‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந்தைகளை வளர்க்கிறோம்!’

வெளிநாட்டு வேலையில் லட்சங்களில் சம்பாதித்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் அல்லது இந்தியாவிலேயே குறுகிய காலத்தில் பணக்காரராகிவிட வேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின் லட்சியமாக உள்ளது.

ஆனால், அகமதாபாத்தைச் சேர்ந்த பூர்வி வியாஸ் மாறுபட்டவர். ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் படித்தவர், முழு நேர விவசாயியாக அவதாரம் எடுத்துள்ளார். இளைய தலைமுறையினர், தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு வகையில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

முழு நேர விவசாயியாக மாறிய தருணம் பற்றி கூறும்போது, ‘‘ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மேலாண்மை படித்துவிட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். அந்தச் சமயத்தில் நிறைய மலைவாழ் மக்களைச் சந்தித்தேன். குறிப்பாக, மலைவாழ் பெண்கள் இயற்கையை அழிக்காமல், தங்களுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கையிலிருந்து எடுத்துக்கொள்வதைக் காண முடிந்தது. அந்தப் பெண்களுக்கு மலைப் பகுதியிலுள்ள தாவரங்கள், மூலிகைகள் பற்றி இருக்கும் இயற்கை அறிவு வியக்கவைத்தது. அங்குள்ள சிறார்களுக்கும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவமும் தெளிவான ஞானமும் இருக்கிறது. படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு, நெல் மரத்தில் விளையுமா… பூமிக்கு அடியில் விளையுமா என்று கேட்டாலே, சந்தேகத்தோடுதான் பதில் சொல்கிறோம். வயிற்றுக்கு உணவான நெல் எப்படி விளைகிறது என்பதுகூட தெரியாமல்தான் குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இந்த மாதிரியான மலைப் பயணங்கள் என் மனதில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது” எனக் குரல் நெகிழப் பேசுகிறார் பூர்வி.

‘‘என் பாட்டி, அம்மா இருவருமே வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முடிந்தவரை வீட்டுத் தோட்டத்திலேயே விளைவித்துக்கொள்வார்கள். மேலும், எங்களுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தார்கள்.

ஒருமுறை என் அம்மாவுடன் எங்கள் நிலத்துக்குச் சென்றிருந்தேன். அந்தச் சூழலும் இயற்கையும் எனக்குப் பிடித்துப்போய், அங்கேயே இருக்க வேண்டும் என மனம் ஏங்கியது. பணியைத் துறந்துவிட்டு முழு நேர விவசாயியாக முடிவெடுத்தேன். நகரத்திலேயே வளர்ந்த நான், திடீரென மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு விவசாயம் செய்தது எளிதான காரியமாக இல்லை.

Courtesy: பசுமை விகடன்

மார்டன் டிரஸ்ஸில் விவசாய வேலைகளைப் பார்க்கும் என்னைப் பலரும் கிண்டல் செய்தார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. இயற்கை விவசாயத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டு, அதில் பயணிக்க ஆரம்பித்தேன்.

 

எங்கள் நிலத்திலேயே மண்புழு உரத்தைத் தயாரித்து நிலத்துக்குப் பயன்படுத்தினேன். எருமை, பசு, ஆடு, கோழி மற்றும் நாய்களையும் வளர்த்தேன்.

பூர்வி வியாஸ்

தொடக்கத்தில் இயற்கை விவசாயத்தில் குறைவான வருமானமே வந்தது. தற்போது, நல்ல விளைச்சல் கிடைக்கிறது. என்னைப் பார்த்து சிரித்தவர்கள் இன்று வியப்பாகப் பார்க்கிறார்கள். எங்கள் கிராமத்தின் பெரும்பான்மையான பால் தேவையை எங்கள் பண்ணையே பூர்த்திசெய்கிறது. விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதற்கு நானே உதாரணமாகி நின்றது பெருமிதமாக இருக்கிறது. நமக்கான உணவை நாமே பூர்த்திசெய்துகொள்ள வேண்டும்.

இது நிச்சயம் இயற்கை விவசாயத்தில் சாதிக்க நம்மால் முடியும் என்கிற விஷயத்தை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று நினைத்தேன். கிராமப்புறப் பெண்களைச் சந்தித்து வீட்டிலேயே காய்கறித் தோட்டம் போடுவது, இருக்கும் நிலங்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறேன். வெகு விரைவில் இளைய தலைமுறையினர் தனக்கான உணவை உற்பத்தி செய்யும் அளவுக்குத் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுவேன்” என்கிற பூர்வி வியாஸ் குரலில் தன்னம்பிக்கைச் சுடர்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *