சிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு!

சிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். தற்போது சொந்த கிராமத்திலிருந்து  காய்கறி விற்றுப் பிழைக்கிறார்.

அவரது விவசாய முறைக்காக, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார். ‘விருதை விடுங்கள்… சிங்கப்பூரைவிட அர்த்தமுள்ள வருமானம் இங்கேதான் கிடைக்கிறது’ என்று அவர் மகிழ்ச்சி அடைகிறார்.

சிவகுமார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“ரசாயனம் எதுவும் பயன்படுத்தாத இயற்கை வேளாண்மைதான் காரணம்!” என்கிறார் அவர்.

சிவக்குமார் சொல்லும் ‘அர்த்தமுள்ள வருமானம்’ என்பது நிம்மதி, மகிழ்ச்சி, வாழ்வின் பொருள் உள்ளிட்ட பலவற்றில் அடங்கியிருக்கிறது. அத்தனையையும் அவருக்குத் தந்தது தற்சார்பு விவசாய வாழ்க்கை முறை!

முருகன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலிருக்கும் கிராமம் கோட்டேரி. அந்தக் கிராமத்திலிருந்து பொறியியல் படிக்கச் சென்றார் சிவக்குமார். பட்டதாரியான கையோடு குடும்பத்தின் கடன் சூழல் அவரை நெருக்க, திரை கடல் ஓடி திரவியம் தேட சிங்கப்பூருக்குச் சென்றார். எதிர்பார்த்தபடியே கைநிறைய ஊதியம் கிடைத்ததும் அவருடைய பெற்றோர் நிம்மதி அடைந்தனர். ஆனால், சிங்கப்பூரில் சிவக்குமார் நிம்மதி இழந்தார்.

“ஆறு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தபோது, ஒரு உண்மை என்னைச் சுட்டது. என்னைப் போலவே கை நிறைய சம்பாதித்த பலர் நிம்மதி இல்லாதிருந்தனர். சம்பாதித்ததில் பெரும்பங்கை தரமான உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவழித்து வந்ததுடன், அதைப் பற்றிய விழிப்புணர்வும் இல்லாதிருந்தனர். ஒரு முறை நகரின் பிரம்மாண்ட வணிக வளாகத்துக்குச் சென்றிருந்தபோது, இயற்கை முறையில் விளைந்த காய்கனிகள் என்று யானை விலைக்கு விற்றதைப் பார்த்தேன்.

விலை குறித்து யோசிக்காது மக்கள் விழுந்தடித்து அதை வாங்கிச் சென்றனர். ‘என் கிராமத்தில் சல்லிசாகக் கிடைக்கும் இந்தக் காய்களை வாங்குவதற்காக, இப்படிக் கடல் கடந்து சிரமப்பட வேண்டுமா..’ என வருந்தினேன். தங்கைகள் திருமணம், கடன் சுமை எனப் பொறுப்புகள் தீர்ந்ததும், வேலையை உதறிவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பினேன். விவசாயம் பார்க்கப்போகிறேன் என்று நான் சொன்னபோது குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. உறவுகள் தூற்றின. ஆனாலும் எனது பிடிவாதம் வென்றது” என்று சிரிக்கிறார் சிவக்குமார்.

மதிப்புக் கூட்டு… லாபம் பெருக்கு…

இணையத்தில் மேய்ந்தும் பல புத்தகங்களை வாசித்தும், விவசாயத்தில் இறங்கியவருக்கு எடுத்த எடுப்பில் பலத்த அடி. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவவில்லை. அதன் பின்னர் வேளாண் வல்லுநர் பாமயனின் பயிற்சி வகுப்புகள், மறைந்த நம்மாழ்வாரின் ‘வானகம்’, புதுச்சேரியில் உள்ள ‘உழவில்லா வேளாண்மை’ போன்ற அமைப்புகளின் மூலமாக நேரடிப் பயிற்சி பெற்றவர், பின்னர் களத்தில் இறங்கி சிறிது சிறிதாகப் பரிசோதனை முறையில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

பார்த்திபன்

அக்கம் பக்கம் விவசாயிகளைச் சந்தித்து நட்பாக்கிக் கொண்டது, அவருடைய வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக பாரம்பரிய வேளாண்மையின் அடிநாதமான தற்சார்பின் முக்கியத்துவம் புரிந்தது.

“தற்போது சொந்த நிலம், குத்தகை நிலம் என்று சுமார் 20 ஏக்கருக்கு மேல் இயற்கை வேளாண்மை செய்துவருகிறேன். அதிலும் பெரும்பங்காக அரிய பாரம்பரிய ரகங்களைத் தேடிப் பிடித்துப் பயிராக்கி, சக விவசாயிகளிடம் விதைகளைப் பரப்பிவருகிறேன். விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் சந்தை நிலவரத்தில் குறைந்தது இரு மடங்கு லாபம் பெறுகிறேன்.

உதாரணத்துக்கு 2 ஏக்கரில் ஊடுபயிராக விளைவித்த உளுந்தை அப்படியே விற்றிருந்தால் மூட்டைக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் கிடைத்திருக்கும். அதை முறைப்படி உடைத்து, சுத்தம் செய்து விற்றதில் போக்குவரத்து, இதர செலவுகள் போக மூட்டைக்கு ரூ. 7 ஆயிரம் கிடைத்தது” என்று ஆச்சரியப்படுத்துகிறார்.

விருது… வருமானம்… விழிப்புணர்வு…

இதேபோல கம்பு மூட்டைகளை இருப்பு வைத்துக்கொண்டு, அவ்வப்போது தீட்டி விற்கிறார். எள் மகசூலை எண்ணெய்யாக மதிப்புக்கூட்டி லாபம் பார்க்கிறார். தற்போது இயற்கை வழியில் விளைவித்த கரும்பிலிருந்து ரசாயனங்கள் சேர்க்காத நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இந்த மதிப்புக் கூட்டல் சாதனைக்காக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் இவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கவுரவித்துள்ளது.

“வயலின் விளைபொருட்களும் வளர்க்கும் நாட்டுப் பசுக்களுமே வீட்டின் அனைத்துத் தேவைகளையும் நிறைவுசெய்வதால் வெளிச் செலவு பெரிதாக எதுவுமில்லை. தினசரி விளையும் காய்கள், கீரைகளை நகருக்குள் கொண்டு சென்று, அரசு அலுவலகங்களில் விற்றுத் தீர்ப்பதில் கைச்செலவுக்கு நிற்கும் 200 ரூபாய்தான் எனது அன்றாட வருமானம்” என்று சொல்லும் சிவக்குமாரைப் போன்று, தற்சார்பு விவசாயத்தைப் பின்பற்றும் விவசாயிகள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் குழுவாக இயங்குகின்றனர்.

நாள் முறை வைத்துக்கொண்டு விதைப்பு, நடவு, அறுவடை போன்ற பணிகளைக் குடும்பமாகக் கூடி மேற்கொள்கின்றனர். குழுவின் 20 விவசாயிகளில் பெரும்பாலோர் இளைஞர்கள். அனைவருமே இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டவர்கள். லாப நோக்கமின்றி, 19 பாரம்பரிய நெல் ரகங்கள் உட்பட பல அருகிவரும் பயிர்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே பயிரிட்டுள்ளனர்.

மீளும் கிராமப் பொருளாதாரம்

விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, பூச்சிக்கொல்லிகளின் பேராபத்து, விவசாயிகளின் பிடியிலிருந்து விதைகள் நழுவுவது எனப் பல சவால்களை இவர்களின் தற்சார்பு இயற்கை விவசாயம் சத்தமின்றிச் சாதிக்கிறது. ஆனபோதும் அதிகப்படியான உணவுத் தேவையை இந்தப் போக்கு சமாளிக்குமா என்பதற்கு சிவக்குமாரிடம் பதில் இருக்கிறது:

“பாரம்பரிய தானியங்களை அளவாக உண்டாலே வயிறு நிறையும். ஆரோக்கியமான இயற்கை வழி விளைபொருட்கள் எங்கள் உடல்நலனையும் மேம்படுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, உதவும் மனப்பான்மை பெருகி இருக்கிறது. முன்பு தொலைந்துபோன கிராமப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. தற்சாற்பு வேளாண்மை நிச்சயம் அந்தப் பொற்கால மாற்றத்தைத் உருவாக்கும்!”

விருது பெற்ற போது…

மீண்டும் பண்டமாற்று

முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடித் தற்சார்பு விவசாயியான முருகன், “பெண்கள் உட்படக் குடும்ப சகிதமாய் சக விவசாயிகளின் நிலத்தில் வேலை செய்கிறோம். எங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு உழைப்புக்குப் பண்டமாற்றாக இயற்கை விளைபொருட்களைத் தந்துவிடுவோம்.

உழவுக் கருவிகள், தெளிப்பான்களையும் பகிர்ந்துகொள்கிறோம். இடுபொருட்கள், இயற்கை வழி பூச்சிவிரட்டிகள் பற்றாக்குறையையும் இந்த வகையில் நிவர்த்தி செய்கிறோம். இது தவிரவும் தனித்துவமாக உதவிக்கொள்வதும் உண்டு.

நான் அடிப்படையில் மின் மோட்டார்களைப் பழுது பார்ப்பவன் என்பதால், என்னுடைய பிரத்யேக உழைப்பைத் தருவதுடன் பல இளைஞர்களுக்கு அதில் பயிற்சி அளித்துவருகிறேன். வெற்றிகரமாக அறுவடை முடிந்த வயலில் நாங்கள் அனைவரும் கூடி அறுவடைத் திருநாள் நடத்துவோம். இதில் பங்கு பெற்ற குடும்பங்கள், அறிவுரை வழங்கிய அதிகாரிகளை அழைத்து கவுரவிப்போம். இது எங்கள் கிராமங்களின் மற்ற விவசாயிகளையும் ஈர்த்து வருகிறது” என்றார்.

மீட்கப்படும் பாரம்பரியம்

சிவக்குமாரை அவரது வயல்வெளியில் சந்தித்த நாளில், அந்தக் குழு நண்பர்கள் சிலரும் விளைச்சலைப் பார்வையிட நேரில் வந்திருந்தார்கள். அவர்களில் குப்பாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தனியார் சர்க்கரை ஆலை ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்தபடியே இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகிறார்.

“இன்றைக்கு விவசாயிகளை அச்சுறுத்தும் அம்சங்களில் முக்கியமானது வேளாண் தொழிலாளர் தட்டுப்பாடு. கூலி வேலையானாலும் எல்லோரும் நகரங்களுக்கே ஓடுகிறார்கள். அவர்களைக் கிராமங்களில் இழுத்து நிறுத்த, கூலி அதிகமாகக் கொடுத்தாக வேண்டும். எங்களுக்கு இந்தப் பிரச்சினை அறவே இல்லை. வயல் வேலை எதுவானாலும் கலந்து பேசி உறுப்பினர்களின் வயல்களில் களமிறங்கிவிடுவோம்.

எனது ஏழு ஏக்கர் நிலத்தில் உளுந்து, நிலக்கடலை, எள், கரும்பு என அனைத்தும் நாட்டு ரகங்களாகப் பயிரிட்டு வருகிறேன். விரைவில் எனது முழு நேர வேலையை உதறிவிட்டு சிவக்குமார் போலவே விவசாயத்தில் இறங்கப்போகிறேன்” என்றார்.

தொடர்புக்கு: சிவக்குமார் – 8870890109

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு!

 1. Sivaram says:

  வணக்கம் நண்பரே
  எனது பெயர் சிவராம்
  நான் தற்போது சவுதி அரேபியாவில் அரசு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறேன் … எனக்கு வெகு நாட்களாக இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வமும் விருப்பமும் உள்ளது … எனவே மிக விரைவில் எனது பணியை துவக்க ஆயத்தமாகிறேன் … இயற்கை வேளாண்மை பற்றிய தகவல் சேகரிக்கும் போது தங்களை பற்றிய தகவல் மேலும் எனது ஆவலை தூண்டி விட்டது …
  மேலும் இதனை பற்றிய அடிப்படை விஷயங்களை பகிர்ந்து தெளிவு ஏற்படுத்தவும் …

 2. முத்து says:

  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ஆம் சப்போட்டா இல் பால் வந்தால் பழுத்து விட்டது என்று பிஞ்சு எல்லாம் பறித்து தள்ளி விட்டார் ஒவ்வோர் அனுபவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *