இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மனித உடல் ஆரோக்கியத்தையும் நிச்சயம் காப்பாற்றும் என்று நெல் திருவிழாவில் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் கடந்த 4, 5-ம் தேதிகளில் ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற பாரம்பரிய நெல் திருவிழா கிரியேட் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயம் காப்பாற்றும்
“திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பாவும், திருமணத்துக்குப் பிறகு கவுனிஅரிசியும், மகப்பேற்றின்போது பூங்காரும், குழந்தை பிறந்த பிறகு பால்குடவாரையும், பிறந்த குழந்தைக்குச் சாதம் ஊட்ட வாரன்சம்பா என மருத்துவக் குணம் நிறைந்த பாரம்பரிய நெல் வகைகள் தமிழகத்தில் நீண்டகாலமாகப் பயிரிடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ரசாயன உரங்கள் வந்ததால், பாரம்பரிய ரகங்கள் அழிந்தன. இதுவரை 156 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது 10-வது ஆண்டு நெல் திருவிழா. இந்த விழாவை மத்திய, மாநில அரசுகளே நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதேபோல் ரசாயன உரங்களுக்கு வழங்கும் மானியத்தைப்போல், இயற்கை சாகுபடிக்கும் மானியம் வழங்க வேண்டும்” என்றார் நெல் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன்.
விவசாயிகள் தீர்மானிப்பார்களா?
காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன்:
நம்முடைய முன்னோர்கள் மேற்கொண்டது இயற்கை விவசாயம்தான். காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும், உணவு பற்றாக்குறை காரணமாக அதிக விளைச்சலைப் பெற ரசாயன உரங்கள் விஞ்ஞானிகளால் புகுத்தப்பட்டன. இதனால் நிலத்தின் வளம் கெட்டது மட்டுமல்லாமல், மனித உடல்நலமும் கெட்டது.
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் இப்போது விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும். அதேபோல் விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் விலையை நிர்ணயிக்கக்கூடிய சூழல் மாற வேண்டும்.
பூச்சிக்கொல்லியைக் கட்டுப்படுத்துவோம்
திருவனந்தபுரம் நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் ஸ்ரீதர்:
பூச்சிக்கொல்லி என்றைக்கு இங்கே புகுந்ததோ, அன்றே மனிதக் குலத்தில் வியாதிகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. தமிழக விவசாயிகள் அளவுக்கு அதிகமாகப் பூச்சிக்கொல்லியைத் தெளிப்பதால்தான், தமிழகக் காய்கறிகளை வாங்குவதற்குக் கேரளத்தில் யோசிக்கின்றனர். இதை அரசு கண்காணிக்க வேண்டும். ரசாயன உரங்களின் வரவால்தான் மனிதர்களுக்கு அதிக நோய்கள் வருகின்றன. இதைத் தவிர்க்க விவசாயிகளால் மட்டும்தான் முடியும். ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைக்க விவசாயிகள் முன்வருகின்றனர். விவசாயத்தையும் சமுதாயத்தையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பூச்சிக்கொல்லியை கட்டுப்படுத்த வேண்டும்.
இயற்கை கைவிடாது
கிரியேட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஆர். பொன்னம்பலம்:
ரசாயன உரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது பறவை இனங்கள்தான். மனிதர்கள் எந்த அளவுக்குப் பாதிப்பை அனுபவித்து வருகிறார்களோ, அதைவிட மோசமாகப் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் மணிகளை விரும்பி உட்கொள்ளும் சிட்டுக்குருவி நகர்ப்புறங்களில் இருந்து காணாமல் போய்விட்டது. அதேபோல் தானியங்களை உட்கொள்ளும் அணிலும் வெகுவாகக் குறைந்துவருகிறது. இதற்கெல்லாம் ரசாயன உரங்களே முக்கியக் காரணம். ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு இயற்கைக்கு மாறினால், விவசாயிகளை இயற்கை கைவிடாது.
நிலத்தை நலமாக்குவோம்
வேளாண் அலுவலர் பூச்சி நீ. செல்வம்:
இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகக் குறிப்பு உள்ளது. ரசாயன உரங்களின் வரவால் இவற்றையெல்லாம் இழந்துவிட்டோம். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால், மண்ணில் ரசாயனத்தைப் பயன்படுத்தத் தொடங்கினோம். அதனால் பாரம்பரிய, மருத்துவக் குணம் வாய்ந்த நெல் வகைகளை இழந்து விட்டோம்.
மண்ணின் வளத்தைக் காப்பாற்றியாக வேண்டிய தருணத்தில் உள்ளோம். இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டுமானால் கோடைமழையில் நிலத்தை உழுது நவதானியங்களை விதைத்து, பூக்கும் தருணத்தில் அதை மீண்டும் உழுது இயற்கை விவசாயத்தைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மண் வளமாக இருக்கும். நிலத்தை வளமாக்குவதைக் காட்டிலும் நலமாக மாற்றினாலே போதும். விவசாயம் செழிக்கும்.
விவசாயிகளுக்கு வேண்டுகோள்
நடிகர் விஷால்:
தஞ்சை விவசாயி பாலனின் டிராக்டர் கடன் பிரச்சினை பற்றிக் கேள்விப்பட்டதும், என்னைப்போல் நடிகர் கருணாகரனும் உதவி செய்தார். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என விவசாயத்தை வர்ணிக்கிறார்கள். பொறியியல் துறை, மருத்துவத் துறை போன்ற இயற்கை விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
எனக்கு விதை விதைக்கும் வேலை ரொம்பப் பிடிக்கும். விவசாயிகளுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாற வேண்டும். விரைவில் தஞ்சை மாவட்டத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். என்னுடைய நீண்ட நாள் விருப்பம் அது.
விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கடன் உள்ளிட்ட எந்தப் பிரச்சினை வந்தாலும், தற்கொலை முடிவுக்குப் போகக் கூடாது. அது நிரந்தரத் தீர்வும் அல்ல. விவசாயிகளும் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
கவனம் ஈர்த்தவை…
# விழாவின் ஒரு பகுதியாக நம் மண்ணில் பயிரிடப்பட்டுக் காலப்போக்கில் அழிந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா, கைவரச் சம்பா, சிங்கினிச் சம்பா, மடுமுழுங்கி, இலுப்பைப்பூ சம்பா, குழியடிச்சான், கொட்டாரச் சம்பா, தூயமல்லி, ஆரக்குறுவை, காட்டுயானம், குடவாழை எனப் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
# வழக்கம்போல், விழாவுக்கு வந்திருந்த விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பிய இரண்டு கிலோ பாரம்பரிய நெல் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு நெல் திருவிழாவின்போது நான்கு கிலோ நெல்லை அவர்கள் தர வேண்டும் என்பது மட்டுமே இதற்கான ஒரே நிபந்தனை. விவசாயிகள் பலரும் பாரம்பரிய நெல்லை வாங்கிச் சென்றனர். அதேபோலக் கடந்த ஆண்டு வாங்கிச் சென்று சாகுபடி செய்த நெல்லைக் கொண்டுவந்து பல விவசாயிகள் ஒப்படைத்தனர்.
# அழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அறுவடை செய்யத் தயாராக உள்ளதாக இளம் விவசாயிகளும், விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளும் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டனர்.
# நெல் திருவிழாவில் பலரையும் கவர்ந்த தின்பண்டம் மாப்பிள்ளைச் சம்பா அரிசியால் தயாரிக்கப்பட்ட பொரியும் பொரிஉருண்டையும்தான். ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டதன் காரணமாகக் கட்டுப்படியான விலை, உடலுக்கும் ஆரோக்கியம் என்பதால் பலரும் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
நெல் விழாவில் பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மை ஸ்கூல் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 29 பேர் நெல் திருவிழாவில் கலந்துகொண்டனர். மாணவர்களுடன் வந்த ஆசிரியை கவிதா கூறுகையில், “நமது பாரம்பரியத்தைப் பற்றி வரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்தோம். இதுவரை நாங்கள் பார்த்திராத, அறியாத நெல் ரகங்களை இங்கே பார்த்தோம். இவற்றை மீட்க எங்களால் ஆன முயற்சிகளைச் செய்வோம்” என்றார். பாரம்பரிய உணவு முறையையும், அவை தரும் பலனையும் தெரிந்துகொண்டதால், இந்தத் திருவிழாவை எப்போதும் மறக்கமுடியாது என மாணவர்கள் கோரஸாக தெரிவித்தனர்.
விதை கோட்டை
அறுவடை செய்த நெல்லை அடுத்த ஆண்டு விதைக்க ஏதுவாக நெல் விதைக் கோட்டை கட்டப்படுவது வழக்கம். அறுவடையானதும் 50 கிலோ நெல்லைக் தனியாக எடுத்து, சுத்தம் செய்து, வைக்கோல் பிரி கொண்டு பந்து போல் உருட்டிய பின் உள்ளே, நெல்லைக் கொட்டி மூடிவிடுவார்கள். பார்ப்பதற்கு உருண்டையாகப் பந்துபோல் இருக்கும். இந்தக் கோட்டை மீது சாணத்தை மெழுகி வைத்துவிடுவார்கள். ஓராண்டு கழித்து இந்த விதையை எடுத்து விதைத்தால் பக்குவப்பட்டு, அத்தனை விதைகளும் அமோகமாக முளைத்துவிடும். காலப்போக்கில் அழிந்துவரும் இந்தக் கோட்டை கட்டும் வழக்கம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.
நம்மாழ்வார் ஆவணப் படம்
நெல் திருவிழாவுக்கு முன்னோடியாகச் செயல்பட்ட இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது திருவருள் அறக்கட்டளை. திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் ஆவணப் படத்தை வெளியிட, நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாள் பெற்றுக்கொண்டார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
We want all district this function
ஆஹா அறுமையான செய்தி. வாழ்த்துக்கள்.