்றுவது மிகவும் கடினம். ஆனால், அந்தச் சாதனையை ஓசையின்றிச் செய்திருக்கிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள புதுப்பட்டி லட்சுமணன்.
களர்நிலத்தில் உழவு
முற்றிலும் வளமிழந்துபோன நிலத்தை, போராடி இவர் மீட்டுள்ளார். வளமிழந்த மண்ணை மீட்க முயலும் பலருக்கும் இவரது பண்ணை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நிலத்தில் தாவரக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் தொடர்ச்சியாக இவர் சேர்த்துக்கொண்டே வந்தார். அதாவது சாணம், மாட்டுமோள் (கோமயம்), தழை, குலைகள், அறுவடைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவு, பஞ்சாலைக் கழிவுகள், உமிச் சாம்பல் போன்றவற்றை இட்டார்.
இவரது தொடர் முயற்சியின் விளைவாக மண் மாறியது. முன்னர் இவருடைய நிலத்தில் டிராக்டரைக் கொண்டு உழுவதுகூடக் கடினமாக இருந்தது. இன்று மண் பொலபொலவென மாறியுள்ளது. மண்ணில் மட்கின் அளவும் அதிகமாகியிருக்கிறது. அதனால் நிலத்தில் நடக்கும்போதே மண், பஞ்சுபோல இருப்பதை உணர முடிகிறது.
உயிர் தரும் கழிவு
பொதுவாக மண்ணில் உயிர்மக் கரிமம் (organic carbon) அதிகமாகும் போதுதான், மண் வளம் அதிகரிக்கும். வேதி உப்பு உரங்களைத் தொடர்ந்து நிலத்தில் கொட்டும்போது, மண்ணில் உள்ள உயிர்மக் கரிமம் குறைந்துகொண்டே வரும். அதனால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்து, நீர் தேங்கத் தொடங்கும். நீர் தேங்குவதன் மூலம் மண்ணில் உப்பின் அளவு அதிகரிக்கும். உப்பைச் சரிசெய்து பயிரை வளர்க்க மேலும் வேதி உரங்களை இட வேண்டும். மீண்டும் உப்பு கூடிக்கொண்டே போகும். இது ஒரு வகை நச்சு வளையம். இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபட வேண்டுமானால், வேதி உரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். படிப்படியாகக் குறைக்கலாம் என்று நினைப்பது, நடைமுறைக்கு சரியாக வராது.
மண்ணில் சேர்க்கப்படும் தாவரக் கழிவுகளால் மண்ணில் நுண்ணுயிர் செயல்பாடு அதிகரிக்கும். நுண்ணுயிர் பெருகுவதால் மண்ணின் கெட்டித்தன்மை குறைந்து, பொலபொலவென மாறும். ஏனென்றால் மண்ணில் உள்ள உயிர்கள் மண்ணைத் துளைத்துக்கொண்டே இருக்கும். ஆக, எந்த வகையில் மண்ணை வளப்படுத்த வேண்டுமானாலும், நிலத்தில் கழிவுகளைச் சேர்ப்பதுதான் தீர்வு.
நீர் தேங்கினால் ஆபத்து
இத்துடன் லட்சுமணன் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான செயல்பாடு, நிலத்தில் உரிய இடத்தில் அமைத்துள்ள வரப்புகளும் வாய்க்கால் வடிகால் அமைப்பும்.
பொதுவாக வாய்க்கால், வடிகால் இல்லாத நிலத்தில் சிக்கல் அதிகமாகிவிடும். பெரும்பாலான உழவர்கள் வாய்க்கால் அமைப்பதோடு நிறுத்தி கொள்வார்கள். பலரும் முறையான வடிகால்களை அமைப்பதில்லை. அதனால் நிலத்தில் மழைநீர் தேங்குவதற்கான சாத்தியம் அதிகரிக்கும். நீர் தேங்கும்போது முன்னர்க் கூறியபடியே உப்பின் அளவும் அதிகமாகும். தேவைக்கு அதிகமாக நீரைத் தேங்க வைக்கக் கூடாது, நிலத்துக்குள் அனுப்ப வேண்டும். அல்லது பண்ணைக் குட்டைகளில் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
களர் நிலத்தில் நீர் தேங்கினால் சிக்கல் மேலும் அதிகரிக்கும். அதைச் சரிசெய்ய இயற்கையானது, களைத் தாவரங்களை உருவாக்கும். அங்குப் பறவைகள் மர விதைகளைக் கொண்டுசேர்க்கும். அதன் பின்னர்க் காடு உருவாகும். இதற்கான கால அளவு அதிகமாகும். இயற்கையின் இந்த ரகசியத்தை அறிந்துகொண்டு, அதை விரைவுபடுத்தும் செயலை நாம் செய்ய வேண்டும்.
மண்ணே முதன்மை வளம்
வடிகால்களும் முறையான வரப்புகளும் அமைக்காவிட்டால் மண் அரிப்பும் ஏற்படும். வளமான மேல்மண் அடித்துச் செல்லப்பட்டால், நமது வளம் முற்றிலும் குறைந்துவிடும். எனவே, வளமான மேல்மண்ணைப் பாதுகாக்கும் வேலை பண்ணையத்தில் மிக முதன்மையானது. நல்ல மேல் மண் இயற்கையாக உருவாக நான்கு லட்சம் ஆண்டுகள்கூட ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லட்சுமணனின் நிலத்தில் மண்ணின் தன்மை மெல்ல மெல்ல மாறி, இப்போது நீரை நன்கு பிடித்து வைக்கும் தன்மை கொண்டதாக, பஞ்சுபோல நிலம் மாறியுள்ளது. எங்கெல்லாம் கழிவை அவர் சேர்க்கவில்லையோ, அந்த இடங்கள் இன்னும் கடினமாகவே உள்ளன என்பது அவருடைய நுட்பத்தைத் தெளிவாகவே உணர்த்துகிறது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com
லட்சுமணன் தொடர்புக்கு: 09842194848
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்