தரிசு நிலத்தை பசுமை தோட்டமாக்கிய விவசாய விஞ்ஞானி

மழை பொழிவு குறைவு, விளை பொருளுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் சிவகங்கை போன்ற வறட்சி மாவட்டங்களில் பலர் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் முட்புதர் காடாகவும், தரிசாகவும் இருந்த நிலத்தை பசுமையாக மாற்றியுள்ளார் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு விஞ்ஞானி கே.ரங்கராஜன், 78. இவர் மா, தென்னை, மக்காச்சோளம், நிலக்கடலை, கத்தரியை சாகுபடி செய்துள்ளார். மேலும் மாடு, கோழிகளையும் வளர்த்து வருகிறார்.

விவசாய விஞ்ஞானி

கொச்சி வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக 37 ஆண்டு பணிபுரிந்தேன். ஓய்வு பெற்றதும், 15 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதில் 2001ல் 12 லட்சம் ரூபாயில் 28 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். முட்புதர்களாகவும், மேடு, பள்ளமாகவும் இருந்த நிலத்தை பண்படுத்த மீதிப்பணத்தையும் செலவழித்தேன். ஒரு திறந்தவெளி கிணறு, இரண்டு ‘போர்வெல்கள்’ உள்ளன. ‘போர்வெல்’ தண்ணீரும் கிணற்றிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் மூலம் பயிர்களுக்கு பாய்ச்சுகிறோம்.

15 டன் மாங்காய்

மொத்தம் 12 ஏக்கரில் மா மரங்கள் உள்ளன. இதில் பங்கனப்பள்ளி, இமாபசந்த், கல்லாமை, பாலாமணி ரகங்கள் உள்ளன. சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம். 4 ஆண்டுகளில் காய்க்க துவங்கின. ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, ஊக்குவிப்பு மருந்துக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவழிக்கிறோம். ஆண்டுக்கு 10 முதல் 15 டன் மாங்காய் கிடைக்கும். ஊடுபயிராக தட்டை, உளுந்து, துவரை பயிரிட்டுள்ளோம்.

‘சிம்ரன்’ கத்தரி

ஒரு ஏக்கரில் ‘சிம்ரன்’ ரக கத்தரியை சாகுபடி செய்துள்ளோம். வாரத்திற்கு 450 கிலோ கிடைக்கிறது. ஆறு மாதங்களுக்கு பலன் கிடைக்கும். அவற்றிற்கு ‘ஸ்பிரிங்லர்’ மூலம் நீர் பாய்ச்சி வருகிறோம். மொத்தம் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளேன். நான்கு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கரில் நிலக்
கடலையும் சாகுபடி செய்தோம்.

பண்ணை குட்டை

வரப்புகளில் வேலி போன்று தென்னை, தேக்கு மரங்களை வைத்துள்ளோம். தென்னை மூலம் இளநீர், தேங்காய் கிடைக்கிறது. பத்து பசுக்கள் வளர்க்கிறோம். அவற்றில் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீரை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துகிறோம். தவிர நாட்டுக்கோழிகள், வான்கோழிகள், கின்னி கோழிகளும் உள்ளன. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க 5 பண்ணை
குட்டைகள் உள்ளன. மீன் வளர்த்தோம். நல்ல லாபம் கிடைத்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பலன் தருவதால் பணக் கஷ்டம் ஏற்படாது, என்றார்.

தொடர்புக்கு 9442722928 .
– இ.ஜெகநாதன், சிவகங்கை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *