நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி

நாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கிடையே, “இயற்கை விவசாயம்தான் மகிழ்ச்சியளிக்கிறது” என மனம் திறக்கிறார், இயற்கை விவசாயி நடராஜன். தோட்டத்தில் பப்பாளி இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

Courtesy: Pasumai vikatan

 

 

 

 

“விழுப்புரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் காணை பக்கத்தில் இருக்கிறது, அகரம் சித்தாமூர். என்னுடைய அப்பா, தாத்தா, முப்பாட்டன்னு பரம்பரையா எல்லாரும் விவசாயம் செஞ்சிட்டு வந்தவங்கதான். சின்ன வயசுல இருந்து வயல்ல வேலை செய்துகிட்டே இருப்பேன். அப்போ விவசாயம் செய்யுறப்போ ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்வேன். ஒரு கட்டத்தில் யார் கண்ணு பட்டுச்சோன்னு தெரியலை. புகையான் விழுந்து மூணுல ஒரு பங்குதான் மகசூல்தான் கிடைச்சது. அதனால குடும்பத்துல ரொம்ப வறுமையா இருந்துச்சு. அதனால நான் பெங்களூருக்கு வேலைக்குப் போயிட்டேன். என்னதான் வறுமை இருந்தாலும், என் வீட்டில் தொடர்ந்து விவசாயம் செஞ்சிட்டுதான் இருந்தாங்க. கொஞ்ச வருஷத்துக்கு அப்புறமா பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தப்போ   தமிழ்ப் புத்தகங்கள் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். விவசாயத்து மேலஆர்வம் இருந்ததால பசுமை விகடன் புத்தகத்தையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல வர்ற இயற்கை விவசாய தகவல்கள் எல்லாம் என்னை ஈர்க்க ஆரம்பிச்சிடுச்சு.

பப்பாளித்தோட்டம்

அப்போதிருந்தே பசுமை விகடனுக்குத் தீவிர வாசகனா மாறிட்டேன். அதுக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்து மேலயும் ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் சார்புல பாண்டிச்சேரியில் விவசாயிகளுக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் நானும் கலந்துகிட்டேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையில பெரிய திருப்பு முனை. யாருன்னுகூட தெரியாம நம்மாழ்வார்கூட பேசிட்டு இருந்தேன். அவர் மேடைக்கு போனதுக்கப்புறம்தான் அவரைப் பத்தி தெரிஞ்சது. அவர் சொன்ன உதாரணத்தைக் கண்டிப்பா இங்க சொல்லனும். ‘படிப்புனா என்ன? கல்வினா என்ன?’ என்னனு அவர் கேட்டதும் குழப்பமா இருந்துச்சு. அதுக்கான பதிலை, ‘படிப்புங்கிறது படிச்சு தெரிஞ்சுக்குறது… கல்விங்கிறது கத்துக்கிட்டு செய்றது’னு சர்வசாதாரணமா சொன்னாரு சொன்னாரு நம்மாழ்வார்.

‘விவசாயம்கிறதும் கல்வி மாதிரிதான் கத்துக்கிட்டு பண்ணனும்’னு சொன்னாரு. அவர் எழுதின புத்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நம்மாழ்வாரின் மீதுள்ள பற்றுதல் காரணமா என்னோட பேரை ‘நம்மாழ்வார் நடராஜன்’னு மாத்திக்கிட்டேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் 2013- ல் விவசாயம் பண்ணலாம்னு சொந்த ஊருக்குத் திரும்பி வந்தேன். என்ன பயிர் வைக்கறதுன்னு எதுவும் பிடிபடலை. அந்தநேரம் பசுமை விகடன்தான் வழிகாட்டலா இருந்துச்சு. கோயம்புத்தூர் பக்கத்துல இருக்குற ஒருத்தரை சந்திக்கிறதுக்கான வாய்ப்பையும் பசுமை விகடன் ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு என் தோட்டத்துல பப்பாளி நடவு செஞ்சேன்” என்று நெகிழ்ச்சியோடு சொன்ன நடராஜன், இயற்கை விவசாய முறையில் தான் பயிர் செய்யும் விதம் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்தார். அவை பாடமாக…

காய்த்துக்குளுங்கும் பப்பாளிகள்

குழி எடுத்து செடியை நடவு செய்யும்போது, மேல் மண்ணுடன் எரு, இயற்கை உரம் கலந்து குழியை மூட வேண்டும். அதன் பிறகு, செடியை நடவு செய்து நீர் பாய்ச்சவேண்டும். பிறகு 15 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலை செடிகளின் மீது தெளிக்க வேண்டும். மாதம் இரண்டு முறை பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்கினால் வேப்ப எண்ணெய், புங்க மற்றும் இலுப்பை எண்ணெயைச் சேர்த்து செடியின் மீது தெளிக்க வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை இதனைச் செய்ய வேண்டும். இதுதவிர இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசலையும் செடிகளின் மீது தெளிக்கலாம். களத்துமேட்டுல இருக்குற தாவரக்கழிவுகளை பப்பாளி தோட்டத்துல போடணும். ஜீவாமிர்தத்தை வாரம் ஒரு முறை தண்ணீரோட பாய்ச்சலாம். என்னோட ரெண்டு ஏக்கர் தோட்டத்துல 1,000 பப்பாளிக் கன்னுங்களை நடவு செய்திருக்கேன். இதுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். ஒரு வருஷத்துக்கு பிறகு மகசூல் ஆரம்பிச்சுடுச்சு. ஒண்ணரை வருஷம் வரைக்கும் தொடர்ந்து அறுவடை செய்யலாம். வாரம் ஒரு தடவை பழங்களைப் பறிச்சி ஊர் சந்தையிலயும், விழுப்புரம், சென்னையிலயும் விற்பனை செய்றேன். ஒரு கிலோ 25 ரூபாய் விலைக்கு விற்பனையாகுது. இயற்கை முறையில விளைவிக்கிறதால மக்களும் விரும்பி வாங்குறாங்க” என்று சொன்னார் நடராஜன்.

குடும்பத்துடன் பப்பாளித் தோட்டத்தில் நடராஜன்

மேலும், இவருடைய தோட்டத்தில் தக்காளி, கத்திரிக்காய், பாசிப்பயறு, தட்டைப்பயறு, கீரை வகைகள் என அனைத்தும் பயிரிடுகிறார். நாட்டுமாடு, ஆடு, கோழி என வளர்த்து இயற்கை விவசாயத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் வளர்க்கும் முயற்சிகளில் தற்போது இறங்கியிருக்கிறார்.

“இந்த இயற்கை விவசாயத்துல எங்க குடும்பத்துல உள்ளவங்களோட மனசும், உடம்பும் ஆரோக்கியமா இருக்கு. கடந்த 4 வருஷமா நோய், நொடினு ஆஸ்பத்திரிக்கு போறது இல்ல. இயற்கை விவசாய சங்கம் ஆரம்பிச்சி, அதில் அதிகப்படியான விவசாயிகளை இணைச்சி இயற்கை விவசாயத்தோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிட்டு வர்றோம். இதுவரைக்கும் நான் படிச்சி சேகரிச்சி வெச்சிருக்கிற பசுமை விகடன் புத்தகங்கள், நம்மாழ்வாரோட புத்தகங்கள் எல்லாத்தையும் வெச்சி நூலகம் அமைக்கவும் திட்டமிருக்கு. இது, எதிர்கால சந்ததிக்கு விவசாய வழிகாட்டுதலா இருக்கும்னு நம்புகிறேன்” என்று சொன்னார்.
முயற்சி என்பது விதை போன்றது. அதை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்… முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம் என்று நம்மாழ்வார் சொல்வார். அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் அவருடைய பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கும் நடராஜன்!

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *