திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா மே 28, 29ம் தேதிகளில் நடக்கிறது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.
ஆண்டுதோறும் ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவை நடக்கிறது.
அதன்படி, இந்தாண்டு மே 28, 29ம் தேதிகளில் நடக்கும் கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை சட்டங்களும் – கொள்கைகளும், நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்தும், உணவு பாதுகாப்பு, தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், ஆந்திர மாநிலத்தின் ஒரு பார்வை.
இயற்கை வேளாண்மை திட்டங்கள், கேரளா – கர்நாடகா ஒரு பார்வை, பாரம் பரிய நெல் ரகங்களின் மகத்துவம், மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் – தேசிய அளவில் ஒரு பார்வை, விளை நிலங்கள் பிற உபயோகங்களுக்கு மாற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், இயற்கை விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், எண்டோசல்பான் பாதிப்பு குறித்தும் அமர்வுகள் நடக்கிறது.
இதில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிஸா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்குகின்றனர்.
மொத்தம் 60 முதல் 180 நாட்கள் வரை உள்ள நெல் விதைகள், அதிலும், வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள், களைகளை கட்டுப்படுத்தக்கூடிய நெல் ரகங்கள், உவர்நில நெல் ரகங்கள், சன்னரகம், நடுத்தர ரகம், மோட்டா ரகம் என மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 47 வகையான விதை நெல் இவ்விழாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விழாவில், பங்கேற்கும் விவசாயிகளுக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதை மற்றும் உணவும் வழங்கப்படுகிறது.
கலந்து கொள்ளும் விவசாயிகள், “ஒருங்கிணைப்பாளர்கள், இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பெருமாள் கோவில் தெரு, ஆதிரெங்கம், கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்,’ என்ற முகவரிக்கு தபால் கார்டில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்