செம்மண் நிறைந்த சிவகங்கை மாவட்டம் கண்மாய் பாசனத்தில் கை தேர்ந்தது. கடை மடை வரை ஓடிய தண்ணீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் முதல் மடைக்கே செல்வதற்கு முடியாமல் திணறுகிறது. முப்போகம் நெல் விளைந்த பூமியில் தற்போது ஒரு போகம் விளைவிக்க விவசாயிகள் படாதபாடுபட வேண்டியுள்ளது.
‘மாற்றம் ஒன்றே மாற்றத்துக்கு வழி’ என மெல்ல மெல்ல விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ”தோட்ட பயிர் சாகுபடியை முறைப்படி செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம்,” என்கிறார் கல்லல் விவசாயி எஸ்.சிவ கணேசன். இவர் நெற்புகப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாச்சிபட்டியில் ஒருங்கிணைந்த பயிர் பண்ணையம் நடத்தி வருகிறார்.அவர் கூறியதாவது:
14.5 ஏக்கரில் பயிர் பண்ணையம் நடத்துகிறேன். குறிப்பாக வெங்காயம், நிலக்கடலை சாகுபடியில் கவனம் செலுத்துகிறேன். வெங்காயத்தை பொறுத்தவரை விளைந்த நேரத்தில் விலை நன்றாக இருந்தால் லாபம். பராமரிப்பு தேவை இல்லை.
மேட்டுப்பாத்தி அமைத்து வெங்காயம் பயிரிடலாம். மருந்து அடிக்க தேவையில்லை. இயற்கை பூச்சிக்கொல்லி போதுமானது. 40 சென்டில் சிறிய,பெரிய வெங்காயம் பயிரிட்டுள்ளேன். மூன்று மாதத்தில் விளைச்சலை எடுக்கலாம். ஊடு பயிராக கடலை விதைத்துள்ளேன்.
கடலையை பொறுத்தவரை 17வது நாள் களையெடுத்து, 45-வது நாள் செடியின் வேர் பகுதியில் மண் சேர்த்து விட வேண்டும்.
தேவை என்றால் மண் வளத்தை அதிகரிக்க ஜிப்சம் இடுலாம். 60 முதல் 80 நாளில் விளைச்சலை எடுக்கலாம். வழக்கமான எரு உள்ளிட்ட இயற்கை உரங்கள் போதுமானது.
பயிர் பண்ணையம் வளாகத்தின் ஒரு பகுதியில் பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, இமாம் பசந்த் ரகங்களை உள்ளடக்கிய 280 மா மரக்கன்றுகளை வைத்துள்ளேன்.
மாமரத்தை பொறுத்தவரை மூன்றாவது ஆண்டு முதல் ஆயுள் வரை பலன் கொடுக்கும். 15 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். தென்னை, கடலை, கத்தரி, செம்மரமும் வளர்க்கிறேன்.
நெல்லை விட தோட்டப்பயிர் லாபம் கொடுக்க கூடியது. சுழற்சி முறையில் இவற்றை பயிரிடும்போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் பலன் கொடுத்து கொண்டே இருக்கும்.
பெரு விவசாயிகள் பண்ணை குட்டை அமைத்து கொண்டால், மழைக்காலங்களில் நிலத்தில் பெய்யும் மழை நீர் வெளியே செல்லாது. நிலத்தடி நீர் மட்டம் குறையாது. முறைப்படி தோட்ட விவசாயம் மேற்கொண்டால் தொட்டதுதுலங்கும் என்றார்.
தொடர்புக்கு 09443919563 .
– டி.செந்தில்குமார் காரைக்குடி.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்