சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி'

இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி.

இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன்.

பயிற்சிக் கழகம்

தமிழகத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் உள்ள இயற்கை வேளாண் உழவர்களுக்கு நன்கு அறிமுகமானர் இவர். இவருடைய பண்ணை பதிவு செய்யப்படாத ஒரு இயற்கைவழி வேளாண் கல்லூரியாகவே திகழ்கிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவரான இவர், பல்வேறு இயற்கைவழி வேளாண்மையாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிவருகிறார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்துக்கு அருகில் உள்ள கோம்புப் பள்ளத்தில் இவருடைய 13 ஏக்கர் பண்ணை உள்ளது. மண்புழு உரப்படுகை, மட்கு உரப்படுகை, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகளுக்கு உரிய ஊறல் கரைசல்கள் என்று உயிர்ம வேளாண்மைக்கு உரிய பல்வேறு உதவிகளுடன் ஒரு விளக்கப் பண்ணையாகவே உள்ளது. நாள்தோறும் பல பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். பல்கலைக்கழகத்தில் படித்தவர் முதல் பாமரர்கள்வரை பலருக்கும் இது ஒரு பயிற்சிப் பண்ணையாக உள்ளதை மறுக்க முடியாது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

கூடுதல் ஊதியம்

எழுபது வயதைத் தாண்டிவிட்ட இவர் வேதி வேளாண்மையில் மட்டுமே 35 ஆண்டுகள் பட்டறிவு கொண்டவர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார்.

இடுபொருள் இல்லாத இயற்கை வேளாண்மையை மேற்கொண்டாலும், கட்டுப்படியான விலை கிடைக் காதவரை உழவர் சமூகத்தைக் காப்பாற்ற முடியாது என்பது இவருடைய தீர்மானமான கருத்து. தனது பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்றவர்களைவிட, சற்றுக் கூடுதலாகவே ஊதியம் கொடுக்கிறார். தொழிலாளர்களைக் கண்ணியமாக நடத்துகிறார், மற்றவர்களும் அவ்வாறு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நிலவுடைமையாளர்களும் உழைப் பாளிகளும் வேளாண்மையில் பிரிக்க முடியாத உறுப்புகள் என்று கூறும் இவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், நெல்லுடன் வணிகப் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள் போன்றவற்றையும் சாகுபடி செய்கிறார்.

ஊனமுற்ற நிலம்

அதேநேரம், பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட கோளாறுகளைப் பட்டியலிடத் தவறுவதில்லை. ‘பசுமைப் புரட்சியில்’ ஈடுபட்டு இவர் தன்னுடைய நிலத்தில் கொட்டிய உப்புஉரங்களும், பூச்சிக்கொல்லிகளும் கிணற்று நீரை மிகக் கடுமையாகப் பாதித்து விட்டன. இவருடைய கிணற்று நீர், கடின நீராக மாறியதோடு உவர்ப்புத்தன்மை கொண்டதாகவும் மாறிவிட்டது.

இதனால் இவர் மற்ற இயற்கைவழி வேளாண்மையாளர்களைவிட, மண்ணில் கூடுதலாக மட்கு உரம் சேர்க்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதை இவர் மொழியிலேயே கூறுவதானால் “நான் ஊனமுற்றவனாக மாற்றப்பட்டுள்ளேன். இதனுடன்தான் நான் நடந்தாக வேண்டும்’ என்று இவர் கூறும்போது, நம் மனது வேதனைப்படுகிறது.

ஏமாந்துவிட்டோம்

பூச்சிகளைப் பற்றிய இவருடைய அறிவு விரிவானது. பூச்சிக் கொல்லிகளைப் பற்றிய அறிவோ அதைவிட அகலமானது. “ஏன் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது’ என்று டார்வின், லமார் போன்ற அறிஞர்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார். இவருக்கு இயற்கை வேளாண்மை பற்றிய புரிதல் வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் சத்தியமங்கலம் நாகராசன் என்னும் மார்க்சிய அறிஞர். அவரை தனது குரு என்று கூறும் சுந்தரராமன் ‘பசுமைப் புரட்சியின் தொடக்கக் காலத்திலேயே, அதை எதிர்த்தவர் எஸ்.என்., அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஏமாந்துவிட்டோம்’ என்கிறார்.

பொதுவாக வேளாண்மையில் இருப்பவர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையை வேளாண்மையை விட்டு வேறு துறைகளுக்கு அனுப்பவே விருப்புகிறார்கள். இவர் அதற்கு மாறாக, முதுகலைப் பட்டம் பெற்ற தன்னுடைய மகனை அவருடைய விருப்பத்துடனேயே வேளாண்மைக்குள் இறக்கியுள்ளார். இயற்கைவழி வேளாண்மைப் பரப்புரைக் கூட்டங்களுக்கு இவர் போய்விடுவதால் இவருடைய துணைவியும், மகனுமே பண்ணையை மேலாண்மை செய்கிறார்கள்.

விவசாயி சுந்தரராமன் தொடர்புக்கு: 09842724778

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி'

  1. mrs. priyanka hari krishnan says:

    inda school madiri tamizhagam muzhuvadum vivasaya palli kalloorigal vara tamil nadu govt muzharchi edukanum idu dan vivasayathuku kidaikum vetri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *