ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பதி!

₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பதி!

“என் நிலத்துல இருந்து காய்கறிகளையும், நெல்லையும் தவிர எதுவும் வெளியில போகாது. அதே நேரம் எந்தப் பொருளும் நேரடியான இடுபொருளா என் நிலத்துக்குள்ள வராது” – என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார்கள் நடராஜன் – அனுராதா தம்பதியர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ளது, புதுப்பாளையம் கிராமம்.

தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்காகக் கட்டிக் கொண்டிருந்த நடராஜன் – அனுராதா தம்பதியரைச் சந்தித்துப் பேசினோம். நம்மைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்ற நடராஜன் பேச்சை ஆரம்பித்தார்.

ஜீரோ பட்ஜெட்டில் கலக்கும் விழுப்புரம் தம்பதி

“எனக்குச் சொந்த ஊர் விக்கிரவாண்டிதான். பாரம்பர்யமான விவசாயக் குடும்பம்தான். எங்க அப்பா காலத்துக்குப் பின்னால விவசாயத்துல கொஞ்சம் இடைவெளி விட்டுட்டேன்.

சின்ன வயசுல எங்க அப்பா கூட விவசாய வேலைகள் செஞ்ச அனுபவம் உண்டு. எங்க அப்பா எப்பவுமே ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில நெல்லை மட்டும் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வருவார். அதுவும் இயற்கை விவசாய ஆசை வர்றதுக்கு ஒரு வகையில காரணம்தான்.

அதுக்கப்புறமா படிப்பை முடிச்சிட்டு, விக்கிரவாண்டியில சின்னதா துணிக்கடை வச்சேன். அப்புறமா முழுநேரமா தொழிலைக் கவனிக்க ஆரம்பிச்சேன். நாம சாப்பிடுற காய்கறிகளைப் பத்தின விழிப்புஉணர்வு அப்போ எல்லாம் அப்போ இல்லை.

2009-ம் வருஷம் பசுமை விகடன் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். பொதுவா ஒரு புத்தகம் ஒருத்தரோட வாழ்க்கையை மாத்துறதைக் கேள்விப்பட்டிருக்கேன். என் வாழ்க்கையை பசுமை விகடனுக்கு முன், பின்னு ரெண்டாப் பிரிக்கணும்.

என் மனைவி இன்னும் தீவிரமான பசுமை விகடன் வாசகி. பசுமை விகடன்ல வர்ற இயற்கை விவசாயம் பத்தின கருத்துகள் என்னையும், என் மனைவியையும் ஆழமா சிந்திக்க வெச்சது. இயற்கை காய்கறிகள், ரசாயன உரம் பாதிப்பு பத்தி வெளியான கருத்துகள் எங்களோட குழந்தையோட எதிர்காலத்தைப் பத்தி சிந்திக்க வெச்சது.

திருவண்ணாமலையில் நடந்த சுபாஷ் பாலேக்கரோட பயிற்சியில கலந்துக்கிட்டேன். அப்புறமா கொடீசியாவுல பாலேக்கர் தலைமையில் நடந்த 4 நாள் பயிற்சியிலேயும் கலந்துகிட்டேன். அப்பவே நாட்டு மாடுகள் வாங்கிட்டேன்.

அதனால 2010-ல இருந்தே விவசாயம் செய்ய நல்ல நிலம் தேடிக்கிட்டிருந்தோம். கடைசியா 2013-ம் வருஷம் இந்த நிலம் கிடைச்சது. ஆனா நாங்க நினைச்ச மாதிரி இது விவசாயம் செய்துக்கிட்டிருந்த நிலம் இல்லை. கரடு முரடான சரளை மண்ணா இருந்தது.

நம்மாழ்வாரோட வானகம் கண்முன்னே வந்துச்சு. அதனால கண்ணை மூடிக்கிட்டு இந்த நிலத்தை வாங்கிட்டேன். நிலத்தைச் சமன்படுத்தி விவசாயம் செய்ய எங்களுக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சு. சரியா 2014-ம் வருஷம் விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். முதல் முதலா கிச்சலிச் சம்பாவும், சீரகச் சம்பாவும் பயிர் செஞ்சோம். அப்போ இயற்கை இடுபொருள்கள் உபயோகிச்சு, 2 ஏக்கர்ல முதல்முறையாப் பயிர் செஞ்சோம்” என்றவரை மறித்துத் தொடர்ந்தார், அனுராதா.

“2 ஏக்கர்ல சேர்த்து முதல் போகம் 18 மூட்டை கிடைச்சது. அப்போ ஊர்க்காரங்க எல்லாம் எங்களை முட்டாளைப் பார்க்குற மாதிரி பார்த்தாங்க. நாங்க எதுக்கும் கவலைப்படலை. கரடு முரடா கிடந்த நிலத்துலயே 18 மூட்டை கிடைச்சது மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. அதனால அடுத்தமுறையும் ரெண்டு ஏக்கர்ல கிச்சலிச் சம்பா, சீரகச் சம்பா நெல்லை விதைச்சோம். அப்போ ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை கிடைச்சது.

இந்த முறை ஊர்க்காரவங்க பார்வை கொஞ்சம் எங்கமேல விழ ஆரம்பிச்சது. நாங்க உபயோகப்படுத்துன ஜீவாமிர்தத்தையும், மாட்டு எருவையும் மதிக்க ஆரம்பிச்சாங்கனு கூட சொல்லலாம். அப்போ ஆரம்பிச்சு கடந்த 5 வருஷமா இயற்கை விவசாயம் செய்துக்கிட்டு வர்றேன். அதனால இயற்கை சார்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்ல அதிகமாக் கலந்துக்குவேன். முக்கியமா பசுமை விகடன்ல வர்ற 60 சதவிகிதம் பேரையாவது நேர்ல பார்த்திடுவேன். நெல்தான் எங்களோட பிரதானப் பயிர். இப்பக்கூட ஒரு மாசத்துக்கு முன்னாலதான் அறுவடை முடிஞ்சது.

ஏக்கருக்கு 20 மூட்டை மகசூல் கிடைச்சது. அடுத்ததா காய்கறிகளையும் பயிர் செய்யலாம்னு தோணிச்சு. அதுக்காக 7 சென்ட்ல. பந்தல்ல புடலை, பாகல்னு ரெண்டு காய்கறிகளையும் நடவு செய்திருக்கோம். அதுல முறையான லாபம் வர ஆரம்பிச்சிடுச்சு. ஆடி 18-ம் தேதி விதைச்சோம். புரட்டாசி ஆரம்பிக்குற நேரம் அறுவடைக்கு வந்துருக்கு. முதல்ல 6 கிலோ அறுவடை ஆச்சு.

இப்போ 25 கிலோ வரைக்கும் அறுவடை ஆகிட்டு இருக்கு.3 நாளைக்கு ஒருமுறை பறிச்சிக்கிட்டு இருக்கோம்” என்றவரை தொடர்ந்து நடராஜன் பேசினார்.

பந்தல் காய்கறிகள்

இதுபோக 40 சென்ட்ல மேட்டுப்பாத்தி முறையில தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய்னு காய்கறி வகைகளை நடவு செய்திருக்கோம். பல பயிர் சாகுபடி முறையை புதுசா அமைச்சிருக்கேன். அதுல மூடாக்குத் தொழில்நுட்பம் மூலம் செய்துக்கிட்டு வர்றேன். இப்போதான் பயிர்கள் வளர ஆரம்பிச்சிருக்கு.

40 சென்ட் வயலைச் சுற்றிலும், ஆமணக்குப் பயிர் செய்திருக்கேன். இது வயலுக்கு உள்ள வர்ற பூச்சிகளை தடுக்கும். இதுபோகப் பூச்சித் தாக்குதல் அதிகமா இருந்தா புகையிலையை வாங்கி தண்ணியில கலந்து செடிகளுக்குத் தெளிப்பேன். பூச்சித் தொல்லை அதோட அத்துப்போச்சு.

இது அறுவடைக்கு வர்றப்போ இன்னும் நல்ல லாபம் கிடைக்கும். இதுபோக வயல்ல விளக்குப் பொறியும், இனக் கவர்ச்சிப் பொறியும் வெச்சிருக்கேன். அதுவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுது.

6 சென்ட்ல பந்தல்ல இருக்குற பயிர்களுக்கும் களை எடுக்குறது இல்லை. களை எடுக்குற மிஷின்ல அப்படியே கொத்தி விட்ருவோம். பாசனத் தண்ணீர் கூட ஜீவாமிர்தம் கலந்து விடுவோம். அதௌப் பயிருக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்குது. இயற்கை விவசாயம் ஆரம்பிச்சப்போ கொஞ்ச நாள்ல என்னடா இதுனு தோணுச்சு.

என் மனைவிதான் எனக்கு பக்கபலமா இருந்தாங்க. அதுனாலதான் இது மொத்தமா சாத்தியம் ஆயிருக்கு. 5 சென்ட்ல கோ-4 மாட்டுத் தீவனப் புல் பயிர் இருக்கு. இதுபோக ஜீவாமிர்தம் தயாரிக்குறதுக்கு மாட்டுத் தொழுவத்துல இருந்து வழியுற தண்ணீரைச் சேமிக்கிறேன்.

கிட்டத்தட்ட பாலேக்கர் சொல்ற எல்லாத்தையும் பரிசோதனை செஞ்சு பார்த்துக்கிட்டு இருக்கேன். இதுபோக, எனக்குத் தேவையான பயிர்களை குழித்தட்டுல நாத்து விட்டு அதைப் பயன்படுத்திக்குவேன். அப்போதான் பாரம்பர்ய ரகப் பயிர்கள் கிடைக்கும்ங்குறது என்னோட நம்பிக்கை.

கிணத்துப் பாசனம்தான் செய்துக்கிட்டிருக்கேன். அதுல பல காய்கறி விதைப்புகளுக்கு மட்டும் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன். திண்டிவனம் கே.வி.கே மூலமா விழுப்புரம் மாவட்ட இயற்கை விவசாயச் சங்கம் ஆரம்பிச்சு நான் தொழில்நுட்ப ஆலோசகராவும், என் மனைவி செயலாளராவும் இருந்துகிட்டு வர்றாங்க. அதுமூலமா இயற்கை காய்கறிகளை விற்பனை செய்யவும், அங்ககச் சான்றிதழ் வாங்கி கொடுத்துகிட்டு இருக்கோம்.

விழுப்புரம் மாவட்டத்துல யார் இயற்கை பொருள்களை விற்பனை செய்யணும்னு நினைச்சாலும் எங்களை அணுகலாம்” என்றவர் நிறைவாக வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“இதுவரைக்கும் புடலை, பாகல் காய்களை ரெண்டு, மூணு நாளைக்கு ஒருமுறை பறிச்சிக்கிட்டு வர்றோம். இதுவரைக்கும் 25 பறிப்பு முடிஞ்சிருக்கு. புடலை 250 கிலோவும், பாகல் 60 கிலோவும் கிடைச்சிருக்கு. ஆரம்பப் பறிப்புல கொஞ்சம் குறைவாத்தான் கிடைச்சது. போகப் போகத்தான் மகசூல் அதிகமா கிடைச்சது. எந்தக் காய்கறி விற்பனை செஞ்சாலும் கிலோ 30 ரூபாய்க்குத்தான் கொடுத்துக்கிட்டுத்தான் வர்றோம்.

இப்போ புடலையும் பாகலும் மொத்தமா 310 கிலோ கிடைச்சிருக்கு. அதுமூலமா 310 கிலோவுக்கு 9,300 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. எங்களுடைய கடையிலேயே காய்கறிகளை விற்பனை செய்யுறதால எங்களுக்குப் போக்குவரத்து செலவு, ஆள் கூலியைத் தவிர எந்தவிதமான செலவும் இல்லை. 9,300 ரூபாய்ல 500 ரூபாய் செலவா கழிச்சாலும் 8,800 ரூபாய் லாபமா நிற்குது. இன்னும் 15 நாள்கள்ல 3 நாளைக்கு ஒரு பறிப்புனு 5 பறிப்பு பாக்கி இருக்கு.

ஒரு பறிப்புக்குப் புடலையும், பாகலும் சேர்த்து குறைஞ்சபட்சம் 50 கிலோ புடலையும், 13 கிலோ பாகலும் மகசூல் கிடைக்கும். எப்பவுமே 30 ரூபாய்க்கு மேல எந்தக் காய்கறிகளையும் விற்பனை செய்யப்போறது இல்லைங்குறதுல உறுதியா இருக்கோம். சுபாஷ் பாலேக்கரோட வழிப்படி முழுமையான ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறிடணும்ங்குறதுதான் எங்களோட ஆசை” என்றபடி விடைகொடுத்தனர், நடராஜன் – அனுராதா தம்பதியர்.

நன்றி:பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *