நெல் சாகுபடியில் இயற்கை விவசாயத்தில் சாதனை

பலருடைய எதிர்ப்பை மீறி இயற்கைவழி வேளாண்மையில் புதிய வழிமுறையைப் பின்பற்றி நெல் பயிரிட்ட முன்னோடி பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன்.

பழைய கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதி உடுமலைப்பேட்டை வட்டாரம். பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டம் மூலம் பயன்பெறும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் பெரும்பாலும் நெல் சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாகக் கால்வாய் நீர் பெறும் இடங்களில் நெல் சாகுபடி நடக்கும்.

பசுமைப் புரட்சியின் பெரும் வீச்சுக்குப் பின்னர் வேதி உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இங்கே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக வேளாண்மை கட்டுப்படியாகாத சூழல் ஏற்பட்டது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் இயற்கைவழி வேளாண்மைக்கு மாறிய முன்னோடிகளில் ஒருவர், பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன். அவர் தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்துவருகிறார்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

முதலில் அவருடைய முயற்சியை உறவினர்களே எதிர்த்தார்கள். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. நஞ்சான பூச்சிக்கொல்லியைக்கூடத் தெளிக்கத் தயாராக இருந்த அவர்கள், சாணத்தையும் கோமயத்தையும் தொட வெட்கப்பட்டனர்.

ராதாகிருஷ்ணனே நேரடியாகக் களத்தில் இறங்கினார். சத்தியமங்கலம் சுந்தரராமன் அவருக்கு வழிகாட்டினார். சுந்தரராமனுடைய மகன் ராமகிருஷ்ணன் அவருடன் கூடவே இருந்து, இயற்கை ஊட்டக் கரைசல்கள் தயாரிப்பதற்குக் கற்றுக்கொடுத்தார்.

இயற்கை ஊட்டக் கரைசல்

முதலில் இரண்டு ஏக்கரில் மட்டும் இயற்கைமுறை நெல் சாகுபடிக்கு அவர் மாறினார். நிலத்தைத் தயாரித்த பின்னர் ஆறு டன் தொழுவுரம் கொடுத்தார். அதில் 30 கிலோ சணப்பை எனப்படும் பசுந்தாள் உரப்பயிரை விதைத்து வளர்த்தார். சரியாக 45 நாட்கள் கழித்து, அதை நன்கு உழவு செய்து தொழி தயாரித்தார். அதற்கு முன்பாக நாற்றங்கால் தயாரிக்கும் பணியைச் செய்துகொண்டார். அதற்காக ஒரு வண்டி தொழுவுரம் கொடுத்தார். அதன் பின்னர் அமுதக்கரைசல், பஞ்சகவ்யம் ஆகிய கரைசல்களை இரண்டு முறை தெளித்தார். சரியாக 27-ம் நாள் நாற்றைப் பிடுங்கி ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்தார்.

சீரான பரவல்

நீர் பாய்ச்சும்போது அதில் அமுதக் கரைசலைச் சேர்த்துக் கொடுத்தார். அதாவது நெல் அறுவடை முடியும்வரையில் மூன்று முறை 200 லிட்டர் என்ற அளவில் அமுதக் கரைசலைக் கொடுத்துவந்தார். தொல்லுயிரி எனப்படும் கரைசலையும், பஞ்சகவ்யத்தையும் இரண்டு முறை கொடுத்தார்.

கரைசலைச் சேர்ப்பதற்காக இரண்டு பீப்பாய்களில் சிறு குழாய் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் வாய்க்காலில் பாயும் நீருடன் செலுத்திவிடுகிறார். இதனால் செலவு குறைகிறது. சத்துகளும் வயல் முழுவதும் சீராகப் பரவுகின்றன.

ஆராய்ச்சித் திடல்

இவர்களுடைய பயிர்கள் இளம்பச்சை நிறத்துடன் காணப்படுகின்றன. பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இல்லை. இந்த முறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக இயற்கை வேளாண்மையைச் செய்வதோடு, மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார். நெல்லை அரிசியாக்கியும் விற்பனை செய்கிறார். அவரது வயல், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திடலாகவும் உள்ளது.

இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள்களைச் சுஸ்லான் பவுண்டேஷன் என்ற அமைப்புடன் சேர்ந்து உற்பத்தி செய்து, உழவர்களுக்குக் கொடுத்துவருகிறார். அவருடைய நண்பர்களுடன் இணைந்து ‘அமராவதி உழவர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பையும் நடத்திவருகிறார்.

ராதாகிருஷ்ணன் தொடர்புக்கு: 09965972332

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *