குறைவான செலவு… நிறைவான லாபம்! – செழிக்கும் இயற்கை பண்ணை!

ஒற்றைப்பயிர் சாகுபடி மேற்கொள்ளக்கூடாது. விவசாயத்தில் கால்நடை வளர்ப்பும் இருக்க வேண்டும்’ என்பன, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முக்கியக் கோட்பாடுகள்.

இவற்றைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்யும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மாலினி. இவர் பாரம்பர்யமான அமைப்பில் வீடு கட்டியும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தும் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

“எங்க பூர்வீகம் கேரளா. ஆனா, நான் பிறந்து வளர்ந்தது, சென்னைலதான். சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செஞ்சுக்கிட்டுருந்தேன். 2012-ம் வருஷம் இங்க இடம் வாங்கினேன். 2013-ம் வருஷம் வேலையை விட்டுட்டு இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். மொத்தம் 8 ஏக்கர் நிலம் இருக்கு. ஆரம்பத்துல பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். முன்னாடியே இங்க மா, கொய்யா மரங்கள் இருந்தது. கிணறு இருக்குறதால தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை. நான் இயற்கை விவசாயத்துக்கு வந்ததுக்கு முக்கியக் காரணம், எங்க குழந்தைகளுக்கு விஷமில்லாத உணவைக் கொடுக்கணுங்கிறதுதான். முனைவர் அரு.சோலையப்பன்தான் எனக்கு இயற்கை விவசாய ஆலோசனைகள் கொடுத்தார்.

இப்போ நெல், கடலை, உளுந்து, எள்னு பயிர் சுழற்சி முறையிலதான் விவசாயம் செய்றேன். இரண்டரை ஏக்கர்ல மாப்பிள்ளைச்சம்பா, சீரகச்சம்பா, கிச்சிலிச்சம்பா, பூங்கார் ரக நெல்ல போட்டிருக்கேன். ‘நெல்’ ஜெயராமன்தான் பாரம்பர்ய நெல் விதைகளைக் கொடுத்தார். கொஞ்ச நிலத்துல வீட்டுத் தேவைக்காகக் காய்கறிகள், கீரைகள் போட்டுருக்கேன். இங்க 9 மாடுகள், 50 கோழிகள் இருக்கு. இதோட தேனீ வளர்ப்பு பெட்டிகளையும் வெச்சுருக்கேன். நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொன்ன மாதிரி, எனக்குத் தேவையான எல்லாத்தையும் இங்க உற்பத்தி செஞ்சு தன்னிறைவா வாழ்றேன். நாமளே விளைய வெச்சு சாப்பிடுறப்ப கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்ற மாலினி தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

“20 அடிக்கு 16 அடி அளவுல கொட்டகை அமைச்சு 50 நாட்டுக்கோழிகளை வளர்க்கிறேன். ஒருநாள் வயதுடைய குஞ்சுகளாக வாங்கி 90 நாள்கள் வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இன்னும் விற்பனையை ஆரம்பிக்கலை. கோழிகளுக்கு மக்காச்சோளம், அரிசி குருணை, கம்புனு தீவனமாகக் கொடுக்கிறோம். கோழிகளுக்கு இயற்கை வைத்தியம்தான் செய்றோம்.

இங்கிருக்கிற ஒன்பது பசுக்களும் காஞ்சி குட்டை ரக மாடுகள். இதுல இரண்டு இப்போ கறவையில இருக்கு. எப்பவும் ஏதாவது ரெண்டு மாடு கறவையில் இருக்கும். தினமும் 6 லிட்டர் அளவுக்குப் பால் கிடைக்குது. அந்தப் பாலை லிட்டர் 90 ரூபாய்னு என்னோட நண்பர்களுக்கு விற்பனை செய்துகிட்டிருக்கேன். வயல்ல கிடைக்கிற வைக்கோலை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்திக்குவேன்.

7 சென்ட் நிலத்துல பொன்னாங்கன்னி, அகத்தி உள்ளிட்ட கீரைகள் இருக்கு. கீரைகளைப் பறிச்சு தினமும் காலையில, சென்னை பெசன்ட் நகர் பீச்ல விற்பனை செய்றேன். இங்க மொத்தம் 20 கொய்யா மரங்கள் இருக்கு. சீசன் நேரத்துல 50 கிலோ அளவுக்குக் கொய்யா கிடைக்கும்.

8 அடி நீளம், 4 அடி அகலம், 3 அடி ஆழத்துல மண்புழு உரம் தயாரிக்கிறதுக்கான குழி அமைச்சுருக்கேன். பண்ணைக் கழிவுகளையும், பசுஞ்சாணத்தையும் பயன்படுத்தி 45 நாளைக்கு ஒருமுறை 150 கிலோ அளவுக்கு மண்புழு உரம் தயாரிக்கிறேன். இதைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திக்கிறேன்.

மாடுகளை வெளியில மேய்ச்சலுக்கு அனுப்பமாட்டோம். பண்ணைக் குள்ளயேதான் மேய விடுவோம். அதேபோல, கோழிகளும் பண்ணைக்குள்ளயே மேய்ஞ்சு புழு, பூச்சிகளைச் சாப்பிட்டுக்கும். கால்நடைகளையும் இயற்கையான முறையிலதான் வளர்க்கிறேன். விவசாயத்துக்கு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பெண்ணெய்னு இயற்கை இடுபொருள்களை மட்டும்தான் பயன்படுத்துறேன்” என்ற மாலினி நிறைவாக,

“விளைபொருள்களை விற்பனை செஞ்சு வருமானம் பார்க்கணுங்கிறது என் நோக்கமில்லை. வீட்டுக்குத் தேவையான எல்லாமும் இங்க கிடைக்கணும். பண்ணைக்கு வெளியே இருந்து எந்த இடுபொருளும் உள்ளே வரக்கூடாது. தற்சார்பான விவசாயம், தற்சார்பான வாழ்க்கை ரெண்டையும் மேற்கொள்ளணுங்கிறதுதான் குறிக்கோள். தேவைக்குப் போக மீதி இருக்குற விளைபொருள்களை விற்பனை செய்றது மூலமா கணிசமான லாபம் கிடைக்குது. அதைவிட மத்த விவசாயிங்களுக்கு இது ஒரு மாதிரிப்பண்ணையா இருக்குறதுல எனக்கு முழுத் திருப்தி” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

மாலினி சொல்லும் வருமானக் கணக்கு 

“போன தடவை 50 சென்ட் நிலத்துல நிலக்கடலை; 35 சென்ட் நிலத்துல எள், 30 சென்ட் நிலத்துல உளுந்து, ஒன்றரை ஏக்கர்ல நெல்னு போட்டிருந்தேன். மொத்தமா 300 கிலோ நிலக்கடலை, 55 கிலோ எள், 130 கிலோ உளுந்து கிடைச்சது. நிலக்கடலை மூலமா 35,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. எள்ளை எண்ணெய்யாக்கி விற்பனை செஞ்சதுல 7,000 ரூபாய் கிடைச்சது. உளுந்து மூலமா 18,200 ரூபாய் கிடைச்சது. ஒன்றரை ஏக்கர்ல போட்டிருந்த பாரம்பர்ய ரக நெல்லை அரிசியா அரைச்சதுல 1,000 கிலோ அரிசி கிடைச்சது. அதை விற்பனை செஞ்சது மூலமா 98,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஆக மொத்தம் 1,58,200 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல மொத்தமா 52,000 ரூபாய் செலவு போல மீதி 1,06,200 ரூபாய் லாபமா நின்னது.

சுழற்சி முறையில ஒரு நாளைக்கு 6 லிட்டர் பால்ங்கிற கணக்குல வருஷத்துக்கு 2,000 லிட்டர் அளவுக்குக் குறையாம பால் கிடைக்கும். அதை லிட்டர் 90 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, 1,80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல தீவனம், பராமரிப்புச் செலவுகள்னு 60,000 ரூபாய் போக, வருஷத்துக்கு 1,20,000 ரூபாய் லாபமா நிக்கும்.

கீரை, கொய்யா, காய்கறிகள் மூலமா வருஷத்துக்கு 2,00,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுடும். அதுல செலவுகள் போக 1,80,000 ரூபாய் லாபமா நிக்கும். ஆக எட்டு ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 4,00,000 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுட்டுருக்கு” என்கிறார், மாலினி.

முழுமையான விவசாயம்! 

மாலினிக்கு வழிகாட்டியாகத் திகழும் மூத்த வேளாண் விஞ்ஞானி அரு.சோலையப்பனிடம் பேசினோம். “ஐந்து ஆண்டுகளுக்குள் மரங்கள், காய்கறிகள், கோழிகள், மாடுகள், நெல், மானாவாரிப் பயிர்கள் எனக் கொண்டு வந்து ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்திருக்கிறார், மாலினி. போதுமான நிதிவசதி இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாலினியின் பண்ணையில் விவசாயப் பயிற்சிகளும் அடிக்கடி நடக்கின்றன. ஒருங்கிணைந்த பண்ணையம்தான், முழுமையான விவசாயம். அப்போதுதான், ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர் காப்பாற்றும்” என்றார்.

தொடர்புக்கு மாலினி, செல்போன்: 9600065170

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *