சிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தில் 54 ஏக்கரில் இயற்கை விவசாயம் இறக்கை கட்டி பறக்கிறது. வயலுக்குள் நுழைந்தவுடன் இரு பக்கமும் வாழை தோப்புகள் வாஞ்சையாய் வரவேற்கும். நாட்டுக்கோழிகள் ‘பக்… பக்…’ சத்தமும், தென்னை ஓலைகளின் சலசலப்பும் வனாந்திர அனுபவத்தை வசப்படுத்தும்.
கண்ணுக்கு எட்டியதுாரம் வரை பசுமை வஞ்சனையின்றி வசியம் செய்கிறது. ஆங்காங்கே இடைவெளி விட்டு ஏழு ஏக்கரில் மீன்கள் வளர்ப்பு, அவற்றின் உணவுக்கு அசோலா வளர்ப்பு, இயற்கை உரத்திற்கு நாட்டு மாடுகள், சாணத்தில் இருந்து மண்புழு உரம் என… ஒருங்கிணைந்த பண்ணையத்தின் உன்னதத்தை உணர்த்துகிறது விவசாயி உதயகுமாரின் தோட்டம்.
இயற்கை விவசாயம் சாத்தியமானது எப்படி என்பது குறித்து உதயகுமாரே விளக்குகிறார்.
”கொந்தகை அருகே பாட்டம் கிராமத்தில் 54 ஏக்கரில் சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பான முறையில் இயற்கை விவசாயம் செய்கிறோம். திறந்த நிலை கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து மீன் பண்ணைக்கு நிரப்புகிறோம். கண்மாய் தண்ணீரில் சுகாதாரம் இருக்காது என்பதற்காகவே அதைப் பயன்படுத்துவதில்லை.
மீன்கள், கோழிகளுக்காக அசோலா உற்பத்தி செய்கிறோம். இதில் புரதச்சத்து நிறைய இருப்பதால் நல்ல உணவாகிறது. கட்லா, மிர்கால், கெண்டை மீன்கள் வளர்த்து விற்பனை செய்கிறோம். உயிருள்ளமீன்களை விற்பனை செய்வது தான் எங்கள் திட்டம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
நாட்டுக்கோழி எச்சமும் நிலத்துக்கு உரமாகிறது. புழு பூச்சிகளை கிளறி உண்பதால் தோட்டமும் சுத்தமாகிறது. இவற்றுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. நாட்டு மாடுகளின் சாணத்தை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கிறோம்.
இந்த உரத்தை தென்னை, வாழை தோப்புக்கும், காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்துகிறோம். வேறு பூச்சிக்கொல்லிகளோ, ரசாயன உரமோ பயன்படுத்துவதில்லை.
கத்தரி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாம் என்ன சாப்பிட மாட்டோமோ அதை மற்றவர்களுக்கும் கொடுக்கக்கூடாது. அதற்காகவே ஐந்தாண்டுகளுக்கு முன் இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.
இங்கு உற்பத்தி குறைவாக இருக்கும். ஆரோக்கியமான காய்கறிகள் கிடைக்கும். ஆனால் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைவிப்பவர்களுடன் எங்களால் உற்பத்தியில் போட்டியிட முடியாது.
போர்வாட்டர், மேல்நிலைத் தொட்டி மூலம் கொண்டு வருவதால், பைப் லைன் மூலம் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனப் படுத்துகிறோம்.தண்ணீரை பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது, என்றார்.
தொடர்புக்கு 09442404447
– எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்